
ஸோஹோ Zoho – நிறுவனம் அறிமுகப்படுத்திய மெசேஜிங் ஆப் – அரட்டை – என்ற பிராண்ட் பெயர் இப்போது நிலைபெறத் தொடங்கிவிட்டது. இதென்ன பெயர் என்று பாரதத்தின் பிற மாநில மக்கள் சிலர் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் பழகப் பழக ஒரு சொல் பலருடைய மனத்திலும் நின்று விடும் என்பதற்கு ஏற்ப ஒரு தமிழ்ச் சொல் இன்று பல மொழிகளில் அந்த அந்த உள்ளூர் மொழிகளின் அர்த்தத்துடன் சென்று அடைந்திருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி, சுதேசி மயத்தை வலியுறுத்தி உள்ளூர் பொருள்களையே பயன்படுத்துங்கள் என்று கோரியிருந்தார். அதே நேரம் தொழிலதிபர் ஆனந்த் மஹேந்திரா தனது எக்ஸ் தள பக்கத்தில், நான் அரட்டையை டவுன்லோட் செய்தேன் என்று பதிவிட்டார். அதனையொட்டி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தாமும் அரட்டையை பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டார். இந்நிலையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட சிலரும் உள்நாட்டில் தயாரான மென்பொருள்களையே பயன்படுத்துவதாகக் கூறி சோஹோ நிறுவனத்தின் மெயில் உள்ளிட்டவற்றை தாங்கள் பயன்படுத்துவதாக தெரிவித்தனர்.
இதன் பின்னணியில் அமெரிக்காவின் அண்மைக்கால வர்த்தகப் போரும், அமெரிக்க அதிபர் டிரம்பின் பேச்சும் இருந்தது. இந்தியாவை வீழ்ந்த பொருளாதாரம் என்று அவர் கருத்துரைத்ததும், இந்தியா மீது 50 சத வரி விதித்ததுடன், அதற்குக் காரணமாக உக்ரைன் போர் நீடிப்பதற்கு, இந்தியாதான் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி அதன் பொருளாதாரத்துக்கு உதவுகிறது என்றும் குறிப்பிட்டவை, இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்தியாவில் அமெரிக்கப் பொருள்களைப் புறக்கணியுங்கள் என்ற சுதேசிய கோஷம் மக்களிடம் எழுந்தது.
இந்நிலையில் அது மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள சமூகத் தளம், மென்பொருள்களிலும் எதிரொலித்தது. வேறு மாற்று இல்லாத சூழலில் பேஸ்புக், யுடியூப் போன்றவற்றை பயன்படுத்தி வரும் இந்தியர்கள், தங்களது அன்றாட பயன்பாட்டு மெசேஜிங் ஆப் வாட்ஸப்புக்கு மாற்றாக அரட்டை எனும் செயலியை ஸோஹோ நிறுவனம் அறிமுகப் படுத்தியிருந்ததை அறிந்து, அதற்கு மாறத் தொடங்கினர். சுமார் 3 ஆண்டுகள் முன் தொடங்கப்பட்ட அரட்டை ஆப், 3 ஆயிரம் டவுன்லோட் என்ற நிலையில் இருந்து தினமும் மூன்று லட்சம் டவுன்லோட் எனும் அதிவேக தரவிறக்கத்துக்கு உள்ளாகி, இன்று ஒரு கோடி தரவிறக்கத்துக்கும் அதிகமாகச் சென்றிருக்கிறது.
அரட்டை செயலியில் வாட்ஸ் அப்பைக் காட்டிலும் மேலும் பல வசதிகள் இருப்பதால், அதன் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இது குறித்த தொழில்நுட்ப விவரங்களை பலரும் சமூகத் தளங்களில் பகிர்ந்து கொண்டு, அரட்டை செயலிக்கு மாறுமாறு விருப்பங்களைத் தெரிவித்தனர்.
இதனிடையே, அரட்டை செயலியை பிரதமர் மோடி தனது சமூகத் தளப் பக்கத்தில் குறிப்பிட்டு, அதை மேலும் பிரபலமாக்க வேண்டும் என்று சிலர் கருத்துகளை பதிவிட, அதற்கு ஸ்ரீதர் வேம்பு, இப்போதைக்கு வேண்டாம். நாங்களே இந்த அளவுக்கு எதிர்பார்க்கவில்லை. இன்னும் ஓரிரு மாதங்களில் நாங்கள் முழுமையாக அரட்டையைத் தயார் செய்து வெளியில் கொண்டு வர திட்டமிட்டிருந்தோம். அதற்குள் அது இப்படிப்பட்ட வரவேற்பைப் பெற்றிருக்கிறது – என்று குறிப்பிட்டார்.
