புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது துபாயில் 63 மாடி கட்டடத்தில் தீ விபத்து

துபாயில் உள்ள மிக உயரமான கட்டடமான பர்ஜ் கலீஃபா 63 அடுக்கு மாடி கட்டடம் உள்ள பகுதியில் நட்சத்திர விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உலகின் மிக உயரமான கட்டடமான பர்ஜ் கலிஃபா அருகே உள்ள தி அட்ரெஸ் என்ற நட்சத்திர விடுதியில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. துபாய் நேரப்படி இரவு 9.30 மணிக்கு இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

63 தளங்கள் கொண்ட அந்தக் கட்டடத்தின் 20வது தளத்தில் ஏற்பட்ட தீ, விடுதியின் அனைத்து தளங்களுக்கும் பரவியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. உடனே, அங்கு தீயணைப்பு வண்டிகள் விரைந்து தீயை கட்டுப்படுத்த முயன்றன. அங்கிருந்தவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும், 16 பேருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டதாகவும், ஒருவர் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும், அங்கிருந்துவ் வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வெடிக்கப்பட்ட, வாணவேடிக்கை பட்டாசிலிருந்து வந்த தீப்பொறியின் காரணமாக தீ பற்றியிருக்கலாம் என துபாய் போலீசார் கருதுகின்றனர். தீ குபுகுபுவென எரிவது குறித்து அறிந்த மக்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் அந்த பகுதியில் உள்ள அனைத்து விடுதிகளும் மூடப்பட்டது.