சீமான் – கடந்த வாரம் மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ கொடுத்த பேட்டிக்குப் பின்னர், இணையதளங்களில் அதிகம் அடிபடும் பெயராக மாறியிருக்கிறது. தன் பெயரை சமூகத்தில் எடுபடச் செய்வதற்காக இதுவரை பொய்களைப் பரப்பி வந்தவராக சாடுகிறது இணைய சமூகம்! பொய்கள் நீண்ட காலம் நிலைக்காது என்று கருத்திடுகிறார்கள் சமூக ஊடகங்களில்!
சமூக ஊடகம் மட்டுமல்ல, உலகம் முழுதும் உள்ள தமிழர்கள் மத்தியில் தனக்கென ஓர் இடத்தை கடந்த எட்டு ஆண்டுகளில் வளர்த்து வந்த சீமான், இப்போது வைகோ.,வால் சிக்கித் தவிக்கிறார். 2009 வரை ஒரு சாதாரண திரையுலக இயக்குனராகத் திகழ்ந்தார் சீமான். அந்த ஒரு காரணத்தாலேயே விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்திப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது சீமானுக்கு. அதன் பின்னும் அமைதியாக இருந்த சீமான், இலங்கை அரசு அதிகாரபூர்வமாக விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாகவும், பிரபாகரனைக் கொன்றுவிட்டதாகவும், இலங்கையில் நடைபெற்ற யுத்தம் முடிவுக்கு வந்ததாகவும் அறிவித்த பின்னர், ஓர் ஆண்டு கடந்து நாம் தமிழர் எனும் ஓர் அமைப்பை உருவாக்கினார்.
முன்னர் தினத்தந்தி நாளிதழ் நிறுவுனர் ஆதித்தனாரால் உருவாக்கப்பட்ட அமைப்பினையே மீண்டும் தூசி தட்டி, அதே பெயரை வைத்து, அதே தினத்தந்தி நிறுவனத்தின் ஆதரவில் செய்திகளில் தலைகாட்டி, பின்னாளில் அதை ஒரு கட்சியாகவே மாற்றி, தேர்தல்களிலும் பங்கெடுக்கத் தொடங்கியிருக்கிறார். இத்தகைய பின்னணியில், துவக்க காலத்தில் மதிமுக., உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து நட்புறவுடன் வலம் வந்த சீமானுக்கு தற்போது மதிமுக., பொதுச் செயலர் வைகோ.,வின் வாசகத்தாலேயே வினை கூடியிருக்கிறது!
சீமான் அப்படி என்ன சொல்லிவிட்டார்… இப்போது மட்டும் அவருக்கு ஏன் இத்தனை வசவுகள்?
விடுதலைப் புலிகளின் பெயரைச் சொல்லி சீமான் எப்படி வளர்ந்தார் என்பதை அறிந்த அரசியல் நோக்கர்களுக்கு இது ஒன்றும் புதிய விஷயமல்ல! அண்மைக் காலமாக தமிழ்ச் செய்தி ஊடகங்களின் போட்டிகளுக்கு இடையே, அதீத கவர்ச்சிகரமான பேட்டிகளின் மூலம் உலக நாடுகளுக்கு, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை தான் ஏதோ நெருக்கமாக இருந்து பார்த்தது போலும், ஆமைக்கறி சமைத்துக் கொடுத்தார்கள், கறி உண்டார், நெருக்கமாக பழகினார் என்றெல்லாம் சீமான் சொன்னதுதான் பலரின் புருவங்களை உயர்த்தியிருக்கிறது! வழக்கம் போல், பொய்களையே உண்மை என்று நம்பி கொடி பிடிக்கும் தமிழ் இளைஞர் கூட்டம் ஒன்று, சீமானைப் பார்த்து வாய் பிளர்ந்து நிற்க, இன்னொரு தரப்பு இளைஞர் சமுதாயமோ, கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறது!
அப்படி ஓர் இளைஞர் பதிவு செய்த கருத்துப் பதிவுதான்… இது!
சைமன் என்கிற சீமான் … இலங்கைக்கு எப்படி போனோம்… மீசை எல்லாம் எடுத்துட்டு … ராத்திரி எல்லாம் பயணம் செய்து.. எங்க கூட்டிட்டுப் போறோம்னே தெரியாம ரகசியமா கூட்டிட்டுப் போயி… என்றெல்லாம் கதை அளந்ததை நாங்க டிவி.,ல பார்த்தோம்.
நீங்க முன்பு ஒரு சினிமா இயக்குனரா இருந்தீங்க இல்லையா…? அதான் உங்களுக்கு நல்லாவே கதை சொல்லத் தெரிஞ்சிருக்கு. உங்க கதைகளைக் கேட்டு உங்களுக்கு நல்ல புரொடியூசர் கிடைக்கலாம் ஆனால் நல்ல தொண்டர்கள் கிடைக்கணும்னா இந்த மாதிரி கதைகள்லாம் உதவாது.
