ஐ.சி.சி. டி20 போட்டி – 06.11.2021
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
சனிக்கிழமையன்று இரண்டு குரூப் 1 பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் அபுதாபியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்குமிடையே நடந்தது. இரண்டாவது ஆட்டம் இங்கில்ந்து தெனாப்பிரிக்க அணிகளுக்கிடையே ஷார்ஜாவில் நடைபெற்றது.
மேற்கு இந்தியத் தீவுகள் – ஆஸ்திரேலியா
பூவா தலையா வென்று ஆஸ்திரேலிய அணி மேற்கு இந்தியத் தீவுகள் அணியை மட்டையாடச் சொன்னது. மைக்கேல் ஸ்டார்க்கின் முதல் ஓவர் சரியாகத்தான் போனது. ஹேசல்வுட்டின் அடுத்த ஓவரில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் தொடக்க வீரர்கள் பந்துவீச்சாளர்களுக்கு பயம் காட்டினர். லுயிஸ் மூன்று ஃபோர்கள், கெயில் ஒரு சிக்ஸ் அடித்து அந்த ஓவரில் 20 ரன்கள் எடுத்தனர்.
அடுத்த ஓவரின் முதல் பந்தில் கெயில் மீண்டும் ஒரு சிக்ஸ் அடித்தார். ஆனால் அடுத்த பந்தில் அவர் ஆட்டமிழந்தார். மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் நிக்கோலஸ் பூரன் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ரோஸ்டன் கேஸ் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலிய வீரர்களின் பதட்டம் கொஞ்சம் தணிந்தது. அதற்குப் பின்னர் ஆடவந்த ஹெட்மயர் (28 பந்துகளில் 27 ரன்), பொலார்ட் (31 பந்துகளில் 44 ரன்), ப்ராவோ (12 பந்துகளில் 10 ரன்), ரசல் (7 பந்துகளில் 18 ரன்) ஆகியோர் நன்றாக ஆடி மேற்கு இந்தியத் தீவுகள் அணியை இருபது ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 157 ரன் என்ற கௌரவமான ஸ்கோர் எடுக்க வைத்தனர்.
பின்னர் ஆடவந்த ஆஸ்திரேலிய அணியின் வார்னர் (56 பந்துகளில் 4 சிக்ஸ், 9 ஃபோருடன் 89 ரன்), மிட்சல் மார்ஷ் (32 பந்துகளில் 2 சிக்ஸ், 5 ஃபோருடன் 53 ரன்) சிறப்பாக ஆடி 16.2 ஓவரில் 161 ரன் எடுத்து மேற்கு இந்தியத் தீவுகள் அணியை தோல்வியுறச் செய்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கிரிஸ் கெயில், ப்ராவோ இருவரும் இந்த ஆட்டத்தோடு ஓய்வுபெறுகிறார்கள். மெலும் மேற்கு இந்தியத் தீவுகள் அணி குரூப் 1இல் முதல் நான்கு இடத்திற்குள் இடம்பெறாததால் அடுத்தமுறை தகுதிச் சுற்றுகளில் ஆடவேண்டும்.
தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து
பூவாதலையா வென்ற இங்கிலாந்து அணி தெனாப்பிரிக்கா அணியை மட்டையாடச் சொன்னது. தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் மிக நன்றாக விளையாடினார்கள். அந்த அணி முதல் 50 ரன்களை 43 பந்துகளிலும், அடுத்த 50 ரன்களை 35 பந்துகளிலும், அதற்கடுத்த 50 ரன்களை 24 பந்துகளிலும், அதற்கடுத்த 18 பந்துகளில் 39 ரன்களையும் எடுத்தது, டி காக் (27 பந்தில் 34 ரன்), டுசன் (60 பந்தில் 94 ரன்), மார்கம் 25 பந்தில் 52 ரன்) சிறப்பாக விளையாடினர். தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்து அணிக்கு நிர்ணயித்த இலக்கு 190 ரன். ஆனால் ஆஸ்திரேலிய அணியை விட அதிக ரன்ரேட் பெற தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்தை 131 ரன்கள் மட்டுமே எடுக்க வைக்க வேண்டும்.
ஆனால் பின்னர் ஆட வந்த இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே தென் ஆப்பிரிக்க அணியை விட அதிக ரன்ரேட்டுடன் ஆடிக்கொண்டிருந்தது. 15ஆவது ஓவரின் கடைசி பந்தில் மலான் ஒரு சிகசர் அடித்தார். அப்பொது இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 125 மூன்று விக்கட் இழப்பிற்கு.
16ஆவது ரபாடா வீசிய ஓவரின் முதல் மூன்று பந்துகளை லிவிங்ஸ்டோன் வரிசையாக மூன்று சிக்ஸ் அடித்து இங்கிலாந்தின் ஸ்கொரை 131 ரன்னுக்கு மேல் கொண்டுவந்தார். இங்கிலாந்து அணி வென்று விடுவார்கள் என அனைவரும் எண்ணிக்கொண்டிருந்த போது கடைசி ஓவரை ரபாடா வீச வந்தார். அவர் அதுவரையில் மூன்று ஓவருக்கு 45 ரன் கொடுத்திருந்தார்.
எனவே வெற்றி சுலபமாகக் கிடைத்துவிடும் என அனைவரும் எண்ணினர். ஆனால் முதல் மூன்று பந்துகளில் ரபாடா ஒரு ஹாட்ரிக் எடுத்தார். அதனால் இங்கிலாந்து அணி தோல்வியுற்றது. வெற்றி பெற்ற போதிலும் தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதிக்குத் தகுதி பெறவில்லை.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளுமே எட்டு புள்ளிகள் பெற்றிருந்த போதிலும் அதிக ரன்ரேட் அடிப்படையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதிபெற்றன.
வழக்கம்போல தெனாப்பிரிக்க அணி கடைசி நேரத்தில் இந்த ஆட்டத்திலும் சொதப்பியது.