
கொரோனா வைரஸை சரியாகக் கையாளாத சீனா மீது தாம் அதிருப்தியில் உள்ளதாகவும், அதற்காக அந்நாட்டுடனான உறவை துண்டிக்க முடியும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆவேசமாகக் கூறியுள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு டிரம்ப் பேட்டி அளித்த போது, இத்தகைய ஆவேசத்தை வெளிப்படுத்தினார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது….
சீன அதிபர் ஷி ஜிங்பிங் உடன் எனக்கு நல்ல உறவு உள்ளது. ஆனால் தற்போது அவருடன் நான் பேச விரும்பவில்லை. சீனா மீது அதிருப்தியில் இருக்கிறேன். இப்போது நான் அதனைத் தெரிவிக்கிறேன்.
சீனாவுக்கு எப்படி அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்று கேட்கிறார்கள். சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நம்மால் பல விஷயங்களைச் செய்ய முடியும். சீனாவுடனான ஒட்டுமொத்த உறவையும் துண்டிக்க முடியும். அவ்வாறு செய்வதன் மூலம், அமெரிக்காவுக்கு 500 பில்லியன் டாலர் மிச்சமாகும். கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து தான் வந்தது. அதனை அவர்களால் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் … என்றார் ஆவேசத்துடன்!
கொரோனா வைரஸ் தொடர்பாக சீனாவுடனான தமது உறவு மேலும் மோசமடைவதையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இவ்வாறு கட்டம் போட்டுக் காட்டினார். சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் இப்போது பேசுவதில் தனக்கு விருப்பமில்லை என்றும், உலகின் இரண்டாவது பெரிய நாடுகளுடனான உறவுகளைக் கூட குறைக்க முடியும் என்று பரிந்துரைக்கும் அளவுக்கு அதிபர் டிரம்ப் சென்றிருக்கிறார்.
வியாழக்கிழமை நேற்று ஃபாக்ஸ் பிசினஸ் நெட்வொர்க் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்தான் அதிபர் டிரம்ப் இவ்வாறு தமது ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சீனா இந்த கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தத் தவறியதில் தாம் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் “இதை அவர்கள் ஒருபோதும் அனுமதித்திருக்கக் கூடாது” என்றும் டிரம்ப் கூறினார்.
சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் தமக்கு நல்லுறவு இருப்பதாக டிரம்ப் அடிக்கடி கூறி வந்தார். இப்போதும் அதையே கூறுகிறார். ஆனால், இந்த நேரத்தில் அவருடன் தாம் பேச விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார்.
குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைகளில் படிக்க விண்ணப்பிக்கும் சீன மாணவர்களுக்கு அமெரிக்க விசாக்கள் மறுக்கப்பட வேண்டும் என்ற குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டரின் பரிந்துரை குறித்து டிரம்பிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “நாங்கள் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன, நாங்கள் எந்தச் செயல்களையும் செய்ய முடியும். முழு உறவையும்கூட துண்டிக்க முடியும்” என்று பதிலளித்தார்.

“இப்போது, நீங்கள் அதைச் செய்தால், என்ன நடக்கும்? என்று கேட்டதற்கு, நீங்கள் 500 பில்லியன் டாலர்களை மிச்சப்படுத்துவீர்கள்” என்று பதிலளித்தார் டிரம்ப்!
சீனாவிலிருந்து அமெரிக்காவின் வருடாந்திர இறக்குமதி மதிப்பீட்டை அவர் குறிப்பிட்டுச் சொன்னார். இது பெரும்பாலும் இழந்த பணம் என்றே அவர் குறிப்பிடுகிறார்.
டிரம்பின் இந்தக் கருத்து வெளிவரக் காரணம், சீனாவின் அரசு இதழான குளோபல் டைம்ஸ் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ஹு ஜிஜினிடமிருந்து தம்மைக் குறித்த ஓர் ஏளனத்தை டிரம்ப் பார்க்க நேர்ந்தது. கடந்த மாதம் ட்ரம்பின் கருத்துகள் சில விமர்சனத்துக்கு உள்ளாகின. கோவிட் -19 கொரோனா வைரஸ்க்கு எவ்வாறு சிகிச்சையளிக்கப்படலாம் என்பது பற்றி டிரம்ப் குறிப்பிட்டதை ஏளனமாகக் குறிப்பிட்டார் ஹு ஜீஜின்!
“இந்த அதிபர் ஒருமுறை கோவிட் -19 நோயாளிகளுக்கு கிருமிநாசினிகளை செலுத்த பரிந்துரைத்தார்” என்று ஹு ட்விட்டரில் தெரிவித்தார். இது டிரம்பை மிகவும் உசுப்பி விட்டுள்ளது.
அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீவன் முன்ச்சின், ஃபாக்ஸ் பிசினஸ் நெட்வொர்க்கிடம் தெரிவித்த போது, சீனா கொரோனா வைரஸ் பற்றி மேலும் பல தகவல்களை வழங்க வேண்டும் என்றும், டிரம்ப் தனது விருப்பங்களை மறுஆய்வு செய்து வருவதாகவும் கூறினார்.
“டிரம்ப் ரொம்பவே கவலைப்படுகிறார், அவர் தனது அனைத்து விருப்பங்களையும் மறுஆய்வு செய்கிறார். இந்த வைரஸ் தாக்கத்தால் அமெரிக்க பொருளாதாரம், அமெரிக்க வேலைகள், அமெரிக்க மக்களின் ஆரோக்கியம், ஜனாதிபதி, பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை குறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம். பொருளாதாரத்தையும் அமெரிக்க தொழிலாளர்களையும் பாதுகாத்தல் முக்கிய அம்சம் “என்று முன்ச்சின் கூறினார்.
கொரோனா வைரஸ் வெடித்துப் பரவியதன் தீவிரம் குறித்து உலகத்தை எச்சரிக்க பெய்ஜிங் தவறிவிட்டதாகவும், ஆரம்பகால கேஸ்கள் குறித்த தரவுகளை தடுத்து நிறுத்திவிட்டதாகவும் டிரம்பும் அவரது குடியரசுக் கட்சி ஆதரவாளர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தத் தொற்று ஒரு கூர்மையான உலகளாவிய மந்த நிலையைத் தூண்டியுள்ளது! அடுத்து, நவம்பரில் நடைபெற வேண்டிய மறுதேர்தல் வாய்ப்புகளுக்கு டிரம்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அரசின் தகவல்படி, கோவிட் 19 தொற்றுநோயால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் எதிர்ப்பாளர்களோ, இந்த விவகாரத்தில் சீனா அதிகம் பதிலளிக்க வேண்டிய நிலையில், நெருக்கடிக்கு டிரம்ப் அளித்துள்ள பதில்களின் விமர்சனங்களிலிருந்து முக்கியப் பிரச்னை மீதான கவனத்தைத் திசைதிருப்ப அவர் முயற்சிப்பதாகத் தெரிகிறது என்கின்றனர்.
அதே நேரம், ட்ரம்பின் கருத்துக்களை “ஆபத்தான துணிச்சல்” என்கிறார் வாஷிங்டன் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் ஸ்காட் கென்னடி. “தொடர்புகளைத் துண்டிப்பது உலகளாவிய ஒத்துழைப்பு தேவைப்படும் ஒரு நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஒரு சிறந்த உத்தி அல்ல. பொருளாதார உறவைத் துண்டிப்பது அமெரிக்க பொருளாதாரத்தை மோசமாக சேதப்படுத்தும்” என்கிறார் அவர்.