வாஷிங்டன்: அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள மிகப் பெரிய இந்துக் கோவிலின் சுவரில் ஸ்வஸ்திக் சின்னம் வரையப்பட்டு, கெட் அவுட் – வெளியேறு என்ற வாசகத்தை சிலர் எழுதியுள்ளனர். இத்தகைய வெறுப்பை உமிழும் வாசகத்தால், இந்துக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் வாழும் இந்துக்களும், இந்தியர்களும் இந்தச் செயலால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதை அடுத்து இது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சியாட்டிலில் உள்ள இந்தக் கோவிலின் சுவரில் எழுதப்பட்ட கெட் அவுட் என்ற வாசகத்தை சில விஷமிகள் வேண்டுமென்றே வெறுப்பை விதைப்பதற்காக எழுதியிருப்பதாகக் கருதப் படுகிறது. வட கிழக்கு அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய இந்துக் கோவில்களில் இது ஒன்று. இப்போது, இந்த விவகாரம் தொடர்பாக ஸ்னோஹோமிஷ் கவுன்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பிரச்னை குறித்து கருத்து தெரிவித்த வாஷிங்டனைச் சேர்ந்த இந்துக் கோவில்கள் மற்றும் கலாச்சார மையத்தின் அறங்காவலர் குழு தலைவர் நித்யா நிரஞ்சன், ”அமெரிக்கா போன்ற நாடுகளில் இத்தகைய செயல் விரும்பத்தக்க செயலல்ல. இது நடந்திருக்கக் கூடாது. வெளியேறு என்று யாரும், யாரையும் சொல்ல முடியாது. இது பல்வேறு இனக் குழுக்கள், இடம் பெயர்ந்து வந்தோர் வாழுகின்ற நாடு. இதை யார் செய்தது என்று தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்புகூட இதே போல சிலர் எழுதினர். ஆனால் அப்போது அதுகுறித்து போலீஸில் புகார் கொடுக்கப் படவில்லை. இப்போது செய்திருப்பது யார் என்று தெரியவில்லை” என்றார். 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில் இது. இந்தக் கோயிலின் 2 வது கட்ட கட்டுமானப் பணிகள் அண்மையில் துவங்கின. இந்தச் செயலுக்கு இந்து அமெரிக்க பவுண்டேஷன் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் இந்துக் கோவில்கள் அவமதிக்கப்படும் செயல் அதிகரித்து வருகிறது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில், இந்தியாவில் மதச் சகிப்புத் தன்மை பற்றி அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து கூறியது குறித்து பொதுமக்கள் பலர் சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர்.
அமெரிக்கா: கோவில் சுவரில் வெறுப்பை உமிழும் வாசகம் கண்டு இந்துக்கள் அதிர்ச்சி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari