இலங்கையில் தொடர்குண்டு வெடிப்பை நடத்திய இரு இஸ்லாமிய இயக்கங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாத்ஏ மில்லாது இப்ராஹிம் என இரு இயக்கங்களுக்கு இலங்கை அரசு தடைவித்துள்ளது.
கொழும்பில் கிறிஸ்துவர்களின் புனித நாளான ஈஸ்டர் தினத்தில், கடந்த ஏப்.21ஆம் தேதி கிறிஸ்துவர்களைக் குறிவைத்து சர்ச்சுகள் உள்ளிட்ட எட்டு இடங்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.
இஸ்லாமிய பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததனர். இதை அடுத்து இலங்கையில் உள்ள இஸ்லாமிய பயங்கரவாதிகள், இஸ்லாமிக் ஸ்டேட் எனும் ஐ.எஸ். பயங்கரவாத தொடர்பு கொண்டவர்கள் என பலரையும் குறி வைத்து, இலங்கை போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர்.
இலங்கையில் ஊரடங்கு உத்தரவு உடனடியாகப் பிறப்பிக்கப் பட்டது. தொடர்ந்து, அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப் பட்டு, தாக்குதலுக்கு காரணமானவர்கள், அவர்களது இயக்கங்கள் தொடர்பாக இலங்கை அரசு விசாரித்தது. உளவுத் தகவல் கிடைத்தும், பாதுகாப்பில் கோட்டை விட்டதற்காக பாதுகாப்பு செயலர், காவல் உயர் அதிகாரிகள் என சிலரை பதவி நீக்கம் செய்தது இலங்கை அரசு.
இதை அடுத்து, இந்த குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியவர்கள் என அடையாளம் காணப் பட்ட அமைப்புகளான தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாத்தெ மில்லாது இப்ராஹிம் இயக்கங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது இலங்கை அரசு.




