
சுபாஷிதம்… ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
88. கௌரவம் அளிக்கும் ஐந்து குணங்கள்!
ஸ்லோகம்:
வித்தம் பந்துர்வய: கர்ம வித்யா பவதி பஞ்சமம் |
ஏதானி மான்யஸ்தானானி கரீயோ யத்யதுத்தரம் ||
– மனுஸ்மிருதி.
பொருள்:
மனிதனுக்கு கௌரவம் அளிக்கும் விஷயங்கள் ஐந்து. செல்வம், வம்ச பாரம்பரியம், வயது, நற்செயல், அறிவுத்திறன். இவை வரிசைக் கிரமத்தில் ஒன்றைவிட அடுத்தது உயர்ந்தது.
விளக்கம்:
ஒரு மனிதனுக்கு சமுதாயத்தில் உயர்ந்த மதிப்பான இடத்தை அளிக்கக் கூடியவை ஐந்து குணங்கள். இங்ஙனம் கௌரவம் பெறுவதற்கான காரணங்களில் கல்வி அறிவுக்கு முதலிடம் அளிக்கிறார் கவி.
கல்வி, நற்செயல்கள், வயது, சிறந்த வம்சத்தில் பிறப்பது, செல்வம்… இந்த ஐந்தில் எதன் மூலம் வரும் புகழ் நிலையானது?
மனிதனுக்கு செல்வத்தினால் சமூகத்தில் மதிப்பு கிடைப்பது போல் தோன்றும். அது நிலையற்றது. செல்வம் போனால் கௌரவமும் போய்விடும். செல்வம் இருந்தும் தானம் செய்யும் குணம் இல்லாவிட்டால் அது பயனற்றது.
உறவினர் என்பதால் நாம் ஒருவருக்கு அளிக்கும் மதிப்பு கூட நிலையற்றதே. நல்லுறவு விரிசல் கண்டால் அந்த கௌரவமும் போய்விடும். சிறந்த வம்சத்தில் பிறந்ததால் வரும் கௌரவம் கூட சாஸ்வதம் அல்ல. மனிதனின் நடத்தை சீர்கெட்டால் வம்ச கௌரவமும் பாழாகிவிடும். வயதினால் வரும் மதிப்பு கூட அதிக நாள் நிற்காது. முதிர்ந்த வயதில் நோய்கள் பாதித்தால் புத்தி பேதலித்து விட்டது என்று நினைப்பார்கள். முதியோர் பேச்சுக்கு மதிப்பிருக்காது.
மனிதன் செய்யும் நற்செயலால் கௌரவம் வருகிறது. அதனைச் சிறிது சிறிதாக சமுதாயம் மறந்துபோகும் வாய்ப்பும் இல்லாமல் இல்லை.
இனி, இன்றியமையாதது மனிதனின் கல்வி அறிவு, புத்தி கூர்மை, நுண்ணறிவு, ஞானம் ஆகிய வித்யையால் வரும் கௌரவம். இந்த கௌரவம் பிற அனைத்தையும் விட சிறப்பானது. நிலையானது. உறவுகள் மட்டுமல்ல உலகமே போற்றும். மீதி உள்ள நான்கு குணங்கள் இருந்த போதிலும் வித்யை இல்லாவிட்டால் உயர்வு கிட்டாது. அதனால் ஒவ்வொருவரும் கல்வி கற்ற அறிவாளனாக வேண்டும்.