துப்பாக்கி கலாச்சாரம் குறித்த உரை: கண்கலங்கிய ஒபாமா!

வாஷிங்டன்:

அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கிக் கலாசாரம் மற்றும் அதன் மூலமான வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பான உரையினை அந்நாட்டு அதிபர் ஒபாமா நிகழ்த்தினார். அப்போது அவர், உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.

அமெரிக்காவில் சமீப காலமாக பெருகிவரும் துப்பாக்கி கலாச்சாரத்தால் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அங்கு துப்பாக்கி விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், துப்பாக்கி வன்முறையை குறைப்பது தொடர்பாக அதிபர் ஒபாமா, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர், ”துப்பாக்கி கலாச்சாரத்தை குறைப்பதற்காக அவசரமாக செயல்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம். 3 ஆண்டுகளுக்கு முன்பு 20 பள்ளி குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்டதை நினைக்கும்போது எனக்கு பைத்தியம் பிடிப்பது போல் உள்ளது” என்றார். அப்போது, உணர்ச்சிவசப்பட்ட அவரது கண்களில் இருந்து  கண்ணீர் பெருகியது. பின்னர் கண்களைத் துடைத்துக் கொண்டு தொடர்ந்த பேசிய அவர், ”இதற்குப் பிறகும் காரணங்களைக் கூறி சமாளிக்கக் கூடாது. துப்பாக்கிகளைத் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் அதிபர்கள் வேண்டுமானால், அரசியல்வாதிகளை கைக்குள் வைத்திருக்கலாம். ஆனால், அவர்களால் அமெரிக்காவைக் கட்டுப்படுத்த முடியாது” என்றார்.