இலங்கையில் பாடகி கொடூரக் கொலை; கத்திரிக் கோலால் கொன்ற கணவன் கைது!

இலங்கையில் பிரபல சிங்களப் பாடகி ப்ரியானி ஜெயசிங்க நேற்று கொடூரமான முறையில் கொலை செய்யப் பட்டுக் கிடந்தார். இந்தப் படுகொலைதொடர்பாக அவரது கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கையின் பிரபல சிங்கள பாடகி ப்ரியானி ஜெயசிங்க, நேற்று கத்திரிக்கோலால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார்.  இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் போது, அவரது கொலைக்கான காரணம் தெரியவந்ததாக போலீஸார் கூறினர்.

கொலை செய்யப்பட்டு உயிரிழந்த பாடகி ப்ரியானி ஜெயசிங்கவுக்கும், அவரது கணவருக்கும் இடையில் நீண்ட காலமாக கருத்துவேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு .ஏற்பட்டுள்ளது. பாணந்துர அருக்கொட பிரதேசத்திலுள்ள பாடகியின் வீட்டில் நேற்றிரவு 8.45 மணி அளவில் அவரது கணவரே கத்திரிக்கோலால் குத்தி மனைவியைக் கொலை செய்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்ட அந்தக் கணவரை போலீஸார் வலைவீசித் தேடிவந்தனர்.  இந்நிலையில், பனதுர ரயில் நிலையம் அருகே இன்று காலை அவரைக் கண்டு கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.  51 வயதான பாடகி ப்ரியானி ஜெயசிங்கவுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.