
டாக்கா: சென்ற வாரம் முழுதும் இந்தியாவெங்கும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம், இலங்கையில் நடைபெற்ற நிதாஹாஸ் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இந்தியாவுக்கு பெரும் வெற்றியைத் தேடித் தந்த தினேஷ் கார்த்திக்கின் சமயோஜிதம்தான்! அந்தப் போட்டியில் வங்கதேசம் வெற்றியின் விளிம்புக்குச் சென்று தோல்வியைத் தழுவியது. ஒரே பந்தில் வெற்றியைத் தட்டிப் பறித்தார் தினேஷ் கார்த்திக்.
இந்தச் செய்தியின் பின்னணியில் வேறு சில நிகழ்வுகளும் வங்கதேசத்தில் அரங்கேறின. கடைசி வரை வெற்றி பெறுவோம் என்ற மிதப்பில், பாம்பு டான்ஸெல்லாம் ஆடி, மைதானத்தில் இந்திய ரசிகர்களை வெறுப்பேற்றினர் வங்கதேச வீரர்கள். ஆனால் சிக்ஸர் ஆன அந்தக் கடைசி பந்து, பாம்பு டான்ஸ் ஆடிவர்களுக்கு மிக்ஸர் கொடுத்து இந்திய வீரர்களின் கீரி டான்ஸை பார்க்க வைத்துவிட்டது. மைதானத்தில் சோர்ந்து விழுந்து தேம்பித் தேம்பி அழுத வங்கதேச வீரர்களின் சோகத்தை வங்க தேசத்தில் தீவிர கிரிக்கெட் வெறியர் ஒருவரும் அனுபவித்தாராம்.
வங்க தேசத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலும் கூட அப்படி ஒரு படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்தது. வங்க தேச தோல்வியின் விளைவாக, ஒரு குழு, ரசிகர் ஒருவரின் கழுத்தை அறுத்து, ரத்த வெள்ளத்தில் மிதந்து கொலை செய்த காட்சி எனும் வகையில் அது பரப்பப் பட்டது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நேற்று வங்கதேசத்தில் ஒருவரை கைது செய்த போலீஸார், அவர் கொலையுண்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலானதாகவும், அதை நம்பி, கொலையுண்டவரின் உடலைத் தேடி அலைந்த போது, அது கிடைக்காத நிலையில், தகுந்த விசாரணை மூலம் அந்த நபரைக் கண்டு பிடித்ததாகவும், கிரிக்கெட் ’பெட்’டில் 1,800 டாலர் தோற்றதால் அந்தப் பணத்தைக் கொடுக்க வழி தெரியாமல் இவ்வாறு ரத்த சிவப்புள்ள புரூட் ஜூசை கழுத்திக் கொட்டி அந்த நபர், தான் செத்துப் போனதாக நாடகம் ஆடியதாகவும் கூறினர்.
இந்தச் சம்பவம் வெகு சுவாரஸ்யமானதுதான். அடெல் ஷிக்தர் என்பவரின் ரத்தக் கறை படிந்த கொலையான வீடியோ ஒவ்வொரு நாளும் 10,000 முறைகளுக்கு மேல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார், சம்பந்தப் பட்ட நபரின் உடல் எங்கே என்று தேடினர்.
அந்த நபரின் பெயர் ஷிக்தர். 28 வயது இளைஞர். இலங்கையில் நடைபெற்ற நிதாஹஸ் கோப்பை டி20 போட்டியில், வங்கதேசம் வெற்றி பெறும் என்று இன்னொரு நபரிடம் பெட் கட்டியிருந்தார் ஷிக்தர். அதுவும் குறைந்த பணம் இல்லை… 1,50,000 டாகா. சுமார் 1,800 டாலர்.
அதற்கு முன்னர், இதே தொடரில், இலங்கைக்கும் வங்க தேசத்துக்கும் நடந்த அரை இறுதிப் போட்டியில், வங்க தேசம் வெற்றி பெறும் என்று பெட் கட்டினார் ஷிக்தர். அதற்கு ஏற்ப வங்க தேசமும் வெற்றி பெற, அவருக்கு பெட் மூலம் 40,000 டாகா கிடைத்துள்ளது. இதனால் குஷியான ஷிக்தர், அடுத்த போட்டிக்கும் பெட் கட்ட தீர்மானித்தார். ஆனால், தொகை மட்டும் பெரிதாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்.
