சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் – 42
தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
ஸ்தாலீ புலாக நியாய: – ஸ்தாலீ – பாத்திரம், புலாகம் – பருக்கை.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
பானையில் கொதிக்கும் அரிசிச் சோறு வெந்துவிட்டதா இல்லையா என்று பார்ப்பதற்கு சமைப்பவர் அதிலிருந்து கையால் ஒரு பருக்கையை எடுத்து விரல்களால் நசுக்கிப் பார்ப்பார். அரிசி வெந்ததா என்று பார்க்கும் சோதனை இது. ஒரு பருக்கையைப் பார்த்தால், பானையில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான பருக்கைகளின் நிலைமையை அறிந்து கொள்ளும் விஞ்ஞானப் பூர்வமான முறை இந்த ‘ஸ்தாலீ புலாக நியாயம்’.
இக்காலத் தலைமுறையினருக்கு இது புதிய சொல்லாகத் தோன்றலாம். கொஞ்சம் மரபு சார்ந்த நியம நிஷ்டைகளை அறிந்தவர்களுக்கு, ‘ஸ்தாலீபுலாகம்’ என்ற சொல் பரிச்சயமானதே.
ஆவக்காய் ஊறுகாய் போடுவதற்காக மாங்காய் பறிக்க ஒருவர் மாந்தோட்டத்திற்குச் சென்றார். அங்கு மாமரங்களில் மாங்காய் நிறைய காய்த்திருந்தது. ஊறுகாய் போடுவதற்கு புளிப்பு மாங்காய் வேண்டுமென்று தோட்டக்காரரிடம் கேட்டார். அவர் ஒரு மரத்திடம் அழைத்துச் சென்று அதிலிருந்து ஒரு காயைப் பறித்து கத்தியால் ஒரு துண்டு வெட்டி அவரிடம் கொடுத்தார். அதைக் கடித்துப் பார்த்துவிட்டு, “நல்ல புளிப்பாக இருக்கிறது. நூறு காய்கள் பறித்துத் தாருங்கள்” என்று கேட்டார்.
மரத்துக் காயில் ஒன்றை ருசி பார்த்தால் அந்த மரத்தின் காய்கள் எல்லாம் அதே ருசியில் இருக்கும் என்பது அனுபவம். இதே முறை இனிப்பு மாம்பழம் வேண்டுமென்றாலும் பயன்படும். ஒரு பழத்தின் ஜூசைப் பிழிந்து கொடுப்பார்கள். அந்த மரத்தின் பழங்கள் எல்லாம் ஒரே வித ருசியில் இருக்கும். இதுவே ‘ஸ்தாலீ புலாக நியாயம்’
ஒரு நூலுக்கு விமரிசனம் எழுதுபவர், “இந்தப் புத்தகத்தில் உள்ள நூறு கவிதைகளும் ஊக்கமளிக்கும் விதமாக உள்ளன. ‘ஸ்தாலீ புலாகமாக’ இரண்டு கவிதைகளை எடுத்துக் கொள்வோம்” என்று எழுதுவார். அப்படியென்றால் என்ன? ஒரு கவிதையின் மதிப்புரையைப் பொறுத்து மீதி உள்ளவற்றை யூகித்துக் கொள்ளலாம் என்று வாசகர்களுக்குக் கூறுகிறார். இதுவே ஸ்தாலீ புலாக நியாயத்தின் சிறப்பு,
பானையில் இருந்து எடுத்துப் பார்த்த பருக்கை சரியாக வேகவில்லை என்றால் என்ன செய்வோம்? பானை சாதமும் இன்னும் வேகவில்லை என்று தீர்மானிப்போம். தேவையானால் சிறிது நீர் சேர்ப்போம். இன்னும் சற்று நேரம் அடுப்பில் வைப்போம். வேண்டுமென்றால் அடுப்பின் எரிபொருளை சரிசெய்து ஏற்றுவோம்.
ஒரு வெந்த பருக்கையானது, மீதி உள்ள அரிசிகள் எல்லாம் வெந்து விட்டன என்று சான்றிதழ் அளிக்கிறது. இதுவே இந்த நியாயத்திலுள்ள சிறப்பு. நம் கைக்குக் கிடைத்த பருக்கையைப் பொறுத்து நாம் எடுக்கும் தீர்மானம் அது.
இந்த நியாயத்தின் ஆழமான அர்த்தத்தை ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர். ஒரு மனிதன் செய்யும் நல்ல செயல் அந்த குடும்பத்திற்கே கௌரவத்தை அளிக்கிறது. அதற்கு மாறாக ஒரு மனிதன் செய்யும் மோசம் அந்த குடும்பதிற்கே கெட்ட பெயரை வாங்கிக் தருகிறது. தீய செயல் செய்தவனின் குடும்பத்தைப் பற்றி, “அந்த குடும்பமே அப்படிப்பட்டது. மோசமானது” என்று சமுதாயம் முத்திரை குத்திவிடும். நல்லவற்றை விட கெட்ட செயல்களே விரைவாகப் பரவும்.
