சென்னை : தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள், விஷமிகள் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அவர்களை மட்டும்தான் கைது செய்கிறோம்; பொதுமக்கள் யாரையும் கைது செய்யவில்லை” என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
திங்கள்கிழமை சட்ட மன்றத்தில் கேள்வி நேரம் முடிந்த பின் நடந்த விவாதத்தின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி கலவரம், போராட்டக் களம், சமூகவிரோதிகள் கலந்தது, பொதுச் சொத்துகளை நாசம் செய்தது என்பவை குறித்து பேசினார்.
ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமூக விரோதிகளோ விஷக் கிருமிகளோ அல்லது பயங்கரவாதிகளோ இல்லை. அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும். போலீசார் வீடு வீடாகச் சென்று சோதனையிடுவதை தடுக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். தொடர்ந்து, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராமசாமியும், இப்போராட்டம் தொடர்பாக ஆயிரக்கணக்கானோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவற்றை திரும்பப் பெற வேண்டும் என்று கோரினார்.
இந்தக் கோரிக்கைகள், பேச்சுகளுக்கு பதிலளிக்கும் வகையில், சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி கலவரத்தில் யாரெல்லாம் உருட்டுக்கட்டையால் அடித்தனர்; பெட்ரோல் குண்டு வீசி கார்களுக்கு தீ வைத்தனர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. பொதுமக்கள் தங்களுடைய உரிமைக்கு போராடுவதில் தவறு கிடையாது. இந்தியாவில் அதிக போராட்டம் நடைபெறும் மாநிலம் தமிழகம். அந்த அளவிற்கு அனுமதியும் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது.
தூத்துக்குடியில் வன்முறையில் ஈடுபட்டவர்களை மட்டுமே விஷமிகள் மற்றும் சமூக விரோதிகள் என்கிறோம். பொதுமக்களை அல்ல. வன்முறையாளர்களையும் சமூக விரோதிகளையும் எந்த அரசும் ஊக்கப்படுத்தக் கூடாது. எனவே வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்கின்றனர்.
தகுந்த ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே கைது செய்யப்படுகின்றனர். போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் யாரையும் கைது செய்யவில்லை. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விவரங்களை தாராளமாக அளிக்கலாம். தவறு செய்தவர்கள் மீது விசாரணை முடிந்த பின் நீதிபதி பரிந்துரையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்… என்று பேசினார்.
முன்னதாக, நடிகர் கமலஹாசன் உள்ளிட்டோர், தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமூகவிரோதிகள் என்றால் நானும் ஒரு சமூகவிரோதிதான் என்று கூறியிருந்தார். ஆனால், தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் எல்லோரையும் சமூக விரோதிகள் என்று எவரும் இதுவரை சொல்லவில்லை. போராட்டத்தில் சமூகவிரோதிகள் கலந்துவிட்டனர் என்றுதான் ரஜினி சொன்னார்.
ஆனால், கமல்ஹாசன் தானும் ஒரு சமூக விரோதிதான் என்று சொல்லிக் கொள்கிறார். போலீஸாரை தனிமைப் படுத்தி, கதறக் கதற கட்டையால் அடித்து, கல்லெறிந்து, தாக்குதல் தொடுத்தவர்கள், பொதுச் சொத்துகளை நாசப் படுத்தியவர்கள், ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பை தீவைத்து எரித்தவர்கள், ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்து அரசுக் கோப்புகளை தீயிட்டுக் கொளுத்தியவர்கள், ஆட்சியரகத்தை தாக்கி நாசப் படுத்தியவர்கள் இவர்கள் தான் சமூக விரோதிகள் என்று தெளிவாகக் குற்றம் சாட்டப் படும் போது, கமல்ஹாசனும் இந்த சமூகவிரோதச் செயல்களைச் செய்தாரா என்ற கேள்வி எழுகிறது!