அதன்படி, போட்டியும் விறுவிறுப்பாக நடந்தது. வங்கதேசம் கடைசிக் கட்டத்தில் உறுதியான வெற்றியை நோக்கி நகர்ந்தது. ஆனால், கடைசி இரு ஓவர்கள், அந்த அணிக்கு வெற்றியா தோல்வியா என்ற தள்ளாட்டத்தைத் தந்தது. இருந்தாலும் விடவில்லை ஷிக்தர். இந்த முறை கட்டிய பெட் 1,50,000 டாகா ஆயிற்றே. கடவுளிடம் மன்றாடினார். வங்கதேச அணி வென்றால், தமக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்று ஆசைப்பட்டார்!

ஆனால், தினேஷ் கார்த்திக் ஒரு பந்தில் அவரது ஆசையைக் கடத்திக் கொண்டு போய் விட்டார். வங்கதேச அணி தோற்றது. இதனால், தான் எப்படியாவது அந்த 1,50,000 டாகா பணத்தைக் கொடுத்தாக வேண்டுமே என்று கவலையில் ஆழ்ந்தார் ஷிக்தர். பின் ஒரு முடிவுக்கு வந்தார். பெட் பணம் கொடுக்க வேண்டிய நபரை ஏமாற்ற திட்டமிட்டார். அதற்கு, தான் செத்துவிட்டது போல் கதை கட்டிவிட்டால் போதுமே என்று யோசித்தார். சினிமாவில் பகுதி நேர வீடியோகிராபரை சந்தித்தார். அவரிடம் தான் கொலையாவது போல் வீடியோவை லைவ்வாக தயாரிக்க வேண்டும் என்று கூறினார். அந்த நபரும் இவரது எண்ணப்படியே, மேக் அப் போட்டு சமாளித்து விடலாம் என்று கூறினார்.
அந்த வீடியோவில் மூன்று பேர் வந்தனர். இருவர் ஷிக்தரின் கழுத்தை அறுத்தனர். அதிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அப்படியே மயங்கிக் கீழே விழுந்தார் ஷிக்தர். அந்தக் காட்சிகள் வீடியோவாக தயாரிக்கப்பட்டது. இதை அடுத்து, தனது தம்பிக்கு போன் செய்து, குரலை மாற்றிப் பேசிய ஷிக்தர், அந்த உடல் சிட்டகாங்க்குக்கு சுமார் 200 கி.மீ. தொலைவில் போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார். இந்தத் தகவலைக் கேட்டு அவரது பெற்றோர் கதறினர். உடனே போலீஸில் புகார் கொடுக்கப் பட்டது.
இதற்கிடையே, வேறொரு செல் போனில் இருந்து ஷிக்தர் பெட் கட்டிய நபருக்கும் அந்த வீடியோ பலமுறை பகிரப் பட்டது. தொடர்ந்து இந்த வீடியோ வைரலானது. போலீஸார் ஷிக்தரின் உடலைத் தேடித் தேடிக் களைத்தனர். பின் வேறு ஒரு வகையில் விசாரணையை தீவிரப் படுத்தினர். இந்த முறை, இந்த வீடியோவை எடுத்த வீடியோகிராபர் அகப்பட்டார். அவரை வழக்கப்படி விசாரித்ததில் நடந்தவற்றை அவர் சொல்லியுள்ளார். பின்னர், ஃபரித்புர் மாவட்டத்தில் பதுங்கியிருந்த ஷிக்தர் வசமாக அகப்பட்டுக் கொண்டார்.

இது குறித்து போலீஸாரிடம் கூறிய ஷிக்தர், வெறுமனே பெட்டிங் கட்டிய நபரை ஏமாற்ற வேண்டும்; பணம் எதுவும் அவருக்கு கொடுத்துவிடக் கூடாது என்றுதான் இவ்வாறு நாடகம் ஆடியதாகவும், அது இவ்வளவு பெரிய சிக்கல்களையும் பரபரப்பையும் ஏற்படுத்தும் என்று தனக்குத் தெரியாது என்றும் அழுது புலம்பினார். ஷிக்தரின் பேச்சு செய்தி சேனல்களில் பதிவு செய்யப் பட்டது.
வங்கதேசத்தில் பெட்டிங் என்பது சட்ட விரோதம். ஆனால், சர்வதேச அளவில் பெட் கட்டி சூதாட்டம் நடைபெறுவது சாதாரணமாகிவிட்டது. குறிப்பாக, பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டிகளில் பெட்டிங் தூள் பறக்கிறதாம்!



