அருப்புக்கோட்டையில் பாஜகவினரின் தேசியக்கொடியுடன் இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி மறுத்த போலீசார்; போலீசார் உடன் வாக்குவாதம் செய்து கலைந்து செல்வதாக கூறி டிமிக்கி கொடுத்து விட்டு வேறு இடத்திற்கு சென்று அங்கிருந்து திட்டமிட்டபடி தேசியக்கொடியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பாஜகவினரை விரட்டிச் சென்று குண்டுகட்டாக கைது செய்த போலீசார்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் புளியம்பட்டி பகுதியில் இருந்து வெள்ளக்கோட்டை பகுதி வரை தேசிய கொடியுடன் இருசக்கர வாகன பேரணி செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த இருசக்கர வாகன பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.
எனினும் பாஜகவினர் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் புளியம்பட்டி பகுதியில் தேசியக்கொடி மற்றும் இருசக்கர வாகனத்துடன் கூடினர். இதனை அடுத்து டிஎஸ்பி காயத்ரி தலைமையில், நகர் காவல் நிலைய ஆய்வாளர் செல்லப்பாண்டி, தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி, உள்ளிட்ட போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.
இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி கிடையாது எனவும் வேண்டுமென்றால், புளியம்பட்டியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் வரை நடந்து செல்லுங்கள் எனவும் போலீசார் கூறினர். அப்படி என்றால் புளியம்பட்டியில் இருந்து பாம்பே மெடிக்கல் வரை சுமார் 500 மீட்டர் தூரம் வரை நடந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என பாஜகவினர் டிஎஸ்பி காயத்ரியிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கு அனுமதி தர முடியாது எனவும், அப்படி செல்வதாக இருந்தால் கைது செய்வோம் எனவும் டிஎஸ்பி காயத்ரி கூறினார்.
இதனை அடுத்து தேசியக் கொடியுடன் கூட செல்ல முடியாத நிலை உள்ளதாக கூறி நாங்கள் பேரணியே, செல்லவில்லை நாங்கள் கலைந்து செல்கிறோம் என பாஜகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். பாஜகவினரும் அங்கிருந்து சென்று விட்டதாக போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த பாஜகவினர் அங்கிருந்து கலைந்து சென்று நேராக காந்தி மைதானம் பகுதியில் கூடி அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தேசிய கொடியுடன் முழக்கங்கள் எழுப்பியவாரே பஜார் வழியாக சென்றனர்.
மற்ற பாஜகவினரும் ஆங்காங்கே இணைந்த நிலையில் மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் தேசியக்கொடியுடன் இருசக்கர வாகன பேரணியாக பாஜகவினர் சிவன் கோவில் சந்திப்பு, முருகன் கோவில் சந்திப்பு, தங்கமயில் பேருந்து நிறுத்தம், பஜார், எம் எஸ் கார்னர், திருச்சுழி ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக கையில் தேசிய கொடியுடன் முழக்கங்கள் எழுப்பியவாறு வெள்ளக்கோட்டை பகுதியை வந்தடைந்தனர்.
பாஜகவினர் ஊர்வலம் செல்வதை எதிர்பாராத போலீசார் அவர்களை பின்னாடியே விரட்டிச் சென்று அவர்களும் வெள்ளக்கோட்டை பகுதியை வந்தடைந்தனர். ஆனால் பாஜகவினர் எதுவும் தெரியாது போல் அங்கு தேசியக்கொடி ஏற்ற முயற்சி செய்தனர். அப்போது அங்கு வந்த டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான போலீசார் உங்களை கைது செய்கிறோம் என கூறினார்.
ஆனால் நாங்கள் ஊர்வலமே செல்லவில்லையே இருசக்கர வாகனத்தில் அனைவரும் ஒன்றாக இங்கு வந்து தேசியக்கொடி ஏற்ற உள்ளோம் நீங்கள் ஊர்வலம் செல்லக்கூடாது என கூறினீர்கள். அதனால் நாங்கள் இங்கு வந்து விட்டோம் என கூலாக கூறினர். நாங்கள் வந்தது ஊர்வலமே இல்லை அனைவரும் தனித்தனியாக இருசக்கர வாகனத்தில் இங்கு வந்தோம் என கூறினர்.
ஆனால் இதை ஏற்க மறுத்த போலீசார் அங்கிருந்த பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், கிழக்கு மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல், மாவட்ட பொது செயலாளர் சீதாராமன், நகரத் தலைவர் முருகானந்தம், தெற்கு ஒன்றிய தலைவர் பூலோகராஜ், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் பிரித்திவிராஜ் மாவட்டத் துணைத் தலைவர் ராஜேஸ்வரி என 2 பெண்கள் உள்ளிட்ட 24 பாஜகவினரை குண்டு கட்டாக கைது செய்து வேனில் ஏற்றி சென்று தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து இருசக்கர வாகனத்தில் தேசியக் கொடியுடன் சென்ற பாஜகவினரை போலீசார் குண்டு கட்டாக கைது செய்த சம்பவம் அருப்புக்கோட்டையில் பரபரப்பு ஏற்படுத்தியது.
மொத்தமா 18 பேர்கள் தேசிய கொடியை
ஏந்தியபடி போனார்களாம். கைதாம். இதுதான் திராபை திராவிட மாடல் சட்ட ஒழுங்கு நிலையாம்