நாக பஞ்சமி அன்று பாம்புக்கு பால் வார்த்தால்…. ஆபத்தில் சிக்கினாற் போலத்தான் என்கிறார்கள் வனத்துறையினர்.!
பாம்புகளை பாலருந்தச் செய்வது குற்றம் என்றும் அவ்வாறு செய்பவர்கள் மேல் வழக்கு தொடுக்கப்படும் என்றும் தெலங்காணா வனப் பாதுகாப்புத் துறை முதன்மை அதிகாரி பிரசாந்த் குமார் எச்சரித்துள்ளார். நாக பஞ்சமியன்று பாம்புகளை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
ஹிந்து மதத்தில் நாகங்களைக் கூட தேவதைகளாக வணங்கும் பழக்கம் உள்ளது. ஒருபுறம் விஷ ஜந்துக்களாக அவற்றைப் பார்த்து பயந்தாலும், மறுபுறம் நாக தேவதையாக வணங்கி பூஜை செய்வதைக் காண்கிறோம்.
சாதாரண நாட்களில் பாம்புப் புற்றின் அருகில் செல்லவே பயப்படும் மக்கள் நாகபஞ்சமி, நாக சதுர்த்தி போன்ற பண்டிகை தினங்களில் பாம்புப் புற்றுகளை நோக்கி பக்தி சிரத்தையோடு படையெடுப்பதை பார்க்கிறோம்.
பாம்புகளுக்கு பூஜை செய்து புற்றில் பால் ஊற்றி வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்வார்கள். ஆனால் நாக பஞ்சமியன்று பாம்புப் புற்றில் பால் ஊற்றி அவற்றை தொந்தரவு செய்தால் வழக்கை எதிர்கொள்ள வேண்டிவரும் என்று வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆகஸ்ட் 5ஆம் தேதி நாக பஞ்சமி. அப்போது, பாம்புகளின் பாதுகாப்புக்கு எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து, திங்கள்கிழமை நேற்று ஹைதராபாத்தில் உள்ள ஆரண்ய பவனில் தன்னார்வு அமைப்புகளின் பிரதிநிதிகளோடு வனத்துறை உயர் அதிகாரிகள் சந்தித்து உரையாடினார்கள்.
நாகபஞ்சமியன்று பாம்புகளைப் பால் அருந்த செய்தால் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று பிசிசிஃஎப் பிரசாந்த் குமார் தெரிவித்தார்.
நாகபஞ்சமி அன்று பாம்பாட்டிகள் பாம்புகளை வைத்து விளையாட்டு காட்டினாலோ, பால் அருந்தச் செய்தாலோ… பிராணிகள் உயிர்வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றும், பாம்பு பால் குடிக்காது என்றும் அவற்றுக்கு பலவந்தமாக பால் ஊற்றி குடிக்கச் செய்து தொல்லை செய்யக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.
ஆலயங்களின் அருகில் யாராவது பாம்புகளோடு வந்தால் வனத்துறைக்கும் காவல்துறைக்கும் செய்தி தெரிவிக்கும்படி பொதுமக்களை கேட்டுக் கொண்டார். பாம்பு பாதுகாப்பு குறித்து ஆலயங்கள், பள்ளிகள், கிராம சபைகளில் விழிப்புணர்வு முகாம்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.