ரமணா சினிமாவின் பாணியில், இறந்து மூன்று நாட்கள் ஆன உடலுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி, இரண்டரை லட்ச ரூபாய் பணம் கேட்ட கேஜி தனியார் மருத்துவமனையின் செயலை, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் ஈசனூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர் (வயது 55) அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர். வயிற்று வலியால் துடித்த சேகர், நாகை.,யில் உள்ள டாக்டர் சந்திரசேகரிடம் தன் உடல் நலம் குறித்துக் கூறி சிகிச்சைக்கு அணுகியுள்ளார்.
அவரை பரிசோதித்த டாக்டர் சந்திரசேகர், குடல் இறங்கி உள்ளதாகக் கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளார். பின்னர் திடீரென மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் டாக்டர் செந்தில்குமார் என்பவர் நடத்தும் கே.ஜி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அவரை அங்கே அனுப்பியுள்ளார்.
கடந்த 11ஆம் தேதி தஞ்சை கேஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேகருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப் பட்டு வந்துள்ளது. சிகிச்சை செலவாக ரூ. ஐந்தரை லட்சத்தை அவரது குடும்பத்தினர் செலுத்தியுள்ளனர். இருப்பினும் உடல் நலம் தேறாமல் அவர் அவதிப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்தால் பூரணமாக குணமடைந்து விடுவார் என வியாழக்கிழமை மதியம் கேஜி மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
சேகர் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு 17 நாட்கள் ஆன நிலையில், லட்சக்கணக்கில் பணம் செலவு செய்தும் குணமாகாத நிலையில் சேகர் குடும்பத்தினர் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். தங்களிடம் பணம் இல்லை என்றும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யுமாறும் சேகரின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
இருப்பினும் சேகரை உடனடியாக டிஸ்சார்ஜ் செய்து அனுப்பாமல், இழுத்தடித்த கேஜி மருத்துவமனை நிர்வாகம், வெள்ளிக்கிழமை பிற்பகல் மருத்துவ உபகரணங்களுடன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பியது.
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், சேகரை பரிசோதித்த போது அதிர்ந்து போயினர். சேகர் உயிரிழந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தது தெரியவந்தது. இதனால்தான் கேஜி மருத்துவமனை நிர்வாகம் உடனே டிஸ்சார்ஜ் செய்யாமல் காலம் தாழ்த்தி அனுப்பி வைத்த ரகசியம் தெரியவந்தது.
அரசு மருத்துவர்கள் கூறியதைக் கேட்டு அதிர்ந்து போன சேகரின் குடும்பத்தினர், உடனே கேஜி மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்டனர். ரமணா படத்தில் வருவது போல், இறந்த உடலுக்கு சிகிச்சை அளித்து வந்ததாக புகார் கூறினர். ஆனால், கேஜி., மருத்துவமனையை நடத்தி வரும் டாக்டர் செந்தில்குமாரின் சக மருத்துவர்களோ, உரிய பதில் ஏதும் கூறாமல் திருப்பி அனுப்பியுள்ளானராம்! இதை அடுத்து கேஜி மருத்துவமனை செய்த பெரும் தவறையும் மோசடியையும் சேகரின் மகன் சுபாஷ் தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
ரமணா பட பாணியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் தஞ்சையை மட்டுமல்ல, தமிழகத்தையே அதிர வைத்துள்ளது.




