
சென்ற வாரம் ஒரு நாள் டிவியை ஆன் பண்ணி விட்டு அடுக்களைக்குள் சென்றேன். ஏதோ ஒரு சானலில் ஒடிக் கொண்டிருந்த சீரியலில் இருந்து அடுக்களை வரை வந்து காதில் விழுந்த வசனம்.
” நல்லா கேட்டுக்க. அவ தேச்சு குளிக்கற மஞ்சப் பொடியில பாஸ்பரஸ் கலந்து வைக்கப் போறேன். அவளுக்கு முடிவு நெருங்கிடுச்சு”
ஓடி வந்து டிவியை அணைத்தேன். எந்தச் சானல் தெரியாது. என்ன சீரியல் தெரியாது. தெரிந்தவர் சொல்லவும் வேண்டாம்.
கொலை செய்வதற்கான வழிகளை பெண்களே சொல்லிக் கொடுப்பதாக கதைகள். நாட்டில் Ban பண்ண வேண்டிய முக்கியமான ஒன்று டிவி சீரியல்கள். அந்த நாளைய தூர்தர்ஷனின் 13 வாரக் கவிதையான தொடர்கள் நினைவுக்கு வருகிறது.
இப்போதெல்லாம் நேரம் கிடைத்தால் நான் பொதிகையும் மக்கள் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளும் பார்க்கிறேன். செய்திகளைக் கூடப் பொதிகையில் அல்லது DD நேஷனல் இப்படித்தான் பார்க்கிறேன். தமிழ்ச் சேனல் பக்கம் வந்தாலே தலை சுற்றுகிறது.
நாட்டில் முதலில் சென்சார் செய்யப்பட வேண்டியது டிவி நிகழ்ச்சிகளைத்தான். வன்முறைகள் அங்கேதான் அதிகம் கொட்டிக் கிடக்கிறது.
- எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம்



