
சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
67. ஏட்டுக்கல்வி!
ஸ்லோகம்:
புஸ்தகஸ்தா து யா வித்யா பரஹஸ்தேஷு யத்தனம் |
கார்யகாலே சமாயாதே ந ஸா வித்யா ந தத்தனம் ||
— சாணக்கிய நீதி
பொருள்:
புத்தகத்தில் இருக்கும் கல்வியும் பிறர் கையில் இருக்கும் செல்வமும் தேவையானபோது உதவாது. அப்படிப்பட்ட கல்வி கல்வியல்ல. செல்வம் செல்வமல்ல.
விளக்கம்:
விஞ்ஞானம் நூலில் இருந்தால் போதாது. தலையில் இருக்க வேண்டும். கற்ற கல்வியை நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் வீண் என்று கூறும் சுலோகம் இது.
இந்தியர்களுக்கு கீர்த்தி பெற்றுத் தந்த விஷயங்களில் ‘தாரணா சக்தி’ எனப்படும் நினைவில் நிறுத்தும் திறன் முதன்மையானது. இதன் முக்கியத்துவத்தை போதிக்கும் ஸ்லோகம் இது.
புத்தகங்கள் இல்லாத காலத்திலிருந்தே வேத விஞ்ஞானம் பல தலைமுறைகளாக அளிக்கப்பட்டு வருகிறது. வேத சம்ஹிதைகளை சரமாரியாக ஒப்புவிக்கும் அறிஞர்கள் வாழும் பூமி பாரத தேசம். சிறு வயது முதலே அப்யாசம் செய்தால் ஞாபக சக்தி வளரும்.
அறியாமையை விட புத்தகம் பார்த்து படிப்பது மேல். அவர்களை விட மனப்பாடம் செய்து ஒப்பிப்பது மேல். அவர்களை விட பொருள் புரிந்து கொண்ட அறிஞர்கள் மேல். அப்படிப்பட்ட அறிஞர்களை விட நடைமுறையில் கடைப்பிடிக்கும் சான்றோர் மேல் என்று மனு குறிப்பிடுகிறார்.
வெறும் ஏட்டுக்கல்வி போதாது. சரியான நேரத்தில் நினைவுக்கு வராத அறிவு, புத்தகத்தில் இருக்கும் கல்வி, பிறர் கையில் இருக்கும் நம் செல்வம் போன்றது. நம் பணம் பிறர் கையில் இருந்தால் என்ன பலன்? நம் தேவையை நிறைவேற்ற உதவாது அல்லவா?
ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட நூலை முழுவதும் மனப்பாடம் செய்வது என்பது முற்காலத்தில் இருந்த ஒரு பயிற்சி. அந்தப் படிப்பு முழுமை அடைந்த பின் விந்தையான தேர்வு வைப்பார்கள். அதற்கு ‘சலாக பரீக்ஷை’ என்று பெயர். புத்தகத்தில் ஊசி போன்ற ஒரு கருவியை நுழைப்பார்கள். அது எந்த பக்கம் வருகிறதோ அதில் உள்ள செய்தியை மாணவன் விவரிக்க வேண்டும். அதாவது புத்தகம் முழுவதும் மனப்பாடமாகத் தெரிந்திருக்க வேண்டும்.
கற்றுக் கொண்டதை நினைவுகூர்வது, பொருள் புரிந்து கொள்வது, கடைபிடிப்பது இவையே உண்மையான கல்வி. வெறும் புத்தகங்களை சேமிப்பது அல்ல!