புதுதில்லி :
இந்தியாவின் நிதி உதவியுடன் ஈரானில் கட்டப்பட்டுள்ள சபாஹர் துறைமுகம் நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.
இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வணிகம் பெரும்பாலும் பாகிஸ்தான் வழியாகவே மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு பொருட்களை எடுத்துச் செல்ல பாகிஸ்தான் முரண்டு பிடித்தது. மேலும் சீனாவின் உதவியுடன் பாகிஸ்தானின் கவாடர் துறைமுகம் அமைக்கும் பணியையும் துவக்கியது.

இதனால், இந்தியாவுக்கு மாற்று வழி தேவைப்பட்ட நிலையில், ஈரானில் ஓமன் வளைகுடா பகுதியில் அரபிக் கடலை ஒட்டியுள்ள சபாஹர் பகுதியில் துறைமுகம் அமைக்கும் பணியை இந்தியா துவக்கியது. இதற்காக ரூ. 3,300 கோடி நிதி உதவி அளித்தது. அதில் ரூ.2,200 கோடி ரூபாய் செலவிலான சபாஹர் துறைமுகத்தின் முதல் கட்டப் பணிகள் முடிவடைந்தன. அதனை ஈரான் அதிபர் ஹாசன் ரூஹானி நேற்று துவக்கி வைத்தார். இதன் மூலம் 25 லட்சம் டன்னாக இருந்த இந்தத் துறைமுகத்தின் கையாளும் திறன் 85 லட்சம் டன்னாக உயருகிறது.
இந்தத் துறைமுக விரிவாக்கத் திட்டத்தின் கீழ் புதிதாக ஐந்து கப்பல் தளங்கள் கட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியப் பெருங்கடல் வழியாக ஆசிய நாடுகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்வதற்கான தொலைவு வெகுவாகக் குறைந்துள்ளது.

ரஷ்யாவில் இருந்து திரும்பும் வழியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று முன்தினம் தெஹ்ரான் சென்றார். அந்நாட்டு அதிபருடன் ஆலோசனை நடத்தினார். நேற்று நடந்த துறைமுக துவக்க விழாவில் இந்தியா, கத்தார், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.