பெண்களின் நிறம் குறித்த கருத்து: சரத் யாதவ் வருத்தம்

இந்தியா

புது தில்லி: பெண்களின் நிறம் குறித்த தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார் சரத் யாதவ். மேலும், அமைச்சர் ஸ்மிருதி இரானி தொடர்பாகத் தான் தெரிவித்த கருத்துக்கும் நேற்று மாநிலங்களவையில் வருத்தம் தெரிவித்தார் சரத் யாதவ். காப்பீடு மசோதா தொடர்பான விவாதத்தின் போது, ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், தென் இந்தியாவில் வாழும் பெண்கள் கறுப்பு நிறத்தவர்கள். ஆயினும் அழகானவர்கள். எனினும் ஆண்களுக்கு வெள்ளைத் தோலின்மீது ஏக்கம் உண்டு என்று குறிப்பிட்டார். இதற்கு, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கும் சரத் யாதவ் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்பிரச்சினை குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அவையில் எழுப்பினார். அவர் பேசும்போது, “சரத் யாதவின் கருத்துகள் அவைக்குறிப்பில் இடம்பெறாத நிலையிலும், ஊடகங்களில் பல்வேறு விதமாக வெளியாகின்றன. இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர் விளக்கமளிக்க வேண்டும்” என்றார். அதற்கு பதிலளித்த சரத் யாதவ், “இதற்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். நான் தாய் வழிச் சமூகமான கோண்டு பழங்குடியின பின்புலத்திலிருந்து வந்தவன். பெண்களை மதிக்கிறேன். நமது வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் மிகச் சிறந்தவர். ஸ்மிருதி இரானியை மதிக்கிறேன். அவரின் கல்வித் தகுதி குறித்த கேள்வி எழுந்த போது முதலில் ஆதரவுக் குரல் எழுப்பியவன் நான்தான். அவரை நான் மதிக்கிறேன்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.