கொள்ளை அடிக்க போலீஸையே துணைக்கு அழைத்து வந்த ‘பலே’ ஆசாமி; ‘திரு திரு’ வென விழிக்கும் போலீஸ்

சற்றுமுன் சென்னை தமிழகம்

சென்னை:
கொள்ளை அடிக்கவும் நோட்டம் பார்க்கவும், போலீசாரையே நம்ப வைத்து துணைக்கு அழைத்து வந்த பலே ஆசாமி குறித்து இப்போது போலீஸார் வட்டத்தில் பரபரப்பாகப் பேசப் படுகிறது.

நேற்று ஜெ.தீபா வீட்டுக்கு வருமான வரி சோதனை என்று கூறிக் கொண்டு மித்தேஷ் குமார் என்பவர் வந்துள்ளார். அவருக்கும் தீபாவின் கணவர் மாதவனுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், மாம்பலம் உதவி ஆணையர் செல்வம் வந்து விசாரித்த போது, அந்த நபர் நைஸாக வீட்டின் சுவர் ஏறிக் குதித்து, தயாராக இருந்த ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், இது குறித்து சுவாரஸ்யமான தகவல் வெளியானது. மித்தேஷ்குமார் போலீஸ் பாதுகாப்புடன் அங்கே வந்ததுதான் ஆச்சரியமான தகவல்.

சனிக்கிழமை காலை 5.40 மணி அளவில் மாம்பலம் உதவி ஆணையர் செல்வத்தை இளைஞர் மித்தேஷ்குமார், 3 பேருடன் சென்று சந்தித்தாராம். அப்போது அவர், தாங்கள் தில்லியில் இருந்து வந்துள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் என்றும், தீபா வீட்டில் சோதனை நடத்த போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் கூறினாராம்.

இதை அடுத்து, ஒரு காரில் மித்தேஷ்குமார் மற்றும் 3 பேரும் வந்ததாகவும், அவர்களைப் பின்தொடர்ந்து உதவி ஆணையர், காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் 4 காவலர்கள் தீபா வீட்டுக்கு பின்தொடர்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படி, தீபா வீட்டில் நோட்டம் விட போலீஸாரையே ஒரு இளைஞர் ஏமாற்றி அழைத்து வந்ததுள்ளார் என்பதும், தாங்கள் போலி என்று தெரியவந்தபோது, போலீஸாரின் பிடியில் சிக்காமல் தப்பிச் சென்றுள்ளார் என்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அசடு வழிந்துள்ள மாம்பலம் போலீஸார், தங்களின் உயர் அதிகாரிகளுக்கு இந்தச் சம்பவம் குறித்து பதில் சொல்ல வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

அண்மைக் காலமாக, தமிழகத்தில் உள்ள ஆளும் கட்சிப் பிரமுகர்கள், அரசியல்வாதிகள் குறித்து அடிக்கடி முறைகேடுப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால், வருமான வரி சோதனைகள் நடத்தப் பட்டு பரபரப்பு நிலவியது. இதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு, வருமான வரி அதிகாரிகள் என்ற போர்வையில் ஒரு கும்பல் இது போன்ற முறைகேடுகளில் இறங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தால் போலீஸாரின் மானம் கப்பலேறியுள்ளது என்பதை விட, வருமான வரி சோதனை என்றால் என்ன நடைமுறைகளை காவல் துறையினர் பின்பற்ற வேண்டும் என்பதையும் தெளிவாக வகுத்துக் கொண்டால் இது போன்று ஏமாறும் சூழ்நிலைகள் போலீஸாருக்கு ஏற்படாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.