ஸ்வாமி கூரத்தாழ்வான் வைபவம்

ஆன்மிகக் கட்டுரைகள் ஆன்மிகச் செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்வாமி கூரத்தாழ்வான் வைபவம்

இன்று முதல் மூன்று நாள்கள், ஸ்வாமி கூரத்தாழ்வான் திருநக்ஷத்ரம் (5-2-2018 அன்று) வரவிருப்பதை முன்னிட்டு, அவருடைய வைபவத்தை சிந்தை செய்வோம்.

*தனியன்
ஸ்ரீவத்ஸசிஹ்நமிச்ரேப்யோ நம உக்திமதீமஹே|
யதுக்தயஸ் த்ரயீகண்டே யாந்தி மங்களஸூத்ரதாம்||

“பெருமாள் கோயில்” என்று அழைக்கப்படும் காஞ்சீபுரத்துக்கு வடமேற்கே சுமார் பத்து மைல் தொலைவில் உள்ள கூரம் என்னும் திவ்யக்ஷேத்ரத்தில், அனந்தர் என்கிற கூரத்தாழ்வார்க்கும், பெருந்தேவி நாயகியார்க்கும் திருக்குமாரராய், ஒரு ஸௌம்ய வருஷம், தை மாதம் ஹஸ்த நக்ஷத்ரத்தில் திருவவதரித்தார் ஸ்வாமி கூரத்தாழ்வான்.

இவர்க்கு ஸ்ரீவத்ஸாங்கர் என்று திருநாமம் இட்டனர் பெரியோர். ஸ்வாமி ராமாநுஜர் திருவவதரிப்பதற்கு எட்டு ஆண்டுகள் முன்னமே திருவவதரித்தார் ஸ்வாமி கூரத்தாழ்வான். ஆதிசேஷன் ராமாநுஜராக அவதரித்தபோது, அவ்வெம்பெருமானே கூரத்தாழ்வானாக அவதரித்தார் என்பர் பெரியோர்.

ஸ்ரீவத்ஸாங்கர், சகல சாஸ்த்ரங்களையும் கற்றுத் தேர்ந்து, கூரமாநகர்க்கு அதிபதியாய் விளங்கினார். உரிய காலத்தில் ஆண்டாள் என்பவரைத் திருக்கல்யாணம் செய்துகொண்ட இவர், நாள்தோறும் தம் திருமாளிகையில் நிறைய பேருக்கு “அன்னதானம்” செய்துவந்தார்.

மிகுந்த செல்வச் செழிப்போடே கூடியிருந்தாலும், கொஞ்சம் கூட செருக்கு இல்லாதவராக விளங்கினார்.  இவர் திருமாளிகையின் கதவுகளில் பெருத்த ஓசையை எழுப்பக்கூடிய மணிகள் பொருத்தப்பட்டிருக்கும்.

தினந்தோறும், காஞ்சியில் தேவப்பெருமாள் திருக்கோயில் திருக்காப்பு சாத்தப்பட்ட பின் தான் இவர் திருமாளிகைக் கதவுகள் சாத்தப்படும். ஒருநாள் வரதன் சன்னிதிக் கதவுகள் சாத்தப்படும் முன்பே இவர் திருமாளிகைக் கதவுகள் சாத்தப்பட்டன. அப்போது அதிலே உள்ள மணிகளின் ஒலி, வரதன் திருச்செவிகளில் கேட்டது!

கூரத்தில் ஒலித்த மணியோசை வரதன் திருச்செவிகளில் கேட்டது என்றால் ஸ்ரீவத்ஸாங்கருடைய செல்வச்செழிப்பு எப்பேர்பட்டது? இந்த செல்வச்செழிப்பை வரதான் தானே கொண்டாடி மகிழ்ந்தான். மறுநாள் திருக்கச்சி நம்பிகள் ஸ்ரீவத்ஸாங்கரிடம் வந்து, வரதன் முன்னாள் இரவில் தம் செல்வச்செழிப்பைக் கொண்டாடினான் என்றார்.

அது கேட்டு திடுக்கிட்ட ஸ்ரீவத்ஸாங்கர், இது நம் ஸ்வரூபத்துக்கு சேராது என்று முடிவுசெய்து, அப்போதே தம் செல்வத்தைப் பலருக்கும் தானம் செய்து, தம் தேவிகளோடு காஞ்சியை வந்தடைந்து, ராமாநுஜரை ஆச்ரயித்தனர்.

ராமாநுஜர் இருவருக்கும் பஞ்சஸம்ஸ்காரங்களைப் பண்ணியருளினார்.
இவ்வாறு ஸ்ரீவத்ஸாங்கர் ராமாநுஜருக்குப் பண்ணிய கைங்கர்யங்களைத் தொடர்ந்து அனுபவிப்போம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

அடியேன்

திருக்கோவலூர் ஸுதர்சந ராமாநுஜதாஸன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.