2008 இல் நீங்க பிரபாகரனைப் போய் பார்த்தீங்க அப்டின்றது உண்மை. ஆனா, அதை எப்படி நீங்க பெரிய திரைக்கதையோட மிகப் பெரும் சினிமாவா மாத்தி இருக்கீங்கன்றதுதான் உங்க கற்பனை வளத்தைக் காட்டுது. ஆனா நீங்க உங்க கற்பனையில் எடுத்த சினிமாவை அப்படியே நிஜத்துல நடந்த மாதிரி கதை கட்டி வீட்டீங்களே… அதான் தாங்க முடியல!
அவங்க உங்களை தனியா கார்ல கூட்டிட்டுப் போனாங்க.. அதுவும் காரை உங்களுக்காக அனுப்பி… கார்ல உங்களை அப்படியே அமுக்கி… இரவு முழுக்க கார்ல போயி… அங்க பிரபாகரன் துப்பாக்கில்லாம் வெச்சிட்டு இருந்தாருன்னு பார்த்த மாதிரி … ஏங்க இப்படி… ஏங்க இப்படி..! இன்னிக்கு பிரபாகரன் உயிருடன் இல்லைன்றதுக்காக, என்னல்லாமோ நடந்தமாதிரி நீங்களா அவுத்து விடறீங்களே…!
நீங்க அன்னிக்கு பிரபாகரனை அந்த நிகழ்ச்சில சந்திச்சதே மொத்தம் 1.27 செகண்டுதான்! இதை வீடியோ எடுத்த வீடியோகிராஃபர் பேஸ்புக்ல 2011லயே தெளிவா எழுதியிருக்காரு.
நீங்க மட்டும் பிரபாகரனை சந்திக்கப் போகல… பாரதிராஜா போயிருக்காரு.. மகேந்திரன் போயிருக்காரு…
நல்லா பாத்தீங்கன்னா.. 2008 துவக்கத்துல கலை பண்பாட்டுக் குழு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி அது. அந்த நிகழ்ச்சி ஏன் நடத்தினாங்கன்னா… அப்போ விடுதலைப் புலிகள் மேல ஒரு கெட்ட பேரு உலகம் முழுக்க இருந்துச்சு. அந்த கெட்ட பேர மாத்துறதுக்காக, நல்லா பிரபலமா இருக்கற கலைஞர்களை கூட்டிட்டு வந்து, அவங்ககிட்ட நம்ம தரப்பு விளக்கத்த சொல்லுவோம். அவங்க நம்ம பத்தி உலகம் முழுக்க ப்ரமோட் பண்ணுவாங்க அப்டின்ற ஒரே காரணத்துக்காக, விடுதலைப் புலிகள் அதைச் செய்தாங்க.
ஆனா.. நடந்தது என்ன? நீங்க அந்த நேரத்துல அவங்களை ப்ரமோட் பண்றதுக்கு பதிலா.. உங்களை நீங்க ப்ரமோட் பண்ணியிருக்கீங்க! 2009ல இறுதி யுத்தம் நடந்த காலம் வரைக்கும், நீங்க இதப் பத்தி ஏதாவது சொல்லியிருக்கீங்களா? பிரபாகரன் உயிரிழந்துவிட்டார்னு தெரிஞ்சதும் நீங்க தைரியமா வெளில உங்களை நீங்க ப்ரமோட் பண்ண ஆரமிச்சீட்டீங்க!
கருணாநிதிய துரோகின்னு சொல்ற நீங்க யாரு சீமான் நீங்க யாரு? கருணாநிதிக்காவது 2ஜி’ன்னு ஒரு விஷயம் இருந்துச்சு. அவரு பொண்ணு கனிமொழிய காப்பாத்துறதுக்காக அவரு இத மாதிரில்லாம் பண்ணாரு. சரி.. விடுங்க… ஆனா நீங்க ஏன் இந்த மாதிரி கதையெல்லாம் விடுறீங்க?! உங்க உள்நோக்கம் என்ன?
– என்று கேள்விகளை எழுப்புகின்றது ஒரு கூட்டம்! இன்னொரு தரப்போ, பிரபாகரனை சீமான் அவமதிக்கிறார், அவரது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியிருக்கிறார் என்றெல்லாம் பாய்கிறது.
எல்லாவற்றுக்கும் காரணம், வைகோ., போட்டுக் கொடுத்த அந்தப் பேட்டிதான்! வைகோவின் அந்தப் பேட்டி..யில், சீமான் உலகில் உள்ள ஈழ ஆதரவாளர்களிடம் பிரபாகரன் பெயரைச் சொல்லி வசூல் செய்கிறார் என்று குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.