மேலும், அரட்டை ஆப்புடன் ஸோஹோ பேமெண்ட்ஸ் எனும் பணம் செலுத்திப் பெறும் வசதியை விரைவில் இணைக்கவிருப்பதாகவும் மேலும் எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் எனும் தனிநபர் பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அரட்டை எனும் தமிழ்ச் சொல்லை உலகம் கற்கட்டுமே!
#அரட்டை #Arattai ஆப் ப்ளேஸ்டோரில் ஒரு கோடி தரவிறக்கத்துக்கும் மேல் சென்றிருக்கிறது. பாரதத்தில் மட்டுமல்ல, சிங்கப்பூர் மற்றும், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் தரவிறக்கம் செய்யப்பட்டதில் முதலிடத்தில் உள்ளது.
அப்படியே ப்ளேஸ்டோரில் அரட்டை செயலிக்கான கருத்துகளில் பார்த்தால், பலரும் இந்தப் பெயர் வேண்டாம். வேறு புரியும் வகையில் உலகளாவிய பெயரில் கொண்டு வருக என்று கருத்திட்டிருக்கிறார்கள்.
இன்று நாம் காணும் பல தொழில்நுட்பப் பெயர்கள், நிறுவனப் பெயர்கள் இங்க்ளீஷில் இருப்பதைப் பார்க்கிறோம். இது தமிழகத்தில் இருந்து உருவான ஒரு செயலியின் பெயர் என்பதால் தமிழில் இருந்தாலென்ன? ஒரு தமிழ்ச் சொல்லைக் கற்றுக் கொள்ளட்டுமே! இட்லி வடை ஆப்பம் எல்லாம் தமிழில் பெயர் இருக்கிறது என்பதால் உண்ணாமல் இருக்கிறார்களா? அவை எல்லாம் வாயில் நுழைந்து வயிற்றிலும் நுழையவில்லையா என்ன?! மத்திய அரசு திட்டங்களை எல்லாம் யோஜனா யோஜனா என யோஜனை செய்து பெயரிட்டுப் போடும்போது, அவற்றை நாம் ஏற்காமலா இருக்கிறோம்?! என்ற கருத்துகளும் உலா வந்தன.
பிரதமர் மோடி தமிழுக்கான பிரசாரகராக உலகம் முழுதும் திருக்குறள், பாரதியின் பாடல்களை எடுத்துச் செல்கிறாரே..! மேலும் ஒரு மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள் என்கிறாரே! ஒரு வார்த்தையைக் கற்று அதை பிரபலப் படுத்த முடியாதா என்ன?! வாட்ஸ் அப்? என்பதற்கும் மெசேஜிங் செயலுக்கும் என்ன நேரடித் தொடர்பு? அதை நாம் சரளமாகப் பாவிக்கவில்லையா!? அடிப்படித்தான் அரட்டை என்பதும்! என்ற விளக்கங்களும் பகிரப்பட்டன.
அரட்டை ஆப் குறித்த ஒரு சமூகத்தளப் பதிவு…
“அரட்டை” செயலியின் அம்சங்கள் மற்றும் அதை பயன்படுத்துவது எப்படி என்ற விவரங்கள்
அரட்டை.
இந்தியாவின் உள்நாட்டு மெசஞ்சர் செயலி – ஒரு விரிவான பார்வை
இந்தியா – வாட்ஸ்அப் போன்ற உலகளாவிய மெசஞ்சர் செயலிகளுக்குப் போட்டியாக, தமிழ்நாட்டில் “அரட்டை” என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்திய உள்நாட்டுச் செயலி பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. Zoho கார்ப்பரேஷனால் உருவாக்கப்பட்ட இந்தச் செயலி, பயனர்களின் தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளித்து, இந்திய பயனர்களுக்கென பிரத்யேக அம்சங்களைக் கொண்டுள்ளது. அரட்டையின் முக்கிய அம்சங்கள் மற்றும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய விரிவான வழிகாட்டி இதோ.
அரட்டையின் முக்கிய அம்சங்கள்.
ஒரு நவீன மெசஞ்சர் செயலியில் எதிர்பார்க்கப்படும் அனைத்து அடிப்படை வசதிகளுடன், சில தனித்துவமான அம்சங்களையும் அரட்டை கொண்டுள்ளது.
