ஏற்கெனவே நாங்க கண்டுபிடிச்சிட்டோம்… அது பற்றி அப்பவே வெப்சைட்லயும் போட்டுட்டோம்: சிவன்

இந்தியா சற்றுமுன் தொழில்நுட்பம்
isro sivan - 2026

நிலவில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரை இஸ்ரோவின் ஆர்பிட்டர் முன்பே கண்டுபிடித்து விட்டது என்றும், தாங்கள் கண்டுபிடித்தது குறித்த தகவலை இஸ்ரோ இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிட்டு விட்டோம் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

நிலவில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரை மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஆய்வு செய்து கண்டறிந்து குறிப்பிட்டதாக நேற்று பரபரப்பான செய்தி வெளியானது. இதனை நாசா உறுதிப் படுத்தி, ஆமாம் என்று ஒப்புக் கொண்டதாகவும், அந்த இளைஞருக்கு மெயில் அனுப்பி, அதனை அறிவித்ததாகவும் செய்திகள் வெளியாயின. இந்நிலையில், இந்த ஆய்வு மூலம் நாசா கண்டுபிடித்து அறிவிக்கும் முன்பே, இஸ்ரோ கண்டறிந்துவிட்டதாக, அதன் தலைவர் சிவன் கூறியிருக்கிறார்.

கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி விக்ரம் லேண்டர் நிலவில் மெதுவான தரையிறக்கத்துக்கு முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து நிலவின் மேற்பரப்பில் வேகமாக மோதி சேதமடைந்தது. இருப்பினும், சந்திரயான் 2 விண்கலம் மூலமாக செலுத்தப்பட்ட ஆர்பிட்டரில் உள்ள கேமரா மூலம் விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க இஸ்ரோ ஆய்வு மேற்கொண்டது.

அதுபோல், கடந்த 2009ஆம் ஆண்டு அனுப்பிய தனது ஆர்ப்பிட்டர் மூலமாக நாசா விண்வெளி நிறுவனமும் விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முயன்று வந்தது. ஆயினும், வெளிச்சம் குறைவு காரணமாக இரு ஆர்பிட்டர்களும் அனுப்பிய படங்கள் தெளிவற்று இருந்ததால் உடனே விக்ரம் லேண்டர் குறித்து தகவல் பெற இயலவில்லை.

இந்நிலையில் நிலவில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரின் பாகங்களை, நாசா எடுத்த புகைப்படங்கள் மூலம் கண்டறிந்ததாக தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளர் குறித்த தகவல் வெளியானது. இதனை நாசா உறுதிப் படுத்தி மின்னஞ்சல் அனுப்பியது.

இந்தப் பரபரப்பு அடங்கும் முன், இது குறித்துப் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், விக்ரம் லேண்டரை சந்திரயான் 2 ஆர்பிட்டர் மூலமாக ஏற்கெனவே நாம் கண்டுபிடித்துவிட்டோம். நாசாவின் அறிவிப்பு புதிது அல்ல! கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி டுவிட்டர் பக்கத்திலும், இஸ்ரோ இணையதளத்திலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது! யார் வேண்டுமானாலும் அதனைக் காணலாம் என்று கூறினார் சிவன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.