வைகோ.,வின் பேட்டி… : பல ஆண்டுகளாக நான் பொறுமையாக இருக்கிறேன். நான், ‘தமிழன் அல்ல. தெலுங்கன்’ என்றும் ஈரோடு ராமசாமி நாயக்கர் பையன் என்று அனைத்து மேடைகளில் சீமான் பேசி வருகிறார்.
நான் இதையெல்லாம் சகித்துக் கொண்டே இருந்தேன். பெரியாரை தாக்கிப் பேசுவது பெரியாருக்காக அல்ல. உங்களை தாக்குவதற்காக என, சினிமாத் துறையினர் என்னிடம் தெரிவித்தனர். கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக இதுகுறித்து வெளியில் பேசுவது இல்லை. என்னை வைத்து சமூக ஊடகங்களில் ‘மீம்ஸ்’ போடுவதற்கு கணக்கே கிடையாது.
ஸ்டெர்லைட் குறித்து என்னை களங்கப்படுத்தி ‘மீம்ஸ்’ போட்டிருந்தார். தீக்குளித்து இறந்த தொண்டர் கொதித்துப் போய் பதில் போட்டிருந்தார். ‘நம் தலைவரை இப்படியெல்லாம் இழிவு படுத்துகிறார்களே. என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை,’ என தீக்குளிப்பதற்கு மூன்று தினங்களுக்கு முன், தோழர்களிடம் கூறியிருக்கிறார். இதெல்லாம் என் மனதில் இருந்தது.
அதுமட்டுமல்ல ‘நியூட்ரினோவின்’ அம்பரப்பர் மலையில் சென்று, 50 பேரை நிறுத்தி நாங்கள் போராட்டம் நடத்துகிறோம் என கூறுகிறார். விடுதலை புலிகளின் சின்னத்தை தன்னுடைய கொடியாக்கி, பிரபாகரனுடன் தான் பல நாட்கள் தங்கியதாகவும், வேட்டைக்கு சென்றதாகவும், ஆமைக்கறி தின்றதாகவும், ‘கோயபல்ஸ்’ கூட சொல்ல முடியாத பொய்களைச் சீமான் கூறுகிறார்.
இவரை, எட்டு நிமிடங்கள் தான் பார்க்க பிரபாகரன் அனுமதித்தார். புகைப்படத்தை கிராபிக்ஸ் செய்து தற்போது பயன்படுத்துகிறார். புலிகள் சீருடை அணிந்து உங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என சீமான் கேட்ட போது, உங்களுக்கு அனுமதி கிடையாது என பிரபாகரன் கூறிவிட்டார்.
நான் புலிகள் சீருடையுடன் அந்த காட்டில் சென்று ஒரு மாதம் இருந்தவன். உண்மையில் ஆயுத பயிற்சியை பிரபாகரனிடம் பெற்றவன். நூலிழையில் உயிர் பிழைத்து வந்தவன். ‘அண்ணன் வை. கோபால்சாமியின் தியாகத்தை நினைக்கும்போது நூறு முறை நான் இறக்கலாம்’ என தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, பிரபாகரன் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அந்த விபரங்கள் அடங்கிய 4 பக்க கடிதத்தை 27 ஆண்டுகள் கழித்து திருச்சி மாநாட்டில் வெளியிட்டேன்.
உலக நாடுகளில் எல்லாம் பிரபாகரன் பெயரைச் சொல்லி வசூலில் இறங்குவதால் ஐயநாதன் உள்ளிட்டவர்கள் அந்த அமைப்பை விட்டு வெளியில் வந்து விட்டார்கள்.
நெஞ்சை நிமித்தி கூப்பாடு போடும் போது உண்மையென்று மக்களும், அந்த அமைப்பை சேர்ந்தவர்களும் நினைக்கிறார்கள். இத்தனை நாள் சகித்துக் கொண்டு இருந்தேன். தற்போது சிறிது நாட்களாக பதிவேற்றுகிற ‘மீம்ஸ் ‘என்னை மக்களிடம் ‘டமேஜ்’ செய்கிறது. அதை படிப்பவர்கள் இது உண்மையாக இருக்குமோ. வைகோ அந்த மாதிரி ஏதாவது செய்திருப்பாரா என, நினைக்கின்றனர்.
‘ஸ்டெர்லைட் டீல் முடிந்தது. இப்போது நியூட்ரினோவுக்கு கிளம்பிட்டான்” என கடைசியாக மீம்ஸ் வெளியிட்டுள்ளார். சீமான் தம்பி ஆறுமுகம் என்ற பெயரோடு அந்த மீம்ஸ் சமூக ஊடகங்களில் உலா வருகிறது. வாழ்க்கையில் பழிகளை சுமந்தே பழக்கப்பட்டவன் நான். என் கண் அசைவில் உயிர்கொடுக்க ஒரு லட்சம் பேர் தயாராக இருக்கிறார்கள். நான், மதயானைகளை மட்டுமே எதிர்த்து போராடுபவன். குள்ளநரிகளை எதிர்த்து போராடுகிறவன் அல்ல என்றார் வைகோ.
