தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதைக் கண்டித்து அமெரிக்காவின் மிஸ்ஸோரி நகர தமிழ்ச் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடியில் கடந்த 22ம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில், போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியாகினர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து அரசுக்கு கண்டனம் எழுந்து வரும் நிலையில், உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களும் தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இங்கிலாந்து, சவூதி அரேபியா, துபாய், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட பல பகுதிகளில் வாழும் தமிழர்களும் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தனியார் முதலாளிகளுக்காக, ஒரு மாநில அரசு தன் மக்களையே சுட்டுக்கொன்ற சம்பவம் உலக அரங்கில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் மிஸ்ஸோரி மாநிலம் செயின்ட் லூயிஸ் நகரில் 26 மே அன்று தமிழ் சங்கம் சார்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டைக் கண்டித்து தமிழக அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் புலம்பெயர் தமிழர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இப்போராட்டத்தில் ஏராளமான அமெரிக்க தமிழர்கள் கலந்துகொண்டு தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு கண்டனங்களை தெரிவித்தனர். அதோடு மக்கள் எதிர்க்கும் ஸ்டெர்லைட் போன்ற நிறுவங்கள் மற்றும் திட்டங்களுக்கு அரசு அனுமதி அளிக்கக்கூடாது போன்ற விவாதங்கள் நடைபெற்றது.