இளைஞர்களில் ஒரு சிலர் ஒழுக்கமின்றி கிளப்புகளிலும் பப்புகளிலும் காலம் கழிக்கிறார்கள் அந்தத் தீமை இளைய சமுதாயத்தில் அனைவரின் மீதும் சுமத்தப்படுவதைப் பார்க்கிறோம். இளைய சமுதாயமே கெட்டுப் போய் விட்டது என்று அங்கலாய்க்கிறோம்.
மறுபுறம், ஆன்மீக குருமார்களின் நிறுவனங்களிலும், தன்னார்வு நிறுவனங்களிலும் மிகவும் ஒழுக்கத்தோடு நடந்து கொள்ளும் இளைஞர்களும் இல்லாமல் இல்லை. நமக்குத் தட்டுப்படுபவரின் நடத்தையைப் பொறுத்து நாம் ஒரு முடிவுக்கு வருகிறோம். இதுவே இந்த நியாயத்தின் உட்பொருள்.
சில மனிதர்களோடு நமக்கு ஏற்படும் அனுபவத்தை, அவருடைய குடும்பத்திற்கு மட்டுமின்றி, அவர் வசிக்கும் பகுதிக்கும், அந்த மாவட்டத்திற்கும் கூட பொருத்திப் பேசுகிறோம். அந்த மாவட்டத்துக்காரர்களே அப்படித்தான். அவர்களை நம்பக் கூடாது என்றோ, அந்த குலத்தவர் கஞ்சக் கருமிகள். பூனைக்குக் கூட பிச்சை போடமாட்டர்கள். தானம் செய்யும் குணமே அவர்களிடம் கிடையாது என்றோ விமரிசனம் செய்வதைப் பார்க்கிறோம். சிலருக்கு நல்ல பெயர் சூட்டப்படுவதும் நடக்கிறது. நமக்குக் கிடைக்கும் தனிப்பட்ட அனுபவத்தைப் பொறுத்து இப்படிப்பட்ட அபிப்பிராயங்களுக்கு வருகிறோம்.
எனக்குத் தெரிந்த சிலர் குறிப்பிட்ட மாவட்டத்தின் பெயரைச் சொல்லி, “இந்த மாவட்டக்காரர்களுக்கு இங்கிதம் கிடையாது. அந்த நதி நீரின் பாதிப்பு அப்படி” என்று நிந்திப்பதைக் கேட்டிருக்கிறேன். மானுட அகங்காரமும், மனதின் பலவீனமும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
“ஸ்டூவர்ட்புரம் எதற்குப் புகழ் பெற்றது?” என்று கூகுளில் தேடிப் பாருங்கள். “ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள இந்த கிராமம், திருடர்கள், பிக்பாகெட்காரர்கள், அரசியல் ஊழல்வாதிகள் ஆகியவற்றுக்குக் புகழ்பெற்றது” என்று பதில் வரும். எப்போதோ அந்தப் பிரதேசத்தில் இருந்த மூதாதையர்களின் நடத்தை அப்படிப்பட்டதாய் இருந்ததால் அந்தப் பெயர் வந்து விட்டது. ஸ்தாலீபுலாக நியாயம் என்றால் இதுவே அல்லவா.
நம் அண்டை தேசமான பாகிஸ்தான், 1948 முதல் நம் தேசத்தின் மீது செய்யும் அராஜகத்தின் காரணமாக பயங்கரவாத தேசமாக முத்திரையிடப்பட்டது.
இந்தியர்கள் தம்தம் வேலை காரணமாக பலவேறு தேசங்களில் நிலைபெற்றுள்ளார்கள். மிக அதிகமான, வெளிநாடு வாழ் இந்தியர்கள், தம் சிறந்த நடத்தை காரணமாக நல்ல ஒழுக்கம் நிறைந்தவர்களாகப் பெயர் எடுத்துள்ளார்கள். இந்தியர்கள் நல்லவர்கள் என்ற பெயர் நிலைத்து விட்டது.
இதற்கு மாறாக, மியான்மாரில் (பர்மா) உள்ளூர்வாசிகளான பௌத்தர்களின் மீது கொடுமைகள் செய்து வரும் ரோஹிங்காக்கள், சட்டவிரோதமாக போதைப் பொருள் வியாபாரம், பசுக்கள் மற்றும் மனிதர்களின் சட்டவிரோதமான கடத்தல் போன்ற தீய செயல்களில் ஈடுபடுவதால் அவர்களை அங்கிருந்து விரட்டிவிட்டார்கள். அவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து பல்வேறு மாநிலங்களில் வசிக்கத் தொடங்கினார்கள். தேச விரோத சக்திகள் இவர்களுக்கு உடந்தையாக நிற்கிறார்கள். மதத் தொடர்பான பிரச்சினைகளை உருவாக்குவதில் இவர்கள் நிபுணர்கள். அதன் காரணமாக ரோஹிங்காக்கள் என்றாலே எப்படிப்பட்ட அபிப்பிராயம் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே.
