
அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது மகளுடன் நடந்துவரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்ட ரஜினிக்கு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
அதன்பின்னர், அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ க்ளீனிக்கில் சிறப்பு மருத்துவர்கள் குழுவினரால் ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் அமெரிக்கா சென்று தனது உடல்நிலையை நடிகர் ரஜினிகாந்த் பரிசோதித்து வருகிறார்.
ரஜினிகாந்த் தற்போது, சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில் மீண்டும் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல ரஜினிகாந்த் திட்டமிட்டிருந்தார். ஆனால், கொரோனா பரவல் காரணமாக அவரது பயணம் தாமதமானது.
இந்நிலையில், மத்திய அரசின் அனுமதியுடன் கடந்த 19ஆம் தேதி ரஜினிகாந்த் அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
தி கிரே மேன் ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்துவரும் நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் தற்போது அமெரிக்காவில் உள்ளார். இதனால் அவர் அமெரிக்காவில் ரஜினிகாந்தை பார்த்துக்கொள்கிறார்.
இந்நிலையில், தான் சிகிச்சை பெறும் மயோ க்ளீனிக்கில் இருந்து தனது மகள் ஐஸ்வர்யாவுடன் நடிகர் ரஜினிகாந்த் நடந்துவரும் புகைப்படம் சமூக ஊடகத்தில் வெளியானது.
தலையில் தொப்பி, டீ.சர்ட் அணிந்தபடி ரஜினிகாந்த் நடந்துவரும் இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் சமூக ஊடகத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
இதன்மூலம் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார் எனவும் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.