
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் குறி சொல்லவதாக கூறி வீட்டை இடிக்க வைத்து பெண்ணிடம் தங்கத் தாலி மற்றும் பணம் பறித்த போலி சாமியார் சக்தி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
விதவிமான தோற்றங்களில் முகநூலில் தன்னுடைய படங்களை அப்லோடு செய்து, ‘சாமியர்களின் சூப்பர் ஸ்டார்’ என்று தனக்கு தானே பாறைசாற்றி கொண்டவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தினை சேர்ந்த சக்தி என்ற ஸ்ரீலஸ்ரீ சக்தி சுவாமிகள் என்று தனக்கு பெயர் வைத்துக் கொண்ட நபர்.
விளாத்திக்குளத்தைச் சேர்ந்த கணேசன் மகன் சக்தி (37) என்பவர் விளாத்திக்குளம் – நாகலாபுரம் சாலையில் ‘சக்தி வாராகி’ என்ற பெயரில் ஜோதிட நிலையம் வைத்து காவி உடையணிந்து பல வித பூஜைகள் நடத்தி, வட்ட வடிவில் கோடுகள் போட்டு அதற்கு மத்தியில் பெரிய அண்டாவில் தண்ணீர் வைத்து அதில் அமர்ந்து கொண்டு தியானம் செய்து பொதுமக்கள் மத்தியல் தன்னை சக்தி வாய்ந்த ஒரு சாமியார் போல காண்பித்துக் கொண்டு ஜோதிடம் மற்றும் குறி பார்க்கும் தொழில் செய்து வந்துள்ளார்.
விளாத்திக்குளம் அருகில் உள்ள கரிசல்குளத்தினை சேர்ந்த சக்திவேல் என்பவரது மனைவி தங்கபேச்சியம்மாள் (52) எண்ணினாள். விபத்தில் இவர் கணவர் இறந்து விட்ட நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சக்தியின் ஜோதிட நிலையம் சென்று குறி கேட்டுள்ளார்.

அப்போது சக்தி அந்தப் பெண்ணிடம், இறந்த போன உன் கணவரின் ஆத்மா சாந்தியடையவில்லை, உனது வீட்டை இடித்து மாற்றி அமைத்தால் தான் உன் கணவர் ஆத்மா சாந்தியடையும், உனது குடும்பப் பிரச்சனை தீரும் என்று கூறியுள்ளார். பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் பேச்சியம்மாளிடம் இரண்டறை சவரன் நகையை வாங்கியுள்ளார்.
பின்னர் அவரிடம் 30 ஆயிரம் கொடுத்து வீட்டை இடிக்க சொல்லியதாக கூறப்படுகிறது. அந்தப் பெண்ணும் அவர் கூறியவாறே வீட்டை இடித்துள்ளார். அதன் பின்னும் அவரது குடும்பப் பிரச்சனைகள் தீரவில்லை என்று அப்பெண் மீண்டும் இந்த போலி சாமியாரிடம் சென்று கேட்டிருக்கிறார்.
அப்போது அவர் இந்தப் பெண்ணிடம் உனது தாலி, மோதிரம் ஆகியவற்றை உருக்கி தங்கமாகவும், பணம் ரூபாய் 3500ம் கொண்டு வா, அதில் நான் தாயத்து செய்து, அதை பூஜையில் வைத்து தருகிறேன் உனது பிரச்சனைகள் தீர்ந்து விடும் என்று கூறியுள்ளார்.
இதனை நம்பி அந்தப் பெண்ணும் 7 கிராம் தங்கத்தை உருக்கி அவரிடம் தங்கம் மற்றும் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் அவர் இதுவரை தாயத்தும் கொடுக்கவில்லை, அந்த 7 கிராம் தங்கம் மற்றும் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.
பணத்தைத் திருப்பிக் கேட்ட அந்தப் பெண்ணிடம், உனக்கு செய்வினை வைத்து கை, கால்களை விளங்காமல் செய்து விடுவேன் என்று சாமியார் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் , விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளரை உடனடியாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
அதன்பேரில் விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் விளாத்திக்குளம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கலா தலைமையில் உதவி ஆய்வாளர் தேவராஜ் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு மேற்படி போலி சாமியார் சக்தி என்பவரை கைது செய்தனர். மேலும் இது போன்று எத்தனை பேரை மோசடி செய்துள்ளார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள சக்தி ஏற்கனவே இது போன்று பெண் பிரச்சினையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. விபரம் அறியாத பெண்களை ஜோதிடம் என்ற பெயரில் ஏமாற்றுவது, பெண்களை வசியம் செய்து தருகிறேன் என்ற பெயரில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பணத்தினை கறந்துள்ளார். ஆனால் வெளியே சொன்னால் தங்களுக்கு அசிங்கம் என்று நினைத்து பலரும் புகார் கொடுக்க முன்வரவில்லை என்கின்றனர் போலீசார்.
சக்தியின் உண்மையான பெயர் சக்தி இல்லை என்பதும் அவரது உண்மையான பெயர் முனீஸ்வரன் என்றும், சக்திமான் சீரியல் அவருக்கு அதிகமாக பிடிக்கும் என்பதால் முனீஸ்வரன் என்ற பெயரை சக்தி என்று மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. புகைப்படக்கலைஞராக தொடங்கி பின்னர் உள்ளுர் தொலைக்காட்சி நடத்தி தற்பொழுது சுவாமிகளாக சக்தி மாறியுள்ளார்.
இதுபோன்று போலி சாமியார்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், போலி சாமியார் சக்தியினால் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகார் கொடுக்க முன் வர வேண்டும், புகார் கொடுத்தால் போலீசார் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.