1. மெசேஜிங் மற்றும் அழைப்புகள்: பயனர்கள் தனிப்பட்ட மற்றும் குழு உரையாடல்களை மேற்கொள்ளலாம். இதில் டெக்ஸ்ட் மெசேஜ்கள், வாய்ஸ் நோட்ஸ், மற்றும் உயர்தர ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் அடங்கும். மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் மற்றும் தொடர்புகள் போன்ற பல்வேறு மீடியா கோப்புகளையும் பகிர முடியும்.
2. மேம்படுத்தப்பட்ட குழு அரட்டைகள் (Groups): அரட்டையில் 1000 உறுப்பினர்கள் வரை கொண்ட பெரிய குழுக்களை உருவாக்கலாம். இது பல செயலிகளை விட மிக அதிகம். பெரிய சமூகங்கள், நிறுவனங்கள் மற்றும் வணிகங்களுக்கு இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
3. சேனல்கள் (Channels): டெலிகிராம் செயலியைப் போலவே, அரட்டையிலும் “சேனல்கள்” அம்சம் உள்ளது. இதன் மூலம் ஒருவழித் தகவல்தொடர்பு மூலம் ஒரே நேரத்தில் பலருக்கு செய்திகளை அனுப்ப முடியும். செய்தி நிறுவனங்கள், உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் தங்கள் தகவல்களை சந்தாதாரர்களுக்கு பரப்புவதற்கு இது மிகவும் ஏற்றது.
4. ஒருங்கிணைந்த “மீட்டிங்ஸ்” (Meetings): அரட்டையின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று, செயலியிலேயே உள்ள “மீட்டிங்ஸ்” வசதி. இதன் மூலம் பயனர்கள் பல பங்கேற்பாளர்களுடன் வீடியோ கான்பரன்ஸ்களை திட்டமிடவும் நடத்தவும் முடியும். இதில் ஸ்கிரீன் ஷேரிங் மற்றும் ரெக்கார்டிங் போன்ற வசதிகளும் உள்ளன. இதனால், தனியாக ஒரு வீடியோ கான்பரன்சிங் செயலியின் தேவை இல்லை.
5. “பாக்கெட்” (Pocket) எனும் தனிப்பட்ட சேமிப்பு வசதி: “பாக்கெட்” என்ற தனித்துவமான அம்சத்தை அரட்டை கொண்டுள்ளது. இது செயலிக்குள் ஒரு தனிப்பட்ட கிளவுட் ஸ்டோரேஜ் போல செயல்படுகிறது. பயனர்கள் தங்களுக்கு முக்கியமான செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற தகவல்களை தங்கள் பாக்கெட்டில் சேமித்து வைத்து, பின்னர் எளிதாக மீட்டெடுக்கலாம்.
6. ஸ்டேட்டஸ் (Status): பயனர்கள் தங்கள் தொடர்புகளுடன் 24 மணிநேரம் மட்டுமே இருக்கக்கூடிய தற்காலிக அப்டேட்களை “ஸ்டேட்டஸ்” மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.
7. முழுமையான என்கிரிப்ஷன் (End-to-End Encryption): அரட்டை செயலி, பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து தனிப்பட்ட அரட்டைகள் மற்றும் அழைப்புகள் முழுமையாக என்கிரிப்ட் செய்யப்படுவதால், அனுப்புநர் மற்றும் பெறுநரைத் தவிர வேறு யாரும் அந்த உரையாடல்களைப் பார்க்கவோ கேட்கவோ முடியாது.
அரட்டையின் அம்சங்களை பயன்படுத்துவது எப்படி: ஒரு படிப்படியான வழிகாட்டி
அரட்டை செயலியைப் பதிவிறக்கம் செய்து அதன் அம்சங்களைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது.
தொடங்குவது எப்படி?
பதிவிறக்கம்: கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து “Arattai” செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
பதிவு: செயலியைத் திறந்து, உங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்யவும். சரிபார்ப்பதற்காக உங்களுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும்.
சுயவிவரம் (Profile): உங்கள் பெயர் மற்றும் சுயவிவரப் படத்தைச் சேர்த்து உங்கள் சுயவிவரத்தை அமைக்கவும்.
