
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,932 சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை கூறியுள்ளது. சிறப்பு பேருந்து இயக்கப்படுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. வரும் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சென்னையில் இருந்து 16,112 சிறப்பு பேரூந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. பிற ஊர்களில் இருந்து 5 நாட்களில் மொத்தம் 23,193 பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. வரும் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சுமார் 5.37 லட்சம் பயணிகள் சிறப்பு பேருந்துகள் பயணிப்பாளர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு மொத்தம் 10,749 பேருந்துகளை இயக்க திட்டம், வெளியூர்களில் இருந்து 6,183 பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாளில் வருகிறது. 14-ந்தேதி (சனிக்கிழமை) போகிப் பண்டிகை. மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் 16–ம் தேதி (திங்கட்கிழமை) கரிநாள் மற்றும் உழவர் திருநாள் (செவ்வாய்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தை பொங்கல் தினம் அரசு விடுமுறை நாளில் வந்ததால் தொடர் விடுமுறை குறைந்துள்ளது.
பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்லும் மக்கள் 13-ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் பயணத்தை தொடர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் வெளியூர் பயணத்திற்கு ரெயிலில் 4 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்துவிட்டனர். வழக்கமான ரெயில்கள் அனைத்தும் நிரம்பிய நிலையில் அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருகிறது.
அரசு பஸ்களில் கடந்த மாதம் 12-ந் தேதி முதல் முன்பதிவு தொடங்கியது. தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்களில் இடங்கள் நிரம்பிவிட்டது. 13, 14 ஆகிய தேதிகளில் பெரும்பாலான வழித்தடங்களில் இயக்கக்கூடிய விரைவு பஸ்களில் இடங்கள் இல்லாததால் பிற போக்குவரத்து கழக பஸ்களுக்கு முன்பதிவு தொடங்கி உள்ளது. பஸ், ரெயில்களில் இடங்கள் நிரம்பியதால் பயணத்தை 12-ம் தேதிக்கு (வியாழக்கிழமை) பலர் மாற்றி வருகிறார்கள். சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்களுக்கு தற்போது 12-ம் தேதிக்கு முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மக்களின் வசதிக்காக கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் (சானட்டோரியம்), அண்ணாநகர் (மேற்கு), கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே அமைக்கப்பட்டுள்ள மாநில தேர்தல் ஆணையம் பேருந்து நிலையத்தில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று தெரிவித்துள்ளனர்





