ரயில் சேவை ரத்தால் பாகிஸ்தானில் சிக்கிய இந்தியர்கள்! மீட்குமாறு உறவினர்கள் கண்ணீர்!

உலகம் புகார் பெட்டி பொது தகவல்கள்
train pak ind - 2026
file pic

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் 1972-ம் ஆண்டு சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி 1976-ம் ஆண்டு இருநாடுகளுக்கும் இடையே சம்ஜவுதா விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வாரம் ஒருமுறை இயக்கப்படும் இந்த ரயில் டெல்லியிலிருந்து புறப்பட்டு பஞ்சாபின் அட்டாரி வழியாக லாகூர் வரை சென்று வந்தது.

காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு கடந்த 20 நாள்களுக்கு முன்னர் நீக்கப்பட்டது. இந்திய அரசின் நடவடிக்கையைப் பாகிஸ்தான் கடுமையாகக் கண்டித்தது. மத்திய அரசின் செயலை கண்டித்து பாகிஸ்தானும், சீனாவும் ஐ.நா சபையில் முறையிட்டன. ஆனால் அவர்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

இதனால் கொந்தளித்த பாகிஸ்தான், தங்கள் நாட்டுக்கு இந்தியாவில் இருந்து எந்த ரயிலும் வர வேண்டாம் எனக் கூறி அனைத்து சேவைகளையும் ரத்து செய்தது. இதனால் குஜராத்தின் கோத்ரா பகுதியிலிருந்து பாகிஸ்தானுக்குச் சென்ற உள்ளூர் மக்கள் 80 பேர் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் பாகிஸ்தானில் தவித்து வருகின்றனர்.

பாகிஸ்தானில் சிக்கியுள்ள கோத்ரா பகுதி மக்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ”

கோத்ரா பகுதியைச் சேர்ந்த 80 பேர் பாகிஸ்தானில் உள்ள தங்கள் உறவினர்களைச் சந்திப்பதற்காக அங்கே சென்றனர். இரு நாடுகளுக்கும் இடையேயான ரயில் சேவை துண்டிக்கப்பட்டதால் அனைவரும் அங்கேயே சிக்கியுள்ளனர். பாகிஸ்தானில் சிக்கிய இந்திய மக்கள் அனைவரும் ஏழ்மையானவர்கள். எனவே மத்திய அரசு இதில் தலையிட்டு அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஹாஜி ஃபிர்தோஸ் என்ற சமூக ஆர்வலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோத்ராவை சேர்ந்த யூசுஃப் என்பவர் பேசும் போது, ” முகமது அக்ரம் என்ற என் சகோதரர் பாகிஸ்தானில் உள்ள எங்கள் உறவினர்களை பார்ப்பதற்காகச் சென்றார். ரயில் சேவை துண்டிக்கப்பட்டதால் அவரால் இந்தியா திரும்ப முடியவில்லை. அவரை நினைத்து பெற்றோர் மிகவும் கவலையுடன் உள்ளனர். என் சகோதரர் உள்ளிட்ட அனைவரையும் மீண்டும் சொந்த ஊருக்கு அழைத்து வர மத்திய அரசு உதவ வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளித்துள்ள அதிகாரிகள், “பாகிஸ்தானில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர், அவர்கள் எப்போது சொந்த ஊருக்குத் திரும்பி வருவர் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம். அனைத்து தகவல்களையும் சேகரித்து மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளோம். இந்த விவகாரம் தொடர்பாக அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.