முக்கிய அம்சங்களைப் பயன்படுத்துதல்:
செய்தி அனுப்புதல்: ஒருவரின் உரையாடல் பக்கத்தைத் திறந்து, டெக்ஸ்ட் பாக்ஸில் உங்கள் செய்தியைத் தட்டச்சு செய்யவும். மைக்ரோஃபோன் ஐகானைத் தட்டிப் பிடிப்பதன் மூலம் வாய்ஸ் நோட் அனுப்பலாம். மீடியா கோப்புகளைப் பகிர, அட்டாச்மென்ட் ஐகானைத் தட்டி, தேவையான கோப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.
அழைப்புகளை மேற்கொள்ளுதல்: உரையாடல் பக்கத்தின் மேலே உள்ள போன் அல்லது வீடியோ ஐகானைத் தட்டுவதன் மூலம் முறையே ஆடியோ அல்லது வீடியோ அழைப்பை மேற்கொள்ளலாம்.
குழுவை உருவாக்குதல்:
“புதிய அரட்டை” ஐகானைத் தட்டவும்.
“புதிய குழு” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
குழுவில் சேர்க்க விரும்பும் தொடர்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.
குழுவிற்கு ஒரு பெயர் மற்றும் விருப்பப்பட்டால் ஒரு படத்தையும் வைக்கவும்.
“உருவாக்கு” (Create) என்பதைக் கிளிக் செய்யவும்.
சேனலை உருவாக்குதல்:
“சேனல்கள்” பகுதிக்குச் செல்லவும்.
,”சேனலை உருவாக்கு” (Create Channel) பொத்தானைத் தட்டவும்.
உங்கள் சேனலுக்கு ஒரு பெயர், விளக்கம் மற்றும் ஒரு படத்தைக் கொடுக்கவும்.
அதன் பிறகு உங்கள் சந்தாதாரர்களுக்கு செய்திகளை அனுப்பத் தொடங்கலாம்.
“மீட்டிங்ஸ்” அம்சத்தைப் பயன்படுத்துதல்:
“மீட்டிங்ஸ்” பகுதிக்குச் செல்லவும்.
உடனடி மீட்டிங்கைத் தொடங்க, “மீட்டிங்கைத் தொடங்கு” (Start a Meeting) என்பதைத் தட்டவும்.
எதிர்கால மீட்டிங்கைத் திட்டமிட, “மீட்டிங்கைத் திட்டமிடு” (Schedule a Meeting) என்பதைத் தட்டி, தலைப்பு, தேதி, நேரம் மற்றும் பங்கேற்பாளர்கள் போன்ற விவரங்களை நிரப்பவும்.
பங்கேற்பாளர்கள் சேர்வதற்காக மீட்டிங் இணைப்பை (link) நீங்கள் பகிரலாம்.
“பாக்கெட்” அம்சத்தைப் பயன்படுத்துதல்:
நீங்கள் சேமிக்க விரும்பும் எந்தவொரு செய்தி அல்லது மீடியாவையும் நீண்ட நேரம் அழுத்தவும்.
“பகிர்” (Forward) விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் தொடர்புப் பட்டியலிலிருந்து “எனது பாக்கெட்” (My Pocket) என்பதைத் தேர்ந்தெடுத்து அந்த உருப்படியைச் சேமிக்கவும்.
உங்கள் அரட்டைப் பட்டியலில் உள்ள “பாக்கெட்” உரையாடலைத் திறப்பதன் மூலம் நீங்கள் சேமித்த அனைத்தையும் அணுகலாம்.
ஸ்டேட்டஸ் அப்டேட் செய்தல்:
“ஸ்டேட்டஸ்” பகுதிக்குச் செல்லவும்.
“எனது ஸ்டேட்டஸில் சேர்” (Add to my status) பொத்தானைத் தட்டவும்.
நீங்கள் ஒரு டெக்ஸ்ட் ஸ்டேட்டஸை தட்டச்சு செய்யலாம் அல்லது உங்கள் கேலரியில் இருந்து புகைப்படம் அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கலாம்.
உங்கள் ஸ்டேட்டஸ் 24 மணி நேரத்திற்கு உங்கள் தொடர்புகளுக்குத் தெரியும்.
பயனர் நட்பு இடைமுகம் மற்றும் வலுவான அம்சங்களுடன், பாதுகாப்பான மற்றும் அம்சம் நிறைந்த மெசேஜிங் அனுபவத்தை விரும்பும் இந்திய பயனர்களுக்கு அரட்டை ஒரு சிறந்த தேர்வாக விளங்குகிறது.





