
ஆசிய தடகளத்தில் மூன்றாம் நாள் முடிவில், இந்தியா, 5 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கம் பெற்று பட்டியலில் 3ஆம் இடத்தில் உள்ளது.
தாய்லாந்தில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் 28 வீரர்கள், 26 வீராங்கனைகள் என மொத்தம் 54 பேர் பங்கேற்கின்றனர்.
பெண்களுக்கான 100 மீ., தடை ஓட்டத்தின் பைனல் நடந்தது. இந்தியா சார்பில் ஜோதி, நித்யா களமிறங்கினர். மழை காரணமாக மைதானம் ஈரமாக இருந்தது. இருப்பினும் அபாரமாக ஓடிய ஜோதி(13.09 வினாடி) முதலிடம் பிடித்து, இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் பெற்று தந்தார். நித்யா (13.55) நான்காவது இடம் பெற்றார்.
ஆண்களுக்கான ‘டிரிபிள் ஜம்ப்’ போட்டியில் இந்தியாவின் அப்துல்லா அபூபக்கர் களமிறங்கினார். அதிகபட்சம் 16.92 மீ., துாரம் தாண்டிய இவர், தங்கப்பதக்கம் வசப்படுத்தினார்.
ஆண்களுக்கான 1500 மீ., ஓட்டத்தில் இந்திய வீரர் அஜய் குமார் சிரோஜ் 26, 3 நிமிடம் 41.51 வினாடி நேரத்தில் ஓடி, தங்கம் கைப்பற்றினார்.
ஆசிய சாம்பியன்ஷிப்பில் 2017 (தங்கம்), 2019 (வெள்ளி), தற்போது தங்கம் என இவர் வென்ற மூன்றாவது பதக்கம் இது.
ஆண்களுக்கான ‘டெகாத்லான்’ போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் ஷங்கர் பங்கேற்றார். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 100, 400, 1500 மீ., ஓட்டம் உட்பட 10 போட்டியில் பங்கேற்று 7,527 புள்ளி பெற்று வெண்கலம் கைப்பற்றினார்.
பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் ஐஸ்வர்யா, 53.07 வினாடி நேரத்தில் வந்து, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
ஆண்கள் 400 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் அஜ்மல் (45.36 வினாடி) 4வது, ராஜேஷ் (45.67 வினாடி) 6வது இடம் பிடித்தனர். பெண்களுக்கான 10,000 மீ., நடை பந்தயத்தில் சஞ்ஜீவனி (34 நிமிடம், 04.47 வினாடி) 4வது இடம் பெற்றார்.
இதுவரை இந்தியா 3 தங்கம், 3 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கம் வென்றுள்ளது.