என் நண்பர்களில் ஒருவர் அண்மையில் ஈரான் தேசத்திற்குச் சென்றார். அங்கு அவருக்கு எதிர்ப்பட்ட மூன்று, நான்கு கார் டிரைவர்கள் மிகவும் கௌரவமாக நடந்து கொண்டார்களாம். அது குறித்து முகநூலில் பதிவிட்டு, “அந்த ஏரியாவில் இருக்கும் டிரைவர்கள் நேர்மையானவர்கள்” என்று தன் அபிப்பிராயத்தை வெளியிட்டார். நமக்கு எதிர்ப்பட்ட பருக்கை வெந்தால், பானை சோறும் வெந்தாற்போலத்தான் என்று எண்ணுவது சகஜமே அல்லவா.
ஒவ்வொரு பிரிவிலும், ஒவ்வொரு வர்க்கத்திலும் எடுத்துக்காட்டான மனிதர்கள் இருப்பார்கள். அதற்கு எதிரான மனிதர்களும் இருப்பார்கள். சுவாமி விவேகானந்தரும் ஸ்ரீஅரவிந்தரும் பிறந்த வங்காளத்தில் தோன்றியவர்கள் அனைவரும் சாதுக்கள் அல்ல அல்லவா. அப்துல்கலாம் ஐயாவைக் கொண்டு தமிழ்நாட்டவர்கள் எல்லோரும் அவரைப் போன்றவர் என்று கூற இயலாதல்லவா.
ஒரு சிறந்த தந்தை தன் புதல்வனுக்கு இவ்விதம் அறிவுரை கூறுவார். “மகனே, சரியாக நடந்து கொள். நம் குடும்பத்தில் யார் சிறிய தவறு செய்தாலும் குடும்பத்திற்கே கெட்டபெயர் வந்துவிடும். ஜனங்கள், பெற்றவர்களையும் மூதாதையரையும் கூட இகழ்வார்கள். கவனமாக இரு” என்பார்.
ஒவ்வொரு மனிதரும் சரியாக நடந்து கொண்டால், ஊருக்கும் தேசத்திற்கும் நல்ல பெயர் கிடைக்கும் என்று கூறுகிறது இந்த நியாயம். யாரோ ஒருவர் தவறு செய்தால் எல்லோரையும் ஏன் குறை கூற வேண்டும் என்று கேட்டால், அது அப்படித்தான். அதுதான் உலகத்தின் வழி. கௌரவர்கள் நூறு பேரில் துரியோதனனின் தீய நடத்தையால் மீதி தொண்ணூற்று ஒன்பது பேருக்கும் கெட்ட பெயர் வந்ததல்லவா.
ஸ்தாலீ புலாக நியாயத்தில் சில வரைமுறைகளும் இல்லாமல் இல்லை. குக்கர் வருவதற்கு முன், சமையலோடு அறிமுகம் உள்ளவர்களுக்கு, ‘பானை நடுவில் வேகாத சோறு’ என்ற அனுபவம் இருக்கும். அதாவது பானையில் சோதித்த ஒரு பருக்கை வெந்திருக்கும். ஆனால் சில பருக்கைகள் வேகாமல் இருந்து விடும். அவை பானையின் நடுவில் இருக்கும்.
இந்த அனுபவத்தை நினைக்கும் போது அண்மையில் நடந்த ‘எக்சிட் போல்’ முடிவுகள் நினைவுக்கு வருகிறது. நிருபர்கள் சந்திக்கும் குறிப்பிட்ட சிலரை வைத்துக் கொண்டு எல்லோருடைய அபிப்பிராயமும் இதுதான் என்று முடிவுக்கு வருவது. ஓரொரு முறை சர்வே செய்தவர்களின் முடிவுகள் செல்லாது போய் விடும். பானை நடுவில் வேகாத பருக்கைகள் போல.
“ஒரு மரத்தில் காய்க்கும் காய்கள் ஒரே ரகம். ஒரு கொடியில் மலரும் பூக்கள் ஒரே ரகம். ஆனால் ஒரு தாய்க்குப் பிறக்கும் பிள்ளைகள் ஏன் ஆளுக்கொரு ரகம்?” என்று பாடினார் ஒரு கவிஞர்.
ஒரு மரத்தில் காய்க்கும் ஒரு காயின் ருசி எல்லா காய்களுக்கும் இருப்பது போல, ஒரு குடும்பத்தில் ஒருவர் செய்யும் தவறோ, சரியோ அனைவருக்கும் பொருத்துமா? இது அநியாயம் இல்லையா?