திருப்பதி: ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவம் சக்கர ஸ்நானத்துடன் நிறைவடைந்தது. பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
திருப்பதி மலையில் நடைபெற்ற ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தி்ன் நிறைவு நிகழ்ச்சியான சக்கர ஸ்நானம் (தீர்த்தவாரி) காலை கோவில் தெப்பக்குளமான சுவாமி புஷ்கரணியில் நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் கடந்த பத்தாம் தேதி துவங்கி 9 நாட்கள் நடைபெற்றது. பிரம்மோற்சவ நாட்களில் காலை இரவு ஆகிய வேளைகளில் உற்சவர் மலையப்ப சுவாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோவில் மாடவீதிகளில் திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருடவாகன சேவை இம் மாதம் 14ஆம் தேதி இரவு நடைபெற்றது. அன்று ஒரே நாளில் மட்டும் சாமி தரிசனத்திற்காக சுமார் 4 லட்சம் பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். இந்த நிலையில் நவ ராத்திரி பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாளான வியாழன் காலை கோவில் தெப்பக்குளமான சாமி புஷ்கரணியில் பிரம்மோற்சவத்தின் நிறைவு நிகழ்ச்சியாக சக்கர ஸ்நானம் நடைபெற்றது.
சக்கர ஸ்நானத்தை முன்னிட்டு வியாழன் அதிகாலை ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி, சக்கரத்தாழ்வார் ஆகிய உற்சவர்கள் கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதிகள் வழியாக கோவில் தெப்பக்குளத்தை அடைந்தனர்.
அங்கு உற்சவர்களுக்கு ஆகம முறைப்படி திருமஞ்சனம் உள்ளிட்ட வைதீக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து தேவஸ்தான அர்ச்சகர்கள் சக்கரத்தாழ்வாரை கோவில் தெப்பக்குளத்திற்கு எடுத்து சென்று மூன்று முறை தண்ணீரில் மூழ்க செய்து சக்கர ஸ்நானம் நடத்தினர்.
அப்போது குளத்தின் நான்கு புறங்களிலும் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பி புனித நீராடினர்.தொடர்ந்து உத்ஸவர்கள் மாட விதிகள் வழியாக கோவிலை அடைந்தனர்.
சக்கரத்தாழ்வாரை கோவில் திருக்குளத்தில் மூழ்க செய்து சக்கர ஸ்நானம் நடத்தப்படும் அதே நேரத்தில் திருப்பதி மலையில் உள்ள 365 புண்ணிய தீர்த்தங்கள், கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி ஆகியவை உள்ளிட்ட புண்ணிய நதிகள் ஆகிய அனைத்தும் ஏழுமலையான் கோவில் தெப்பக்குளம் ஆன சுவாமி புஷ்கரணியில் ஒன்று சேர்வதாக ஐதீகம்.
எனவே சக்கர ஸ்நானம் நடத்தப்படும்போது சாமி புஷ்கரணியில் புனித நீராடுவது வெகு சிறப்பான பலன்களைக் கொடுக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாகும். எனவேதான் ஏழுமலையான் கோவில் சக்கர ஸ்நானம் நடத்தப்படும்போது சாமி புஷ்கரணியில் புனித நீராட பக்தர்கள் குவிகின்றனர்.
சக்கர ஸ்நானத்துடன் ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரமோற்சவம் நிறைவடைந்தது.




