spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசுற்றுலாநம்ம ஊரு சுற்றுலா: நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில்!

நம்ம ஊரு சுற்றுலா: நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில்!

- Advertisement -
nanganallur hanuman temple

— முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் —

பகுதி 4 – நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில்

          வடபழனியிலிருந்து அசோக்பில்லர், ஈக்காட்டு தாங்கல், கத்திப்பாரா மேம்பாலம், 100 அடி ரோடு வழியாக நங்கநல்லூர் விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலுக்கு வந்து சேர்ந்தோம். இந்தக் கோவிலும் காலை 0530 மணிக்குத் திறந்துவிடும். காலை 0700 மணிக்கு காலசந்தி பூஜைக்காக அரை மணிநேரம் மூடிவிடுவார்கள். அதற்கு முன்னர் வந்தால்  பத்து நிமிடத்தில் தரிசனம் முடித்துவிட்டுப் பயணத்தைத் தொடரலாம்.

          1974ம் வருடம் மைலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி அருகில் இருக்கும் நாட்டு சுப்பராய முதலி தெருவில் வசித்து வந்த ஒரு பள்ளிகூட வாத்தியாரின் கனவில் இந்த நங்கநல்லூர் க்ஷேத்திரத்திற்கான சிந்தனை தோன்றியது. தெய்வ சித்தத்தின் படி, அந்தப்பள்ளி வாத்தியார், 32 மி.மீ. உயரமுள்ள வெண்கலத்தால் ஆன ஆஞ்சநேயர் சிலைக்கு பூஜைகள் விமரிசையாக செய்து வந்தார். அவரும் அவருடைய ஆன்மீக நண்பர்களும் சேர்ந்து மாருதி பக்த சமாஜம் என்ற அமைப்பை உருவாக்கி, ஹனுமத் ஜயந்தி விழாவை மிகவும் கோலாகலமாக் கொண்டாட ஆரம்பித்தனர். விழாவின் போது தினமும் நடக்கும் இன்னிசைக் கச்சேரியில் சம்பாவனையின்றி கலந்து கொண்டு ஸ்ரீஆஞ்சநேயரின் அருள் வேண்டி, பிரபல இசைக் கலைஞர்கள் போட்டி போட்டனர்.

          இப்படியே பத்து வருடங்கள் போனது. பின்னர் அத்தி மரத்திலான எட்டு அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலையை உருவாக்கி, ஹனுமத் ஜயந்தியை மேலும் விமரிசையாக் கொண்டாடினர். கனவில் தோன்றிய ஆணையை பூர்த்தி செய்ய முயற்சிகள் பல செய்த “மாருதி பக்த சமாஜம் டிரஸ்ட்” காஞ்சி ஸ்ரீ பரமாசார்யாரின் முடிவுப்படி நங்கநல்லூரில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்தனர்.

          நங்க நல்லூரில் உள்ள “ராம் நகரில்” ஏழு கிரவுண்ட் பரப்பளவு உள்ள நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ராம் நகரில் உள்ள ராகவேந்திர ஸ்வாமி பிருந்தாவன் பக்கத்திலேயே இந்த இடம் அமைந்தது. இந்த இடத்தில் பூமி பூஜை நடந்தது.

          32 அடி உயர ஆஞ்சநேயர் சிலை அமைக்க முடிவானதும் சிலைவடிப்பதற்கான கருங்கல் தேடும் படலம் தொடங்கியது. இதுவும் பல இன்னல்களைக் கொண்டதாக இருந்தது. முதலில் திருச்சி அருகில் யாசனை என்ற இடத்தில் இருந்த கல் பரிசோதிக்கப்பட்டு சிலை செய்யும் குணங்கள் முழுவதும் இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. வேலூர் அருகில் உள்ள பாஷ்யம் என்ற இடத்தில் உள்ள கல் பரிசோதக்கப்பட்டு உகந்ததாக கண்டறியப்பட்டது. நில மட்டத்திலேயே இருந்ததால் எடுத்து வரும் வேலை சுலபமாக இருக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. சந்தோஷத்தில் முழுகிய குழு, முன் பணம் கொடுத்து வேலையை ஒரு காண்டிராக்டரிடம் ஒப்படைத்து ஒரு மாதம் கழித்து சென்று பார்த்த போது வேலை மந்தமாக இருப்பதுடன் காண்டிராக்டரையும் காணவில்லை. அது மட்டுமின்றி, கல்லிலும் ஒரு பெரிய விரிசல் தெரிந்தது. மேலும் பல முயற்சிகளுக்குப் பின் வந்தவாசி அருகில் உள்ள பரமநல்லூர் என்ற இடத்தில் உள்ள கல் தேர்ந்தெடுக்கப் பட்டது. ஆனால் கல்லின் மேல் பாகம் மட்டும் தான் நிலத்திற்கு மேல் தெரிந்தது. ஸ்ரீகிருஷ்ணர் சிலை செய்வதற்காக பிர்லா குழுமத்தினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு பிறகு அளவு போதாததால் எடுத்து செல்லப்படாத கல் என்று தெரிந்தும், குழு கல்லை வெளியே எடுக்கும் சிரமம் பாராமல், கல்லில் ஒரு சிறிய பாகத்தை வெட்டி எடுத்து காஞ்சி எடுத்துச் சென்றது. மௌன விரதத்தில் ஸ்ரீ பரமாச்சார்யார் அவர்கள் தன்னுடைய தீர்க்க தரிசனத்தினால், இந்தக் கல் சரியானதே என்று ஆசி கூறினார்.