வைகோ அளித்த பேட்டியின் காணொளி…
ஆனால், சீமான் வன்னிக்குச் சென்றது உண்மை, பிரபாகரனைப் பார்த்தது உண்மை, விடுதலைப் புலிகள் மற்ற தமிழகத்து நண்பர்கள் எல்லாரையும் விட சீமான் பேரில் நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்று கருத்தை முன்வைக்கிறார்கள் ஈழத்தில் இருந்து இயங்கும் சில இணைய இதழாளர்கள்!
இரு ஒருபுறம் இருக்க, இப்போது சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினரும் அரசியல் ரீதியாக மோதிக் கொண்டு வருவதால், சீமானை நிறுத்தி வைத்துக் கேள்வி கேட்கும் உரிமையுடன் ஒரு தரப்பு இந்தக் கேள்விகளை எழுப்புகிறது.!
சீமான் பிரபாகரனைப் பார்த்து 28 கிலோ ஆமை கறியும், நண்டு கறியும்,இறால் வறுவலும் வெச்சு விருந்து சாப்பிட்டது 2008 இல் அப்டின்னு சொல்றார்.
பிரபாகரன் 2009 மே மாதம் கொல்லப்படுகிறார். 2008 இல் அநேகமாக போர் உச்ச கட்டத்தில் இருந்த நேரம். 2008 கடைசி 2009 தொடக்கத்தில் 40 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள்.
ஈழத் தமிழனும் தமிழச்சியும் கொத்துக் கொத்தாகக் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் 6 வகையான இறால், நண்டு, மீன்,ஆமை என முனியாண்டி விலாஸ் ஹோட்டல் மாதிரி விதவிதமாக சமைத்து சாப்பிட்டு கொண்டிருந்திருப்பார்களா என்ன?
தன் சொந்த மக்கள் கொத்துக் கொத்தாக செத்து கொண்டிருக்கும் போது விதவிதமாக சமைத்துத் தின்று கொண்டிருக்கும் அளவு பிரபாகரன் கொடூரமான ஆளா என்ன?
யப்பா சீமான் நீ சொல்றதுல லாஜிக் ரொம்ப இடிக்குதேப்பா.
வைகோ சொல்வது உண்மையா ? அல்லது செத்துப் போற மக்களைப் பற்றி கவலைப் படாமல் பிரபாகரன் ஆமைக் கறியும் நண்டுக் கறியும் வைத்து விருந்து சாப்பிட்டது உண்மையா?
இதில்… இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும் – என்று கூறும் சிலர், வைகோ.,வின் ஆதங்கத்துக்கு அர்த்தம் சேர்க்கிறார்கள்!
ஆனாலும் வைகோ உள்ளிட்ட அரசியல்வாதிகளே கடைசிக் கட்டத்தில் தங்களைக் கைவிட்டார்கள் என்றும், சீமான் தங்களுக்காக தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார் என்றும், அதனால் அவரை புலிகள் நம்பினார்கள் என்றும் சீமான் ஆதரவாளர்களான ஈழத் தமிழ் இணைய எழுத்தாளர்கள் கருத்திட்டு வருகிறார்கள். வன்னியில் மட்டுமல்ல, கிளிநொச்சியிலும் சீமான் சிலரை சந்தித்தார். அப்போது அவர் பேசியவை, புலிகள் இயக்கத்தினருக்கே பிடிக்கவில்லை. ஒவ்வொருவராக அங்கிருந்து நகர்ந்தனர் என்று குறிப்பிடும் வி.சபேசன் எனும் எழுத்தாளர், “எந்த மேடையிலும் தான் கிளிநொச்சி சென்ற கதை பற்றி சீமான் மூச்சுக்கூட விடவில்லை. அன்றைய சூழ்நிலைகளில் அதை சொல்வது தனக்கு சட்டச் சிக்கலை கொண்டு வரும் என்று சீமான் அஞ்சினார்.” என்று குறிப்பிடுகிறார்.
எது எப்படியோ? நம் பார்வையில் பார்க்கப் போனால்… சைவ நெறியும் தமிழ் நெறியும் தழைத்த, தமிழர்கள் நாவில் தூய தமிழ் திருநடம் புரிந்து கொண்டிருக்கும் ஈழத்தில் இப்போது மிச்சம் மீதம் இருக்கும் தமிழர்கள் நிம்மதியாக வாழ வேண்டும்! தமிழக மண்ணில் இவர்கள் செய்யும் அரசியல், ஈழ மண்ணில் இருப்போரை எவ்விதத்திலும் பாதித்துவிடக் கூடாது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது!