
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
மேற்குஇந்தியத் தீவுகளில் டோமினிக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று இருக்கிறது. தமிழக வீரர் அஸ்வின் 12 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார்.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது அஸ்வின் தன்னுடைய மாயாஜால சுழற்பந்துவீச்சால் அந்த அணியின் முக்கிய வீரர்கள் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் அந்த அணி 64.3 ஓவரில் 150 ரன்களில் ஆட்டமிழக்க, அதில் அஸ்வின் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் முதல் நாளிலேயே இந்திய அணிக்கு 23 ஓவர்கள் ஆடவேண்டி வந்தது.
முதல் நாளில் முதல் இன்னிங்க்சை ஆடிய இந்திய அணியின் அணித்தலைவர் ரோஹித் ஷர்மாவும் டெஸ்ட் போட்டியில் முதன் முறையாக ஆடும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் சிறப்பான தொடக்கம் தந்தனர். அன்றைய நாளின் முடிவில் ரோஹித 30 ரன்னோடும் ஜெய்ஷ்வால் 40 ரன்னோடும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இரண்டாம் நாளில் அணியின் ஸ்கோர் 229 என இருக்கும் நிலையில் ரோஹித் 75.4ஆவது ஓவரில் 103 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஆடவந்த சுப்மன் கில் 6 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 2 விக்கட் இழப்பிற்கு 312 ரன் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 143 ரன்னுடனும் விராட் கோலி 36 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மூன்றாம் நாள் விராட் கோலியுடன் இணைந்து ஆடிய ஜெய்ஷ்வால் 126ஆவது ஓவர் முடிவில் 171 ரன்னுக்கு விக்கட் இழந்து இரட்டைச் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்தார். அவரைத்தொடர்ந்து அஜிங்க்யா ரஹானே சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, ஜதேஜாவும் கோலியும் அணியின் ஸ்கோரை 405 ரன்னுக்கு உயர்த்தினர். அச்சமயத்தில் விராட் கோலி ஆட்டமிழந்தார். அணித்தலைவர் ரோஹித ஷர்மா 152.2ஆவது ஓவரில் அணியின் ஸ்கோர் 421/5 ஆக இருக்கும்போது ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார்.
இரண்டாவது இன்னிங்சிலும் அஸ்வின் விக்கெட் வேட்டை தொடர்ந்தது. ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக மாற வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் எதிர் கொள்ள முடியாமல் தடுமாறி வந்தனர். கேப்டன் பிராத்வெயிட், பிளாக்வுட், எதனாஸ், அல்சாரி ஜோசப், ரஹீம் கார்ன்வால், கீமர் ரோச், வாரிகண் ஆகியோரை அஸ்வின் வீழ்த்தினார்.
இரண்டாவது இன்னிங்சில் 21.3 ஓவர்களை வீசி 71 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்த அஸ்வின் ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஒரே ஆட்டத்தில் 12 விக்கெட்டுகளை அஸ்வின் சாய்த்தார். இதனையடுத்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 482 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதேபோன்று ஒட்டுமொத்த சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் அஸ்வின் தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இறுதியில் இந்திய அணி ஒரு இன்னிங்க்ஸ் 141 ரன் கள் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத்தீவுகள் அணியை முதல் டெஸ்டில் வென்றது. ஆட்ட நாயகனாக யஷஸ்வீ ஜெய்ஸ்வால் அறிவிக்கப்பட்டார்.