தேர்தலுக்குப் பிறகே 13வது சட்டத் திருத்த நடவடிக்கை: அதிபர் சிறிசேன

உலகம்

கொழும்பு: இலங்கையில், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் 13வது சட்டத் திருத்தம் தொடர்பான நடவடிக்கை நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் என்று அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் அதிபர் மாளிகையில், பத்திரிகை செய்தி ஆசிரியர்கள் மற்றும் ஊடகப் பிரிவுத் தலைவர்கள் மத்தியில் பேசிய சிறிசேன, தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண தமது அரசு முன்னுரிமை அளிக்கும் என்று கூறினார். அண்மையில் இலங்கை சென்ற நரேந்திர மோடி, 13வது சட்டத் திருத்தத்தை இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில், சிறிசேன இவ்வாறு கூறியுள்ளார். 19 ஆவது சட்டத் திருத்தம் அடுத்த வாரம், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று குறிப்பிட்ட சிறிசேன, அதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்றார். இந்த சட்டத் திருத்தம் அதிபரின் பதவிக்காலம், அதிகாரம் தொடர்புடையது. மேலும் இலங்கைக்கு எதிராக செயல்பட்டு வந்த தமிழ் அமைப்புகள் தற்போது, இலங்கையின் புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.