30 ஆண்டுகள் கழித்து உக்ரைன் சென்றுள்ள முதல் பாரதப் பிரமதர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்! இந்த முறை, தனது ஐரோப்பிய பயணத்தில், போலந்து, பின் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் ஆகிய நாடுகளுக்கும் விஜயம் செய்தார் பிரதமர் மோடி.
உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள அதிபர் மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் தோளில் கை போட்டபடி, தனது அன்பை பிரதமர் மோடி வெளிப்படுத்தினார். இது உலகின் கவனத்தைக் கவர்ந்திருந்தது.
அரசு முறை பயணமாக உக்ரைன் சென்றுள்ள பிரதமர் மோடி, கீவ் நகரில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முதலில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பிறகு, போரில் உயிரிழந்த குழந்தைகளுக்கு பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் போரினால் ஏற்பட்டுள்ள பேரழிவுகளைக் குறிப்பிட்டு, ரஷ்யாவுடனான போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேசியதாகத் தெரிகிறது.
உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணிப்பது எப்போதுமே அதிக முக்கியத்துவம் கொண்டு உன்னிப்பாகப் பார்க்கப்படும். அவர் தங்கள் நாடுகளுக்கு வர வேண்டும் என்ற ஆவலில், உலக நாடுகள் பலவும் ஆர்வமுடன் அழைப்பு விடுத்த வண்ணம் உள்ளன.
பிரதமர் மோடியின் முக்கியத்துவம் வாய்ந்த வெளிநாட்டு பயணங்களில் தற்போது ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக, உலக நாடுகளின் பார்வையில் உற்று நோக்கப்படுவது உக்ரைன் பயணம்! போரினால் சகஜ நிலையில் இல்லாமல் தத்தளித்து வரும் அந்நாட்டுக்கு பிரதமர் மோடி இன்று பயணம் செய்தார்.
வழக்கமாக மேற்கொள்ளும் விமான பயணமாக இல்லாமல், இம்முறை ரயிலில் உக்ரைன் தலைநகர் கீவுக்கு பயணித்தார் பிரதமர் மோடி. இதற்காக அவருக்கு என சிறப்பு ரயில் ஒன்றும் தேர்வு செய்யப்பட்டிருந்தது. Force One எனப் பெயர் கொண்ட அந்த ரயிலில் பாதுகாப்பு வசதிகள் பல உண்டு. சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன், அதிக சொகுசு வசதிகளும் கொண்ட ரயிலாக Force One உள்ளது.
Force One ரயிலில் பிரதமர் மோடிக்கு முன்பாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஷோல்ஸ் ஆகியோர் உக்ரைன் சென்றுள்ளனர். சுற்றுலா பயணிகளுக்கு என்றே 10 ஆண்டுக்கு முன்பு இந்த ரயில் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் போர்க்கள பூமியாக உக்ரைன் நாடு மாறிய நிலையில், அங்கு வி.வி.ஐ.பி.க்கள் செல்வதற்காக பயன்படுத்தப்படும் ரயிலாக மாறிவிட்டது!
உக்ரைனில் இரு தரப்பு உறவுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் இந்தியா சார்பில் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. இதனை பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் ஒப்படைத்தார்.
உக்ரைனில் கால் பதித்து இறங்கிய தொடக்கம் முதலே அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நெருக்கம் காட்டி தோளில் கைபோட்டபடி, வருத்தங்களையும் பகிர்ந்து கொண்டு, சமாதானப் பேச்சுகளைத் தொடங்கும்படி அவர் உக்ரைன் அதிபரிடம் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. அதனால் தான் காந்தி சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, அடுத்து போரினால் உயிரிழந்த குழந்தைகளின் நினைவு இடத்துக்குச் சென்று மலரஞ்சலி செலுத்தினார் மோடி.
பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நெருக்கம் காட்டியுள்ள படங்கள் சமூகத் தளங்களில் அதிகம் பகிரப்பட்டன. இதனிடையே பிரதமர் மோடி உக்ரைனில் இருப்பதால், ரஷ்யா தனது தாக்குதல்களை இன்று நிறுத்தி வைத்தது.