          கருங்கல்லைப் பெயர்த்து எடுக்கும் வேலை பல சிரமங்களுடையே வெற்றிகரமாக நடந்தது. பதினாறு ஆக்ஸில் கொண்ட வண்டியில், முப்பதைந்து அடி நீளம், பத்து அடி அகலம், பத்து அடி பருமன் கொண்ட நூற்று ஐம்பது டன்கள் எடையுள்ள அந்தக் கருங்கல்லைக் கொண்டு வந்தனர். அந்தக் கல்லில் இருந்து சிற்பி முப்பதிரண்டு அடி உயரமான ஆஞ்சநேயர் சிலை உக்கிரம் சிறிதும் இன்றி, சாந்த ஸ்வரூபியாக அமைந்தது ஒரு பகவத் சங்கல்பமேயாகும்.

          சிலை முழுவதும் வடித்த பிறகு, தெய்வீக சக்தி பெறுவதற்கு, சிலைக்கு பால்வாசம், ஜலவாசம், பூவாசம், தான்யவாசம் என்று பல வாசங்கள் செய்யப்பட்டன. சிலையின் பீடம் தாமரை வடிவத்தில் செய்யப்பட்டது. சிலையின் அடிப்பாகத்தில் உள்ள முனை, தாமரைப் பீடத்தில் உள்ள குழியில் வைக்கப்பட்ட யந்திரங்களை நசுக்காமல், இடைவளி எதுவும் இல்லாமல் பொருந்துமாறு அளவு செய்யப்பட்டது. பின்னர் தொண்ணுறு டன்கள் எடையுள்ள சிலையை உயரத்திலிருந்து பீடத்தில் இறக்கினார்கள்.

          ஆஞ்சநேய ஸ்வாமியின் மூர்த்தி ப்ரதிஷ்டை செய்த பிறகு கோயில் நிர்மாணிக்கப்பட்டது. தொண்ணூறிரண்டு அடி உயரமுள்ள கோபுரத்தின் கலசம் செப்பினால் செய்யப்பட்டு தங்கத்தகடுகளால் மூடப்பட்டுள்ளது. ஆகம சாஸ்திரப்படி கோவில் கட்டபட்டது. ராமர், கிருஷ்ணர், கருடர், வினாயகர், நாகர் ஆகியவர்களுக்கு பிறகு சந்நதிகள் கட்டப்பட்டன.

          முதல் கும்பாஷேகம்: 1995 மே மாதம் 19ம் தேதியன்று லட்சக் கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் மிகவும் விமரிசையாக அனைத்து ஆகம சாஸ்திர விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்றது. கும்பாபிஷேகத்தன்று நடைபெறவேண்டிய கோதானம், பூமிதானம் முதலிய எல்லா விதமான தானங்களும் குறைவின்றி நடந்தேறின. ஒரு மாதத்திற்கு குறைந்தது ஒரு லட்சம் பக்தர்கள் விஜயம் செய்யும் புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது. இந்தக் கோவில் இந்தியா முழுவதும் உள்ள ஆஞ்சநேய பகதர்களுக்கு ஒரு புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது.

          திட்டமிட்டபடி காலை 0645க்குள் நாங்கள் எங்கள் தரிசனத்தை முடித்துக்கொண்டு போரூர் நோக்கிப் புறப்பட்டோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe