
மூட்டை மூட்டையாக அரசாங்கப் பணத்தை அள்ளிக் குவித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முன்னாள் பிரதமர் நஜீப்பின் திருவிளையாடல்களை நடுத்தெருவில் கடுமையாக விமர்சித்து, மக்கள் சக்தியிடம் பெரும் ஆதரவு பெற்று அண்மையத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் மலேசியாவின் பிரதமராக ஆகியிருப்பவர் மகாதீர் முகம்மது அவர்கள். 92 வயது மகாதீர் முன்பே பிரதமர் ஆகி, நிறைய ஆண்டு அனுபவித்தவர்.
ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே குற்றங்களை முன்னிறுத்தி அவர் நஜீப்பின் குரல் வளையைப் பிடித்த விதம் நுட்பமானது. பதவி ஏற்ற சில மணி நேரத்தில் , தப்பியோடவிருந்த குற்றவாளிகளை விமான நிலையத்தில்தடுத்து நிறுத்தியதும், வழக்குகளை முடுக்கிவிட்ட விதமும் மக்களால் பாராட்டப் படுபவை.
ஒரு காலத்தில் மகாதீரின் துணைப் பிரதமராக இருந்து, பின் ஓரினப் புணர்ச்சி குற்றத்தின் கீழ் மகாதீர்- நஜீப் ஆட்சியில் கடும் தண்டனை பெற்று அனுபவித்த மற்றொரு தலைவர் அன்வர் இப்ராஹிம். மகாதீரின் மகத்தான வெற்றிக்கு அன்வார் கட்சியின் முழு ஆதரவும் தரப்பட்டது.
பிரதமர் மகாதீர் பதவி ஏற்றதும், அன்வர் இப்ராஹிமை பேரரசரின் மன்னிப்புடன் விடுதலை செய்தார். மகாதீர் அமைச்சரவையில் அன்வர் அவர்களின் மனைவி இன்று துணைப் பிரதமர் பதவியில் உள்ளார். அன்வார் அவர்களின் மகள் இன்றைய அரசின் ஆதரவாளர்.

அனுபவ அரசியல்வாதியான மகாதீர், பதவியேற்ற அதே நாளில் பல அவசர முடிவுகளை எடுத்தது பலருக்கும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் தந்தது.
குறிப்பாக சிங்கப்பூரை இலக்காக்கி அவர் தொடுத்த அம்புகள் பலரைத் திகைக்க வைத்தது. சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையில் ஒப்பந்தமான நீண்ட துரித ரயில் திட்டத்தை பதவிக்கு வந்த ஒரு சில மணி நேரத்தில் ரத்து செய்தார்.
மலேசியாவிலிருந்து பெறும் சிங்கப்பூர் அன்றாடம் பெறும் தண்ணீருக்கு கட்டண உயர்வு என்றார். சிங்கப்பூரை வசை பாடும் அவரது மற்ற செயல்களும் சிங்கப்பூர் மக்களிடையே மட்டுமன்றி மலேசியாவிலும் ஏற இறங்கப் பார்க்கப்பட்டது. பிரதமர் மகதீருக்கு அதனால் ஏற்பட்ட பின்னடைவும் பின்னர் உணரப்பட்டிருக்கிறது..
சிறையிலிருந்து வெளி வந்த அன்வர் இப்ரஹிம் அவர்கள் மீண்டும் நாடாளு மன்ற உறுப்பினராகி, ஆட்சியில் அமரும் முயற்சியில் தற்போது இறங்கி யுள்ளார். அன்வாரின் ஒத்துழைப்பால் மீண்டும் பிரதமராகி இருக்கும் மகாதீர் அவர்கள் அவரை ஆதரித்து வெற்றி பெறச் செய்வது தார்மீகமாகிறது. அப்படித் தேர்வு பெற்று வந்தால், அன்னாருக்கு ஆட்சியில் இடம் தந்தாக வேண்டிய அவசியமும் பின் தொடருகிறது. இரு ஆண்டு்களில் பிரதமர் பதவி என்கிற வாக்குறுதியும் இருக்கிறது.
