இந்த ஆண்டும் ‘விடியல்’ இல்லை! முக்கியக் கோவில்களில் பக்தர் தரிசனத்துக்கு தடை!

அடடே... அப்படியா? ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் சென்னை மதுரை லைஃப் ஸ்டைல்
ban on temple darshan
ban on temple darshan

இந்த ஆண்டும் கொரோனா விதிமுறைகளைக் காரணம் காட்டி, விடியல் அரசின் உத்தரவாக, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மூன்று நாட்கள் பக்தர்கள் வர தடை விதிக்கப் படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேலும், ஆடி மாதத்தை முன்னிட்டு, தமிழகத்தின் முக்கிய கோயில்களில் வரும் 2ஆம் தேதி முதல், 9ஆம் தேதி வரையில் பக்தர்கள் நேரடியாக சென்று தரிசனம் செய்வதற்கு தடை விதித்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளன.

தற்போது, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 9 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகம் காவல் துறையுடன் இணைந்து கட்டுப்பாடுகளை கடுமையாக்கலாம் என்று நேற்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனால், சென்னையில் இன்று முதல் வரும் 9ஆம் தேதி வரையில் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், அங்காடிகள் என குறிப்பிட்ட ஒன்பது இடங்களுக்கு சென்னை மாநகராட்சி தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகங்கள், 3-வது கோவிட் அலையை கட்டுப்படுத்தும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தின.

இந்த ஆலோசனைக்குப் பின்னர், மதுரையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர்கோவில், பழமுதிர்ட்சோலை முருகன் கோயில் ஆகியவற்றில் பக்தர்கள் தரிசனம் செய்ய வரும் 2ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை தடை விதிக்க முடிவு செய்யப் பட்டது.

ஆடி மாதத்தை முன்னிட்டு சென்னையில் வடபழனி முருகன் கோயில், கந்தக்கோட்டம் கந்தசாமி கோயில், சூளை அங்காள பரமேஸ்வரி கோயில், பாடி படவேட்டம்மன் கோயில் மற்றும் அம்மன் கோயில்களில் பக்தர்கள் நேரடியாக தரிசனம் செய்வதற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன.

கொரோனாவைக் கட்டுப்படுத்தவும், மக்கள் கூடுவதை கட்டுப்படுத்தவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், வழக்கமான பூஜைகள் ஆகம விதிப்படி பக்தர்கள் இன்றி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.