
திருநெல்வேலி சீமையியின் அடையாளங்களுள் ஒன்று வில்லிசை.இந்த வில்லிசைக்கு மிக பிரபலமான செவல்குளம் தங்கையாவுக்கு அடுத்து பிரபலமாக பேசப்பட்ட வில்லிசை பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் காலமானார்
பிரபல “வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம், வயது முதிர்வினால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார். சுப்பு ஆறுமுகம் 1928 ம் வருடம் திருநெல்வேலி மாவட்டம் சத்திர புதுக்குளத்தில் பிறந்தார். சுப்பு ஆறுமுகம் தனது வில்லுப் பாட்டின் வாயிலாக சுதந்திர போராட்ட காலத்தில் மக்களிடையே ஆன்மிகம், தேச பக்தியை வளர்த்து வந்தார். கடந்த 40 வருடங்களாக வில்லுப்பாட்டு கச்சேரியினை நடத்தி வந்தார். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் தன் வில்லுப்பாட்டினால் மக்களை பெரிதும் கவர்ந்தவர். வில்லுப் பாட்டுக் கலை தமிழகத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களால் பிரபலம் அடைந்தது. அவருக்குப் பிறகு கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களால் உலகளவில் பரவியது.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இவரின் குரு வித்துவான் ஆ.க. நவநீத கிருஷ்ண பிள்ளை என்பவர் ஆவார். இவர் திருநெல்வேலி மந்திர மூர்த்தி உயர்நிலைப் பள்ளியிலும், பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் பள்ளியிலும் படித்தார். அதன் பிறகு “மதுரை தமிழ்ச் சங்கம்” என்ற அமைப்பில் மூன்று ஆண்டுகள் படித்துத் தமிழ் மொழியில் புலமை பெற்று விளங்கினார். சுப்பு ஆறுமுகம் தனது பதினாறாம் வயதில் “குமரன் பாட்டு” என்ற நூலை எழுதியிருக்கிறார்.
திரைப்பட நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் கவிஞரை வில்லிசை, திரைப்படங்கள், திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுத சென்னைக்கு அழைத்து வந்தார். காந்திமகான் கதையை, கலை வாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 1948-ல் கவிஞர் சுப்பு அவர்களைக் கொண்டு எழுதச் சொல்லி சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாக வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை நடத்தி வந்தார்.
1960ஆம் வருடம் இவரின் வில்லிசை நிகழ்ச்சி “கருணைக்கடல் காஞ்சி காமாட்சி” என்ற தலைப்பில் அரங்கேறியது. “காந்தி வந்தார்” என்ற வில்லிசையை சென்னை வானொலியில் பாடினார். காந்திமகான் கதை கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களைப் புகழ் ஏணியின் உயரத்துக்குக் கொண்டு சென்றது. கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் உதவியால் சென்னையில் தங்கி கல்கி எழுதிய காந்தியின் சுயசரிதையை முதன் முதலாக வில்லுப்பாட்டாக பாடினார். கலைவாணர் அவர்களின் மறைவிற்குப் பின்னர் கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களே நாடெங்கும் முதல் பணியாக வில்லுப்பாட்டு நிகழ்ச்சியினைத் தொடர்ந்து நடத்தி வந்தார்.




