19 ஆண்டுகளுக்கு பிறகு கொல்லம்- சென்னை எழும்பூர் இடையே தினசரி ரயில் சேவை இன்று தொடங்கியது. செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு இன்று மாலை வந்த இந்த ரயிலுக்கு பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை – கொல்லம் இடையே பாரம்பரிய ரயில் சேவையான கொல்லம் மெயில் கடந்த 1904-ஆம் ஆண்டு முதல் இயங்கியது. இதன் பின் மீட்டர் கேஜ் பாதையான இதனை அகலப்பாதையாக்கும் பணிக்காக கடந்த 2000-ஆம் ஆண்டில் இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது.அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு, 19 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சென்னை எழும்பூர்-கொல்லம் இடையே தினசரி ரயில் சேவை தொடங்கியுள்ளது.
இந்த ரயில் சேவையை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தருமபுரியில் இருந்து காணொளிக் காட்சி மூலமாகத் தொடங்கி வைத்தார். இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து நேற்று மாலை 4.45 மணிக்கு புறப்பட்டது.இந்த ரயிலில் இன்று அதிகாலை 5.10க்கு செங்கோட்டை வந்தது. பின்னர் 15 நிமிடம் தாமதமாக புறப்பட்டு காலை 9 மணிக்கு கொல்லம் சென்றடைந்தது.
இதே போல கொல்லத்தில் முற்பகல் 11.45 மணிக்கு புறப்பட்டது.பயணிகள் உற்சாகமாக பயணத்தை மேற்கொண்டனர். இந்த ரயில் மாலை 3.10 மணிக்கு செங்கோட்டை ரயில் நிலையம் வந்தடைந்தது. இந்த ரயிலுக்கு செங்கோட்டை வர்த்தக சங்கத் தலைவர் ரஹீம் மற்றும் பயணிகள் நலச் சங்கத்தை சேர்ந்தவர்கள் பலர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதனை தொடர்ந்து, அவர்கள் ரயில் டிரைவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ரயில் பயணிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.
இந்த ரெயிலில் மூன்றடுக்கு ஏ.சி. வசதி பெட்டிகள் 2, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் 8, 2 பொது பெட்டிகள்,2 கார்டு பெட்டிகளோடு மாற்றுத்திறனாளி பெட்டிகள் என மொத்தம் 14 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே செங்கோட்டையில் இருந்து தினசரி சென்னைக்கு பொதிகை எக்ஸ் பிரஸ், மற்றும் வாரத்தில் 3 நாட்கள் சிலம்பு எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் சென்னைக்கு சென்று வருகின்றன.தற்போது புதியதாக கூடுதலாக இந்த ரயில் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த ரயில் செங்கோட்டையிலிருந்து சென்னை புறப்பட்டுச் சென்றது. சென்னை- கொல்லம் இரு மார்க்கமாக இயக்கப்படும் இந்த ரயில் தமிழக-கேரள மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பேருதவியாக இருக்கும் என பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


