
உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் மனிதர்கள் அனைவரும் ஒன்றே! கடல் மட்டுமே மனிதர்களைப் பிரிக்கிறது. கடலே இல்லாவிட்டால் நாடுகள் என்ற சொல்லே ஏற்பட்டிருக்காதோ என்னவோ …?!
இந்தச் செய்தியைப் படித்தால் நீங்களும் இதுபோல் யோசிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.
அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் நகரில் வசிக்கும் மாக்ஸ் ரெடென்பர்க் (19) என்ற இளைஞன் 10 ஆண்டுகளுக்கு முன் கடலில் ஒரு பாட்டிலை வீசி எறிந்தான்.
தனக்கு ஆப்பிள், கடற்கரை, வானவியல் என்றால் மிகவும் பிடிக்கும் என்று ஒரு காகிதத்தில் எழுதி ஒரு பாட்டிலுக்குள் வைத்து கடலில் எறிந்தான். ஒரு வேளை அந்த பாட்டில் யாருக்காவது கிடைத்தால் தனக்கு தெரிவிக்கும்படி கூறி தன் முகவரியையும் அதில் எழுதி வைத்தான்.
அமெரிக்காவின் மாசாசூசெட்ஸில் உள்ள ராக்போர்ட் கடற்கரையில் 2010 ஆகஸ்ட் 21-ஆம் தேதி பாட்டிலை வீசி எறிந்தான். ஒன்பது ஆண்டுகள் கழித்து 2019 அக்டோபர் 10ம் தேதி அந்த பாட்டில் ருபோயின் என்ற மனிதருக்கு கிடைத்துள்ளது.
அதாவது ஒன்பது ஆண்டுகளில் அந்த பாட்டில் 6 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளது. பாட்டிலின் உள்ளே இருந்த செய்தியைப் படித்த ருபோயின்… மாக்ஸுக்கு பாட்டில் கிடைத்த விவரத்தை தெரிவித்தார்.
” ஹலோ…! உங்கள் பாட்டில் அக்டோபர் 10ஆம் தேதி தென் பிரான்ஸிலுள்ள ‘காண்டின் , மிமிஜான்’ இடையில் உள்ள ஒரு கடற்கரையில் எனக்குக் கிடைத்தது” என்று தெரிவித்தார்.
மனிதர்களின் இடையே உள்ள தொடர்பை இந்த பாட்டில் தனக்கு நினைவு படுத்தியதாக டுபோயின் உணர்ச்சிவசப்பட்டு கூறினார். மாக்ஸ் அந்த மெசேஜைப் படித்து பின் தன் கடந்த காலத்தை நினைவு படுத்திக் கொண்டு ஆனந்தத்தில் துள்ளினான்.
இதை அடுத்து, இந்த விவரங்களை தன் ட்விட்டரில் போஸ்ட் செய்தான். அவனது மலரும் நினைவுகளும் வித்தியாசமான முயற்சியும் பலரது பாராட்டுகளையும் பெற்றது.