முன்னாள் பிரதமர் நஜீப்பை முடக்கிப் பிடித்து சட்ட நெருக்கடிக்குள் எளிதாகக் கொண்டு வந்திருக்கும் இன்றைய ஆட்சி , தேர்தல் காலத்தில் வாக்களித்த சலுகைகளை மக்களுக்குத் தரும் நிலையில் இல்லை என்பதை வெளிப்படையாக சொல்லத் தொடங்கி விட்டது.
அதற்கு ஒரே காரணம், முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் முதலை முழுங்கல் என்று அரசு கூறுகிறது. மலேசியாவின் பொருளாதரப் பலவீனமும் அவ்வப்போது சுட்டிக் காட்டப்படுகிறது.
இதற்கு இடையில் தான் ஆட்சித் திறன் படைத்த அன்வார் இப்ராஹிமின் மறு வருகை முயற்சிகள்! இதன் பின்னர் ஏற்பட்ட சில மாற்றங்கள் சிங்கப்பூர்-மலேசிய உறவில் புதிய துளிர்களைக் காண வழி விட்டிருக்கிறது.
அவசர அவசரமாக எடுக்கப்பட்ட சிங்கப்பூர்-மலேசிய ரயில் திட்ட ரத்து உத்திரவு மீட்டுக் கொள்ளப்பட்டு, மீண்டும் சிக்கனமான முறையில் அதனை செயலாக்கும் வழி முறைகளை மலேசிய அரசு ஆராய ஒப்புக் கொண்டது. சிங்கப்பூருக்கான தண்ணீர் விலையில் முரட்டுத் தனமான விலை ஏற்றத்தை செய்த மகாதீர்அரசின் முடிவு மீண்டும் பரிசீலிக்கப்படுகிறது.
இதுபற்றிய விவகாரங்களில் சிங்கப்பூர் அரசு தன் முடிவுகளைத் திட்டவட்டமாக அவ்வப்போது அறிவித்து , மலேசியாவின் அவசர முடிவுகளின் விளைவுகளைத் தெளிவாக உணர்த்தியது.
ரயில் ஒப்பந்தம் ரத்தானால், அதன் தொடர்பில் எற்படவிருக்கும் தவிர்க்க முடியாத சட்ட விளைவுகளை ஒளிவு மறைவின்றி நினைவுபடுத்தியது. அதன் விளைவாகவே பல அமைச்சர்களின் பரஸ்பர வருகைகளும், விளக்கங்களும் இரு நாடுகளிலும் இடம் பெற்றன.
தலைவர் அன்வார் சென்ற வாரம் சிங்கைக்கு நேரில் வந்து சிங்கப்பூருடனான ஒற்றுமை உணர்வின் அவசியத்தையும் நல்லுணர்வுகளையும் வெளிப்படுத்தினார். ரயில் ஒப்பந்தம் இரு நாடுகளின் பொருளாதரங்களை அனுசரித்து செயலாக்கப்படும் என உணர்த்தப்பட்டது.
பில்லியன்களை விழுங்கி வைக்க இடம் தெரியாமல் தவியாய்த் தவித்த நஜீப் தலைமையிலான அம்னோ 60 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தற்காலிகமாகத் தனித்து விடப்பட்டிருக்கிறது உண்மை.
ஆனால் மலேசிய அரசியலில் அம்னோவின் அடையாளம் என்றுமே தவிர்க்க முடியாதது. நஜீப்பின் ஆட்கள் முற்றாக விலக்கப்பட்டு மீண்டும் அம்னோ எழும்போது மலேசிய அரசியலில் மீண்டும் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவைகளாக இருக்கலாம்.
-ஏ.பி.ராமன், சிங்கப்பூர்



