ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் செல்போனில் சமூகத் தளங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் ஒரு வயதுக் குழந்தைகள் தொடங்கி 18 வயது நிரம்பாத சிறார்கள் வரை தற்போது செல்போன், சமூக ஊடகங்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஆஸ்திரேலிய அரசின் இந்த விதியை மீறும் நிறுவனங்களுக்கு ரூ 250 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று அந்த மசோதாவில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஏற்கெனவே பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் உள்ள சில மாகாணங்களில், பெற்றோரின் அனுமதியின்றி சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டங்கள் இயற்றப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவிலும் இந்த அணுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா குறித்து பேசிய அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ், “குழந்தைகளை அவர்களின் செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் இருந்து விலக்கி விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளங்கள், டென்னிஸ் மைதானங்களில் பார்க்க விரும்புகிறேன். அவர்கள் உண்மையான நபர்களுடன் உண்மையான அனுபவங்களைப் பெற வேண்டும் என்று விரும்புகிறோம்.
“ஏனென்றால் சமூக ஊடகங்களில் சில, தீங்கு விளைவிப்பதாக இருக்கிறது. சமூக ஊடகங்களில் உள்ள தகவல்கள் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தில் தாக்கங்கள், அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இருப்பது கவலை அளிக்கிறது. இது உலகளாவிய பிரச்னை. இதில் தீர்வு காண உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் முயற்சிகளை எடுத்து வருகின்றன” என்று கூறினார்.
இதை அடுத்து, ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியது.