- முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
ஒலிம்பிக்ஸ் 2024 – இரண்டாம் நாள் – 28.07.2024
மனு பாக்கர் – 10 மீட்டர் ஏர் பிஸ்டல் – வெண்கலப் பதக்கம்
இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கணை மனுபாக்கர் இன்று, ஞாயிற்றுக்கிழமை பாரீஸ் ஒலிம்பிக் 2024இல் இந்தியாவின் பதக்கக் கணக்கைத் தொடங்கி வைத்தார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெண்கலம் வென்று அவர் வரலாறு படைத்தார். துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்ற பாக்கரின் சாதனை மகத்தானது, இதன் மூலம் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதல் பதக்கத்திற்காக இந்தியாவின் 13 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்தது.
22 வயதான பாக்கர் 221.7 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும், கொரியாவின் கிம் யெஜி 241.3 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், அவரது சகநாட்டவரான ஜின் யே ஓ 243.2 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தையும் வென்றார்.
இந்த வெண்கலப் பதக்கம் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கமாகும். பாக்கரின் உறுதியான செயல்திறன் இந்த பதக்கமில்லா வறட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன், இந்தியா துப்பாக்கிச் சுடுதலில் இரண்டு ஒலிம்பிக்கில் பதக்கம் இல்லாமல் இருந்தது.
குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை பிரீத்தி முதல் ரவுண்டில் வெற்றி
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை ஹரியானாவைச் சேர்ந்த பிரீத்தி பாவார் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அவர் வியட்நாமை சேர்ந்த வோ தி கிம்மை எதிர் கொண்டார். இதில் பிரீத்தி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். 20 வயதான பிரீத்தி, கால் இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் கொலம்பியாவை சேர்ந்த யெனி அரியாசை சந்திக்கிறார். இந்த ஆட்டம் வரும் 31ஆம் தேதி நடக்கிறது.
இகட் ஜரின் தன்னோடு குத்துச்சண்டைப் போட்டியில் விளையாடிய ஜெர்மனி நாடு வீராங்கனையைத் தோற்கடித்து R16சுற்றுக்குள் நுழைந்தார்.
துப்பாக்கி சுடுதலில் இறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் ரமிதா – இளவேனில் வாலறிவன் தேர்ச்சி பெறவில்லை
பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் பிரிவின் தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனைகள் இளவேனில் வாலறிவன், ரமிதா ஆகியோர் விளையாடினர். மொத்தம் 43 வீராங்கனைகள் பங்குகொண்ட இந்த ஆட்டத்தில் முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். இதில் இந்திய வீராங்கனை ரமிதா சிறப்பாக ஆடி 631.5 புள்ளிகளோடு 5ஆம் இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருக்கிறார்.
அதேநேரம், தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் 10ஆவது இடம்பிடித்திருந்தார். 8ஆவது இடம்பிடித்த பிரான்ஸ் வீராங்கனைக்கும் இளவேனிலுக்கும் 0.7 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம். முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற முடியும் என்ற நிலையில் நூலிழையில் தோற்றார் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன்.
தகுதிச் சுற்றில் ஏழாம் இடத்தைபிடித்ததால் அர்ஜுன்சிங் பபுதா ஆண்கள் 100 மீட்டர் ஏர் ரைஃபில் போட்டியில் இறுதிச் சுற்றிற்குச் சென்றார்.
இறகுப் பந்து ஆட்டத்தில் பி.வி.சிந்து, எச்.எஸ். பிரணாய் வெற்றி
தனது முதல் போட்டியில் ஆடிய இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மாலத்தீவு வீராங்கனை ரசாக்கை 21-6, 21-9 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார்.
அதே சமயம் ஆண்கள் பாட்மிண்டன் ஆட்டத்தில் எச்.எஸ். பிரணாய் ஜெர்மனியின் ஃபேபியன் ரோத் என்பவரை எதிர்த்து விளையாடி 21-18, 21-12 என்ற நேர் செட்டுகளில் வெற்றிபெற்றார்.
துடுப்புப் படகு பன்வர் பால்ராஜ் முன்னேற்றம்
ஆண்களுக்கான துடுப்புப்படகு போட்டியில் ரீப்பேஜ் சுற்றில் இந்திய வீரர் பன்வர் பால்ராஜ் இரண்டாம் இடம்பிடித்தார். இதன்மூலம் காலிறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றிருக்கிறார்.
டேபிள் டென்னிஸ்
(அ) மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்ரீஜா அகுலா இரண்டாம் சுற்றில் கிறிஸ்டியானா கில்பெர்க் என்ற ஸ்வீடன் நாட்டு வீராங்கணையைத் தோற்கடித்து அடுத்த சுற்றான R32க்குள் நுழைந்தார்.
(ஆ) மற்றொரு ஆட்டத்தில் மணிகா பத்ராவும் இங்கிலாந்தின் அன்னா ஹுர்சியத் தோற்கடித்து அடுத்த சுற்றான R32க்குள் நுழைந்தார்.
(இ) ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஷரத் கமல் ஸ்லோவேனியாவின் டெனி கோசுல் என்ற வீரரிடம் 4-2 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றார்.
நீச்சல் போட்டி
ஆண்கள் பேக்ஸ்ட்ரோக் 100 மீட்டர் போட்டியில் ஸ்ரீஹரி நடராஜ் தோல்வியடைந்தார். மகளிர் 200 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் போட்டியில் தினிதி (டெ)ஸிங்கு தோல்வியடைந்தார்.
வில்வித்தை
மகளிர் குழு போட்டியில் அங்கிதா பக்த், பஜன் கவுர், தீபிகா குமாரி ஆகியோரைக் கொண்ட இந்திய அணி நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 6-0 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தது.
இருப்பினும் கால் இறுதிப் போட்டியில் விளையாடிய இந்திய மகளிர் அணி அர்ஜெண்டைனாவிற்கு எதிராக 0-6 என்ற புள்ளி கணக்கில் தோற்றதால் போட்டியில் இருந்து வெளியேறியது.
டென்னிஸ்
சுமித் நாகல் ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் ஃப்ரான்சின் கொரெண்டின் மௌடெட் என்ற வீரரிடம் முதல் சுற்றில் தோற்று போட்டியில் இருந்து வெளியேறினார்.