
ஒருவருக்கு பரிசு கொடுத்தால் அது பேசுபொருளாகும் என்பது வழக்க்ம். ஆனால் ஒருவருக்கு பரிசு கொடுக்கப்படாததே பேசுபொருளாகி சரித்திரம் படைக்கப்பட்டுள்ளது. இந்த முறை அமைதிக்கான நோபல் பரிசு எனக்குத்தான் என்று கட்டம் கட்டி தம்கட்டி பிரசாரம் செய்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெருத்த ஏமாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறார். இனி உலகம் என்ன ஆகுமோ என்ற கவலையில் உலகத் தலைவர்கள் பலர் இப்போதே கவலைப்படத் தொடங்கிவிட்டனர். காரணம், நோபல் கிடைக்காத விரக்தியில் இன்னும் என்னவெல்லாம் கோமாளித்தனங்களைச் செய்வாரோ டிரம்ப் என்ற அச்சவுணர்வுதான்!
அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஆசைப்பட்டு, நான் ஏழு போர்களை நிறுத்திவிட்டேன் என்று டிரம்ப் கூச்சநாச்சமின்றி வெளிப்படையாகவே உலக அளவில் திராவிட அரசியலைச் செய்துவந்தார். ஆனால் அவரை உசுப்பேற்றுவதற்கென்றே இந்தாண்டுக்கான நோபல் பரிசுக்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை.
இப்படி ஒருவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்படவில்லை என்று கூறும் அளவுக்கு, எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு முக்கியத்துவம் பெற்றது. அதற்கு அமெரிக்க அதிபர் டிரம்பே காரணகர்த்தா ஆகிப்போனார். அவர் என்னதான் திரும்ப திரும்ப நான் போர்களை நிறுத்திவிட்டேன் என்றும், இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே ஏற்படவிருந்த அணு ஆயுதப் போரை வர்த்தகத்தைக் காரணம் காட்டி நான் நிறுத்தினேன் என்றும் கூறிக் கொண்டிருந்தாலும், அவரது பேச்சை எவருமே சட்டை செய்யவில்லை என்பது இப்போது நிதர்சனம் ஆகிவிட்டது.
இதற்காக எத்தனை பேர் உலக அளவில் டிரம்புக்கு முட்டுக் கொடுத்தார்கள்! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் கூட, டிரம்ப் நோபல் பரிசுக்குத் தகுதியானவர் என்றார். நேற்று கனடா அதிபர் அந்தக் குரலை எதிரொலித்தார். பல தலைவர்களும் டிரம்பை காக்காபிடிக்க அவர் விரும்பிய வண்ணம் குளிர்விக்கும் சொற்களைச் சொல்லி, ஏதோ சாதித்துக் கொள்வோமே என்று வரிசைகட்டினார்கள்.
டிரம்போ, ‘எனக்கு நோபல் பரிசு தராவிட்டால் அது அமெரிக்காவுக்கு பெரும் அவமானம்’ என்றார். இதனால் நோபல் பரிசு இந்த முறை அனைவரது கவனத்தையும் பெற்று, பரிசு யாருக்கு அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்தப் பின்னணியில், அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு என்பதை நார்வே நாட்டு பார்லிமென்ட் குழு அறிவித்தது.
வெனிசுலா பெண்மணிக்கு…
ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த வேதியியலாளர் ஆல்பிரட் நோபல் பெயரில் ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. மனித குலத்துக்குப் பலனளிக்கும் வகையில் செயல்படுவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இது, உலகின் மிகவும் உயரிய விருதாகக் கருதப்படுகிறது.
அதன்படி, 2025ம் ஆண்டுக்கான உலக அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நார்வே பார்லிமெண்டால் நியமிக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழு பரிசீலனையில் உள்ளோரில் ஒருவரை விருதுக்கு உரியவராகத் தேர்வு செய்து அதிகார பூர்வமாக அறிவித்தது. நோபல் பரிசு பெறுவோருக்கு பதக்கத்துடன் ரூ.10 கோடி பரிசுத் தொகையும் கிடைக்கும். அதன்படி, இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது. வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக போராடியதற்காக 2025ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு அறிவிக்கப்படுவதாக நார்வே குழு தெரிவித்தது.
இதன்மூலம், டிரம்ப் ஏற்கெனவே சொன்னபடி, டிரம்புக்குக் கொடுக்கப்படாததால், அமெரிக்காவுக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டிருக்கிறது என்பதே பொருளாகியுள்ளது.
ஏற்கெனவே அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு கொடுத்ததையே விமர்சனம் செய்து வந்த டிரம்ப், தனக்கு பரிசு கிடைக்கவில்லை என்பதால் கண்மூடித்தனமாக மனதில் தோன்றும் விமர்சனங்களையும் வார்த்தைகளையும் புலம்பல்களையும் அள்ளித் தெளிப்பாரே என்ற அச்சம் பரவலாக ஏற்பட்டுள்ளது.
நோபல் பரிசு மோகத்தில், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவை கடுமையாக விமர்சித்தார் டிரம்ப். நோபல் பரிசு என்றால் என்ன என்றே தெரியாதவர் அவர் என்றார். “அவர் எதையுமே செய்யவில்லை. அவருக்கு பரிசு கிடைத்திருக்கிறது. அந்த பரிசு என்னவென்று கூட அவருக்கு தெரியாது. நம் நாட்டை அழித்த அவரை தேர்ந்தெடுத்து, விருது கொடுத்தார்கள். அவர் ஒரு சிறந்த அதிபராக இருந்தது கிடையாது. நான் 8 போர்களை நிறுத்தி இருக்கிறேன். இதற்கு முன்பு இப்படி நடந்ததே இல்லை.” என்று பட்டவர்த்தனமாக நோபல் ஆசையில் வார்த்தைகளை உதிர்த்தும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
8 போர்களை நிறுத்தியதாக டிரம்ப் சொன்னாலும், அவர் பேச்சை பல நாடுகளும் மறுத்தன. முக்கியமாக இந்தியா பட்டவர்த்தனமாக மறுத்தது. ஆபரேஷன் சிந்தூர் நிறுத்தப்பட்டது, பாகிஸ்தான் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் தான் என்று இந்தியா சொன்னாலும், பின்னணியில் அமெரிக்காவின் பாதுகாப்பில் இருந்த கிரானா ஹில்ஸ் பகுதியில் உள்ள அணு ஆயுத சேமிப்புக் கிடங்கில் இந்தியா தாக்கியதும், அதனால் செய்வதறியாது அமெரிக்காவே போரை நிறுத்த பாகிஸ்தான் மூலம் கெஞ்ச வைத்ததும் உலகுக்குத் தெரியத் தொடங்கியது.
ஆனால் அடிவாங்கியும் அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவத் தளபதி, அங்கே விருந்துண்டு அதற்கு நன்றிக்கடனாக, அமெரிக்க அதிபருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட வேண்டும் என்றார். ஆனால் இந்தியாவின் மீது போர்களைத் திணித்து, பயங்கரவாதச் செயல்களின் மூலம் உலகில் அமைதியின்மையை உருவாக்கிக் கொண்டிருக்கும் ரௌடி நாடு என்று பெயரெடுத்த பாகிஸ்தானுக்கு, பணமும் உதவியும் ஆயுதங்களும் கொடுத்து வரும் அமெரிக்க அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு என்பதற்கான தகுதி என்ன என்பது இன்று புரிந்திருக்கக்கூடும்!





