
யானை வரும் முன்னே.. மணி ஓசை வரும் பின்னே… இப்படி யாராவது பழமொழி சொன்னால் என்ன நீங்கள் என்ன சொல்வீர்கள்! இதுதான் தமிழ் வளர்த்த லட்சணமா என்று கேட்க மாட்டீர்களா? அல்லது சரிதான், முன்னே பின்னே மாற்றிப் பேசினால் என்ன குறைந்துவிடப் போகிறது என்பீர்களா?
எப்படியும் இருக்கட்டும், முத்தமிழ் வித்தகர் என்றெல்லாம் பட்டப் பெயரைச் சூட்டிக்கொண்டிருக்கும் மு.கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின், இப்படித்தான் பழமொழியை மாற்றிச் சொன்னார். அதற்கு சமூக வலைத்தளங்களில் கிண்டலும் கேலியுமாக அமர்க்களப் படுகிறது.
பழமொழி சொன்னா அனுபவிக்கணும்; கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது என்று கமல் பாணியில் யாரேனும் சொன்னால், அதுதான் தமிழகத்தில் திராவிட ஆட்சியில் தமிழ் வளர்த்த நிலை என்று சொல்லிவிட்டுப் போய்விடலாம்!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எழுதிய “2ஜி அவிழும் உண்மைகள்” என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் திமுக., பொதுச் செயலாளர் அன்பழகன், செயல் தலைவர் ஸ்டாலின், இந்து ராம், கி.வீரமணி, வைரமுத்து, கனிமொழி, சுப. வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் ராஜா கைய வச்சா என்ற பாடல் வரியைக் கூறி மு.க.ஸ்டாலின் தனது பேச்சைத் தொடங்கினார்.
2ஜி வழக்கு குறித்து ஆ.ராசா எழுதிய நூல் வெளியிடப்படும் முன்னரே அந்த வழக்கில் விடுதலை கிடைத்து விட்டதாக ஸ்டாலின் தமது உரையில் குறிப்பிட்டார். 2ஜி புகார் எழுந்த போது ஆ.ராசாவை பதவி விலகச் சொல்லி அனைத்துத் தரப்பினரும் கூக்குரலிட்டதாகவும், தற்போது நிரவ் மோடி விவகாரம் உள்ளிட்ட ஊழல் புகார்கள் எழுந்துள்ள நிலையிலும் யாரும், யாரையும் பதவி விலகுமாறு கூறவில்லை என்றும் ஸ்டாலின் சாடினார்.
இப்படி நூல் வெளியிடப் படும் முன்னரே விடுதலை கிடைத்துவிட்டதாகக் கூறிய ஸ்டாலின், யானை வரும் முன்னே மணி ஓசை வரும் பின்னே என்று பழமொழியில் முன்னே பின்னே மாற்றிச் சொல்லி நகைப்பை ஏற்படுத்தினார். ஸ்டாலின் சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில், விடுதலை கிடைப்பதற்காக புத்தகம் எழுதி, அது வெளிவரும் முன் கீழ் நீதிமன்றம் விடுதலை அளித்தாலும், அடுத்து உயர் நீதிமன்றம் என செய்யப் போகிறது என்பது வருங்காலத்தில் தெரிந்துவிடும்!



