
ஸ்ரீவிலி -மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தினசரி டிரெக்கிங்..
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தினசரி டிரெக்கிங் செல்ல அனுமதி அளித்திருப்பதால் இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் வனப்பகுதிகளில் 40 இடங்களில் டிரெக்கிங் செல்ல மாநில அரசு முதன்முறையாக அனுமதி அளித்தது. இதையடுத்து இயற்கை ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தேர்வு செய்யப்பட்ட வனப்பகுதிகளில் டிரெக்கிங் செல்வதில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, செண்பகத்தோப்பு பகுதியில் இருந்து வத்திராயிருப்பு, புதுப்பட்டி வரை அடர்த்தியான வனப்பகுதியில் டிரெக்கிங் சென்றனர்.
இதில், ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்நிலையில், கோடைகாலம் தொடங்கியதால், வனப்பகுதியில் தீ பிடிக்கும் வாய்ப்பு இருந்ததால், ஏப்.15ம் தேதி வரை டிரெக்கிங் செல்ல தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்தது.
இந்த நிலையில், மீண்டும் டிரெக்கிங் செல்ல அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, செண்பகத்தோப்பு வனப்பகுதியில் இருந்து வத்திராயிருப்பு, புதுப்பட்டி வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் டிரெக்கிங் செல்கின்றனர்.
இது குறித்து வனத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘இதுவரை சனி, ஞாயிறு தினங்களில் மட்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் ட்ரெக்கிங் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தது. தற்போது தினமும் டிரெக்கிங் செல்லலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.
டிரெக்கிங் செல்ல விரும்புவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். இந்த திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், தற்போது நபர் ஒருவருக்கு ரூ.1,200 மட்டுமே ஆன்லைன் மூலம் பெறப்படுகிறது.
டிரெக்கிங்கை பொறுத்தவரை தொடக்கத்தில் ரூ.2500ம், பின்னர் ரூ.1700ம் வாங்கப்பட்டது. தற்போது ரூ.1200 ஆக குறைத்திருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வனஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’ என்றார்.





