
தமிழக கேரளா பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்று இயங்கும் எர்ணாகுளம்- வேளாங்கண்ணி -எர்ணாகுளம் சிறப்பு ரயில் கடந்த சனிக்கிழமை யுடன் முடிந்த நிலையில் தற்போது ஜனவரி இறுதிவரை நீடிக்கப்பட்டுள்ளது .இதற்கான முன் பதிவு இன்று துவங்குகிறது.பல ஆண்டுகளாக சிறப்பு ரயிலாக இயங்கும் இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க தமிழக கேரள பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கொல்லம், செங்கோட்டை ,ராஜபாளையம் விருதுநகர், காரைக்குடி வழியாக வேளாங்கண்ணிக்கு வாரந்தோறும் சனிக்கிழமை புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை சென்றடையும் வகையிலும், வேளாங்கண்ணியில் இருந்து இதே வழித்தடத்தில் எர்ணாகுளத்திற்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு எர்ணாகுளத்திற்கு திங்கள் கிழமை சென்றடையும் வகையில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது .
இந்த சிறப்பு ரயில் கடந்த சனிக்கிழமை உடன் இறுதி பயணத்தை நிறைவு செய்தது பல்வேறு தரப்பினரும் இந்த ரயிலை சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் வர்த்தகர்கள் மாணவர்கள் நலன் கருதி தினசரி ரயிலாக இயக்க வலியுறுத்தி வந்தனர் .
இந்த நிலையில் தென்னக ரயில்வே இந்த ரயிலை ஜனவரி மாதம் முழுவதும் நீடித்து இதை வழித்தடத்தில் அதே நேரத்தில் இயக்குவதாக அறிவித்துள்ளது. இருப்பினும் இந்த ரயில் விரைவில் தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்பது கேரளா தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஏற்கனவே ரயில்வே வாரியம் இந்த ரயிலை வாரம் இரு நாள் இயக்க அனுமதி கொடுத்தும் இதுவரை தென்னக ரயில்வே இயக்காமல் சிறப்புரயிலாகவே இயக்கி வருகிறது என்பதும் பலரின் குற்றச்சாட்டாக உள்ளது.
மேலும் குருவாயூரிலிருந்து கொல்லம் வழியாக புனலூர் வரை வந்து மீண்டும் குருவாயூர் செல்லும் ரயிலை செங்கோட்டை ராஜபாளையம் விருதுநகர் வழியாக மதுரை வரை நீடித்து இயக்கவும் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.மேலும் தாம்பரம் எர்ணாக்குளம் -தாம்பரம் இடையே கொல்லம் ராஜபாளையம் காரைக்குடி வழியாக செல்லும் சிறப்பு ரயிலை தொடர்ந்து தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்பது கேரளா தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.





