
~ முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இந்தியா-இங்கிலாந்து, நான்காவது டெஸ்ட், ஐந்தாவது நாள், கென்னிங்டன் ஓவல், லண்டன், 6 செப்டம்பர் 2021 இந்தியாவின் மகத்தான வெற்றி பெற்றது..
இறுதி ஸ்கோர் –
இந்தியா 191 (தாக்கூர் 57, கோஹ்லி 50, வோக்ஸ் 4-55) மற்றும் 466 (ரோஹித் 127, புஜாரா 61, தாக்கூர் 60, பந்த் 50, வோக்ஸ் 3-83)
இங்கிலாந்து 290 (போப் 81, வோக்ஸ் 50, உமேஷ் 3-76) மற்றும் 210 (ஹமீட் 63, பர்ன்ஸ் 50, உமேஷ் 3-60)
இந்தியா 157 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது.

ஜஸ்பிரித் பும்ராவின் சிறப்பான ரிவர்ஸ் ஸ்விங், ரவீந்திர ஜடேஜாவின் கஞ்சத்தனமான பந்து வீச்சு, உமேஷ் யாதவ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரின் கடினமான முக்கியமான விக்கட்டுகளை எடுத்தது ஆகியவை இந்தியாவை இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற வைத்தது.
முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இங்கிலாந்து 3 விக்கட் இழப்பிற்கு 53 ரன் எடுத்தது. இரண்டாவது நாளில் இங்கிலாந்து அணி 100 ரன்கள் அதிகம் எடுத்து ஆல் அவுட்டானது. இந்தியா விக்கட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்தது. மூன்றாம் ஆட்ட முடிவில் இந்திய அணி மூன்று விக்கட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்திருந்தது. நான்காம் ஆட்டத்தில் இந்திய் அணி 466 ரன்களுடன் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி விக்கட் இழப்பின்றி 77 ரன் கள் எடுத்திருந்தது.
இறுதி நாளில் இந்தியாவின் பணி 90 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை வீழ்த்துவது. இது நேரடியான ஆனால் அரிதாந பணியாகும். அணியில் அவர்களது சிறந்த சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் வேறு இல்லை. மேலும் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆடுகளம் ஒத்துழைக்கவில்லை. ஆனால் இங்கிலாந்து ஜொலிக்க முடியாத இடங்களில் இந்தியர்கள் வெற்றி பெற்றனர்,
மதிய உணவுக்குப் பிறகு பும்ரா ஆறு ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 6 ரன் எனச் சிறப்பாக பந்து வீசினார். ஓலி போப்பின் விக்கட்டை எடுத்தபோது விரைவான 100 விக்கட்டுகளை 24ஆவது மேட்சில் எடுத்த சாதனையைச் செய்தார். இதற்கு முன்னர் கபில்தேவ் இதே சாதனையை 25 மேட்சுகளில் செய்தார்.
அஸ்வினைத் தவிர்த்ததற்கான காரணத்தை டாஸின்போது கோஹ்லி சொன்னார். ஜடேஜா, இங்கிலாந்தின் இடது கை வீரர்களுக்கு எதிராக ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதே அந்த விளக்கம். இந்த விஷயத்தில் அஸ்வின் இன்னமும் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். இதனால் அந்த விளக்கம் சில குழப்பங்களைத் தூண்டியது. ஆனால் ஜடேஜாவின் வெற்றி அவரது தேர்வை உறுதி சரிதான் என உரக்கச் சொன்னது. அவர் மொயீன் அலிக்கு வீசிய முதல் பந்தில் மொயின் அலி, சூர்யகுமார் யாதவுக்கு கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
தேநீர் இடைவேளைக்குப் பின்னர் தாமதமாக இந்தியா புதிய பந்தை எடுத்தது, உமேஷ் மீண்டும் விக்கட் எடுத்தார். கடைசி இரண்டு விக்கட்டுகளும் விரைவாக விழுந்தன.
ஐந்தாவது இறுதி டெஸ்ட் மான்செஸ்டரில் செப்டெம்பர் 10 முதல் 14 வரை நடக்கவுள்ளது. இந்திய அணி அந்த டெஸ்டிலும் வெற்றி பெறவேண்டும் அல்லது ட்ரா செய்யவேண்டும். அப்போதுதான் உலக டெஸ்ட் கோப்பைத் தொடரில் முன்னிலை வகிக்க முடியும்.