
சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
95. பூவிதழ் போல் மென்மை… கல்போல் கடினம்!
ஸ்லோகம்:
சம்பத்சு மஹதாம் சித்தம் பவேதுத்பல கோமலம் !
ஆபத்சு ச மஹாசைல சிலாசங்காத கர்கசம் !!
– பர்த்ருஹரி (நீதி 56)
பொருள்:
பெருஞ்செல்வம் சேர்ந்த போது சான்றோர்கள் மனம் பூவிதழ் போல் மென்மையாக இருக்கும். (பிறர் துன்பம் கண்டு கருணையால் நெஞ்சில் ஈரம் கொண்டு உதவுவார்கள்). ஏதாவது ஆபத்து நேர்ந்தால் தைரியத்தோடு மலைபோல் திடமாக நின்று பொறுமையோடு அந்தத் துயரை தாங்கிக் கொள்வார்கள்.
விளக்கம்:
ஒரு மனிதன் துயர் வந்த போதும் செல்வம் சேர்ந்த போதும் எவ்வாறு நடந்து கொள்கிறான் என்பதைப் பொருத்து அவனுடைய நடத்தை, குணம் போன்றவற்றை கணக்கிட்டு விடலாம். மனிதனின் ஆளுமைக்கு இது ஒரு உரைகல்.
சான்றோர் துன்பத்திலும் இன்பத்திலும் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள்? நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை எடுத்து இயம்பும் பர்த்ருஹரி சுபாஷிதம் இது.
தன் செல்வத்தைப் பிறருக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று விரும்பி, அவர்களின் துயர் நீக்க முன்வருபவரே சான்றோர். அத்தகைய மென்மையான இயல்பு கொண்டவர் தமக்கு ஏதாவது துன்பம் நேரும் போது துவண்டு விடாமல் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்வர். அப்படிப்பட்ட மகனீயர்களே உலகை உய்விக்க கூடியவர்.
மிருதுவான தாமரை, சேறில் இருந்து மேலெழுகிறது… மலர்கிறது… அனைவருக்கும் ஆனந்தத்தைப் பகிர்கிறது. தேன் வண்டுகளுக்கு அடைக்கலம் அளிக்கிறது… உணவளிக்கிறது.
எத்தகைய புயல் வீசினாலும் மலை கலங்காமல் அசையாமல் நிற்கும். அதுபோன்றவர்கள் மகனீயர்கள். விடுதலைப் போரில் பங்கேற்ற பிரகாசம் பந்துலு போன்ற தலைவர்கள் இந்த சுலோகத்துக்கு உதாரணமாக நின்றார்கள்.