
உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட அதிவேக வந்தே பாரத் ரயில்கள், தற்போதுள்ள நீலம் மற்றும் வெள்ளை நிறங்களுக்குப் பதிலாக, முன்புறத்தில் ஆரஞ்சு, சாம்பல் மற்றும் வெள்ளை நிறங்களின் கலவையுடன் புதிய தோற்றத்தில் வரவுள்ளன.
பயணிகள் மற்றும் பணியாளர்களின் கருத்துக்களைப் பெற்ற பிறகு, வந்தே பாரத் ரயில்களின் சீரமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. இதில், வண்ண வடிவ மாற்றம், இருக்கைகளுக்கு சிறந்த குஷன், முன்பை விட மொபைல் சார்ஜிங் பாயிண்ட்டுகளை எளிதாக அணுகுதல் மற்றும் கால் நீட்டிக் கொள்ள, ஓய்வாக இருக்க நீட்டிக்கப்பட்ட அமைப்பு உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட அம்சங்களும் அடங்கும்.
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சனிக்கிழமை (ஜூலை 8) சென்னையில் உள்ள ஐசிஎஃப் எனப்படும் இன்டெக்ரல் கோச் பேக்டரிக்கு வருகை தந்து, ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் பெட்டிகள், புதிய தோற்றப்பொலிவுடன் கூடிய ரயில் பெட்டிகளை ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போது, வந்தே பாரத் விரைவு வண்டியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாடுகளைக் கண்டு மகிழ்ச்சியடைவதாக அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டார். அடுத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் தயாரிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ள சுமார் 25 பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு அம்சங்களை ஆய்வு செய்ததாக அவர் மேலும் கூறினார்.
இருக்கை சாய்வுக் கோணம் அதிகரிப்பு, தண்ணீர் மேலே தெறிக்காமல் இருக்க ஆழம் கொண்ட வாஷ் பேசின், கழிப்பறைகளில் சிறந்த வெளிச்சம், டிரைவிங் டிரெய்லர் கோச்களில் பார்வையற்ற பயணிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிகளுக்கு ஃபிக்சிங் பாயிண்ட்களை வழங்குதல் ஆகிய 25 மாற்றங்கள் ஐசிஎஃப்.,ஃபில் மேற்கொள்ளப் படுகின்றன.
படிப்பதற்கான விளக்கு தொடுதிரை (ரீடிங் லேம்ப் டச் – ரெசிஸ்டில் இருந்து கெபாசிட்டிவ் டச் வரை) எளிதாகப் பயன்படுத்த, வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் சிறந்த ரோலர் பிளைண்ட் ஃபேப்ரிக் மற்றும் ஆண்டி-க்ளைம்பிங் சாதனம் ஆகியவை மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பிற்காக செய்யப்படுகின்றன.

பயணிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளை இந்திய ரயில்வே மேற்கொண்டு வருவதாக வைஷ்ணவ் தெரிவித்தார்.
இந்த உள்ளீடுகள், பயணிகளின் பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்திற்காக பெட்டிகளை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது. வந்தே பாரத் ஸ்லீப்பர்-வெர்ஷன் மற்றும் வந்தே மெட்ரோ ரயில் பெட்டிகளின் தயாரிப்பு செயல்முறை மிகவும் நல்ல நிலையில் உள்ளது, என்றார் வைஷணவ்.
கீழ்ப் பகுதி பயணிகளின் வசதியான மற்றும் பாதுகாப்பான பயணத்தை பூர்த்தி செய்யும் வகையில், முன்பதிவு இல்லாத மற்றும் பொது வகுப்பு பயணிகளுக்கு ஏற்ற வகையில் மேம்பட்ட அம்சங்களுடன் கூடிய பெட்டிகளை தயாரிக்கும் பணியை ரயில்வே மேற்கொண்டு வருகிறது. அனைத்து பயணிகளுக்கும் நல்ல தரமான ரயில்கள் கிடைப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்றார் மத்திய ரயில்வே அமைச்சர் வைஷ்ணவ்.
இதனிடையே, அமைச்சர் வைஷ்ணவ் ஐசிஎஃப்.,பில் ரயில் பெட்டிகளை பார்வையிடும் புகைப்படங்கள் சமூக தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. அதில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு காவி நிறத்தில் வண்ணம் கொடுத்திருப்பதாக சிலர் சர்ச்சையை ஏற்படுத்தினர். ஆனால் வெள்ளை நிறத்தில் இருக்கும் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் விரைவில் அழுகடைவதால் அதை சமாளிக்கும் வகையில் ஆரஞ்சு மற்றும் கிரே கலர்களில் வண்ணம் பூசி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த வகையில் ஆரஞ்சு வண்ணத்தில் அசத்தலாக ஓடப்போகிறது வந்தே பாரத் ரயில்கள்.