வயது வரம்பு இல்லாமல் எல்லாப் பெண்களும் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. இந்தத் தீர்ப்பு குறித்து பொதுமக்களும் ஐயப்ப பக்தர்களும் தங்களுடைய வருத்தத்தைத் தொடர்ந்து பதிவு செய்கிறார்கள். கேரளத்தில் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள ஐயப்ப பக்தர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக சபரிமைலயில் தொடரும் ஒரு நிகழ்வு என் போன்ற பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இளம் பெண்கள் வரக்கூடாது என்று தடுக்கின்ற போராட்டக்காரர்கள் ஒருபக்கமும் அவர்களை அடிக்கின்ற காவல்துறையினர் ஒருபக்கமும் இருக்க, இதற்கிடையில் பத்திரிகையாளர்கள் என்ற அடையாளத்தோடு சிலர் கோயிலுக்குள் போக முயற்சிப்பதும் அதைத் தொடர்ந்து ஊடகங்களில் காட்சிப்படுத்துவதும் எந்தவகையிலும் நியாயமற்றது என்பது என்னுைடய கருத்து.
கருத்து மோதல் அல்லது களத்துமோதல் எதுவாக இருந்தாலும் பத்திரிகையாளருடைய வேலை அதைப் பதிவு செய்வதுதான். தான் அதில் பங்கெடுத்துக்கொள்வது மற்றும் ஒரு சாராருக்கு ஆதரவாகச் செயல்படுவது என்பது பத்திரிகையாளரின் நெறிமுறைக்கு முற்றிலும் மாறானது.
இது நீடித்தால் சில ஆபத்தான முடிவுகளுக்கு ஊடகங்கள் பலியாகக்கூடும் என்று சில மூத்த பத்திரிகையாளர்கள் நினைக்கிறார்கள். இத்தகையப் போக்கைத் தவிர்க்கவேண்டும் என்றும் இதைக் காட்சிப்படுத்துவதில் ஆர்வம் காட்ட வேண்டாம் என்றும் ஊடக நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
– க. சுப்பு (தலைமை ஆலோசகர், தேசிய ஊடகவியலாளர் நலச் சங்கம்)




