700 அகதிகளுடன் படகு மூழ்கியது: லிபியாவில் சோகம்

boatdeath ஐரோப்பாவுக்கு சட்ட விரோதமாக 700 அகதிகளை ஏற்றிச் சென்ற படகு, லிபியா அருகே மத்தியத் தரைக்கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதுவரை 24 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 28 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் இத்தாலி மற்றும் மால்டா நாடுகளின் கடற்படை தீவிரமாக ஈடுபடுத்தப் பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து இத்தாலி நாட்டு கடற்படை வெளியிட்ட அறிக்கையில், “லிபியாவின் வடக்கு கடற்பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு சனிக்கிழமை இரவு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. விபத்துக்கு உள்ளான நேரத்தில், படகில் இருந்தவர்கள், அவ்வழியே சென்ற போர்ச்சுகல் நாட்டின் கப்பலில் இருந்தவர்களிடம் உதவி கோருவதற்காக, படகின் ஒரே பகுதியில் திரண்டனர். அதனால் அது மேலும் விபரீதமாகி, கவிழ்ந்தது. இந்த விபத்தில் இதுவரை 28 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், விபத்து நடந்த கடற்பகுதிக்கு அருகே உள்ள மால்டா நாட்டு பிரதமர் ஜோசப் மஸ்கட், “50 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்’ என்று தெரிவித்தார். இத்தாலியின் லாம்ப்துசா தீவில் இருந்து 193 கி.மீ. தொலைவிலும், லிபியாவின் கடற்பகுதியில் இருந்து 96 கி.மீ., தொலைவிலும் படகு விபத்துக்குள்ளாகியுள்ளது. அதில் பயணம் செய்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது சரியாகத் தெரியவில்லை. ஐரோப்பாவில் குடியேறும் எண்ணத்துடன் ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் அந்தப் படகில் சட்ட விரோதமாகச் சென்றதாகத் தெரிகிறது. இதே பகுதியில்தான் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் 2 படகுகள் விபத்துக்குள்ளானது. அப்போது, 450 பேர் பலியாயினர். இந்த ஆண்டுத் துவக்கத்தில் இருந்து இதுவரை லிபியா, இத்தாலி நாடுகளுக்கு இடையிலான கடற்பகுதியில் ஏற்பட்ட படகு விபத்துகளில் மட்டும், 1,500 அகதிகள் வரை பலியாகியுள்ளனர்.